சந்திரிகாவின் பிரபாகரன் சேர் விளிப்பும்! தமிழர்களின் உணர்வுபூர்வ மட்டுப்படுத்தலும்!!

  • Prem
  • November 12, 2019
146shares

இலங்கைத் தீவின் வரலாற்றில் சிறிலங்காவின் முதன்மைத்தலையாரிகளை தெரிவு செய்வதற்கு 7 முறைகள் தேர்தல் களங்கள் இடம்பெற்றுவிட்டன. ஆயினும் இதுவரை இடம்பெற்ற தலையாரிகளின் தெரிவுக்குரிய தேர்தல் களங்களைவிட இந்த முறை நடைபெறவுள்ள தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, ஒரு ஆடுகளம் என்பதை ஐயத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த தேர்தலானது ஆட்சியிலுள்ள முதன்மைத்தலையாரியொருவர், அதேபோல பதவியிலுள்ள பிரதமர் ,மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என அதிகாரத்தில் உள்ள முக்கிய தலைகள் எவருமே களம் இறங்காத ஒரு தேர்தல் இது.

இவ்வாறாக புதிய புதிய பதிவுகளை கொண்டிருப்பதால் இந்த களத்தின் பரப்புரைகள் நாளை நள்ளிரவுடன் ஓய்வுக்குவருவதற்கு முன்னர் பரபரப்பான சில விடயங்களும் வருகின்றன. அந்த வகையில் கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை குறித்த சர்ச்சை பரப்புரைக்களத்தின் முன்னரங்குக்கு மீண்டும் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் கோட்டாவுக்கு கொஞ்சம் சப்போட் வழங்கிக்கொள்கின்றதோ என எண்ணக்கூடிய வகையில் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத்தூதரகம் அறிக்கையிட்டுள்ளது.

அதாகப்பட்டது கோட்டாபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை துறந்திருந்தாலும் அது குறித்த அறிவித்தல் சமஷ்டிபதிவாளர் பணியகத்தில் இருந்து சட்டுப்புட்டென வராது. அவ்வாறு அந்த அறிவிப்பு வரசிலமாதங்கள் ஆகும் என தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே தொலைக்காட்சி செவ்வியொன்றில் பங்கெடுத்த கோட்டாபாயவும் ரத்துச்செய்யப்பட்ட தனது அமெரிக்க கடவுச்சீட்டையும் குடியுரிமையை துறக்கப்பட்டமைக்கான ஆவணம் ஒன்றை கமராவுக்குக்காட்டினார்.

ஆகமொத்தம் அமெரிக்ககுடியுரிமை நீக்கப்பட்டவர்கள் குறித்து அமெரிக்காவில் வெளியான புதிய ஆவண பட்டியலிலும் கோட்டாபாயவின் பெயர் இடம்பிடித்திருக்காத நிலையில், கோட்டாபாயவின் அமெரிக்க குடியுரிமை மீளெடுக்கப்படவில்லையென யானைகள் முகாமில் இருந்து ஹரின் பெர்ணான்டோ ஏவிய இந்த அஸ்திரம் இப்போது அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளிப்பட்ட ஒரு பதில் ஊடாகவும் கோட்டாபாய கமராவுக்கு காட்டும் சில ஆவணங்கள் ஊடாக முனை மழுங்கடிக்கப்ட்டுள்ளது.

கோட்டாபாய உட்பட்ட ராஜபக்ச அதிகாரமையத்தின் மீது தமிழினத்தின் மீதான பெரும்உதிரப்பழிஅப்பியுள்ளது என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது. அதேபோல அவ்வாறான உதிரப்பழிக்கு அந்தஅதிகார மையம் பொறுப்புக் கூறவும் வேண்டும்.

அதாவது கோட்டாபாய உட்பட்ட ராஜபக்ச அதிகார மையத்தின் மீது தமிழினம் கொண்ட வெறுப்பு இன்னமும் உயிர்ப்புடன்தான் உள்ளது. ஆனால் ராஜபக்ச அதிகார மையத்தின் மீது இவ்வாறான ஒரு யதார்த்தம் இருக்கின்றது என்பதற்காக எதிர்தரப்பை புனிதர்களாக்கக்கூடிய உணர்வுபூர்வ அரசியலை ஈழத்தமிழினம் கண்மூடிக்கொண்டு செய்யமுடியாது.

இந்த தேர்தல் களத்தை உணர்வுபூர்வமாக கையாள்வதைவிட அறிவு ரீதியாக அணுகிக்கொள்வது முக்கியம். ராஜபக்சஅதிகார மையம் குறித்து ஆ ஊ எனக்கத்தி அந்த குரல்களின் ஊடாக சஜித் அல்லது ஏனைய வேட்பாளர்களிடம் தர்க்க வினாக்களை எழுப்புவதற்காக வாய்ப்புக்களை கிரகணப்படுத்திக்கொள்வது அபத்தமானது.

ஒரு நாற்சதுர மேடையில் ஏறி ராஜபக்சஅதிகார மையத்தை திட்டித்தீர்த்த பின்னர் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கோரி கூட்டத்தை முடிப்பது தமிழனத்தின் எதிர்காலத்துக்கு எவ்வளவு தூரம் உதவிக்கொள்ளக்கூடும்?

2015 ஆரம்பத்தில் நல்லபிசாசு கெட்ட பிசாசு தெரிவுகளுடன் மைத்திரி குறித்து இவ்வாறு தான் கூறப்பட்டது. அதன்பின்னர் நல்லாட்சி எனவும்சொல்லபட்டது. ஆனால் தனது ஆட்சியை அடுத்தவாரத்துடன் நிறைவுசெய்யும் மைத்திரியை பாருங்கள் ஒரு கொடும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலையாளியை எந்தவிதகூச்சநாச்சமும் இன்றி அவர் விடுதலைசெய்திருக்கிறார்.

காரணத்தைக்கேட்டால் மரண தண்டனை பெற்றவர், சிறைச்சாலையில் தனது பட்டப்படிப்கை நிறைவு செய்தார். சிறந்தகல்வியாளரா தென்பட்டார் இதனால் பொதுமன்னிப்பை வழங்கினேன் என்கிறார்.

ஆனால் தாயையும் இழந்து ஆதரவற்று நிற்கும் குழந்தைகள் ஆனந்தசுதாகரன் என்ற தமது அரசியல்கைதி தந்தையை விடுதலையாக்குமாறு கோரி எத்தனை தரம் இதே மைத்திரிக்கு கடிதம் எழுதியிருப்பார்கள்?

இப்போது இந்த பொதுமன்னிப்பு குறித்து வினா எழுப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரியால் கொலை குற்றவாளியொருவரை விடுதலை செய்ய முடியுமாயின், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது போனது என கேள்வி எழுப்பியுள்ளது.

ஆகையால் இன்று சஜித்துக்கு ஆதரவு வழங்கும் கூட்டமைப்பு இதேபோன்ற வினாவை நாளை அவரிடமும் கேட்கும்நிலைமை எழுந்தால் இதனூடக தமிழ்மக்களுக்கு கிட்டக்கூடிய அடைவுயாது?

இதேபோல தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சேர் என விளித்து சிறிலங்காவின் முன்னாள் தலையாரிணி சந்திரிக்கா நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கிய உரை குறித்து பல சிலாகிப்புகள் வருகின்றன.

தான் அரசதலைவராக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன் என்கிறார்.

தான் ஆட்சியில் இருந்த காலத்தில மொத்தமாக 42 கடிதங்கள் எழுதினேன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன் என்றார்

2004 டிசம்பரில் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டிருந்த போது நாம் புலிகளுடன் இணைந்து மக்களை மீட்டு அத்தியாவசிய உதவிகளை வழங்கியிருந்தோம் என்றார். ஆனால் அப்போதைய ஐ.நா செயலாளரை தமிழர்களின் ஆழிப்பேரலை அனர்த்த பகுதிகளை பார்வையிட முடியாமல் காய்வெட்டிய கதைகளையும் சூரியக்கதிரை ஏவிய துன்பியல்களும் அவர் கச்சித்தமாக மறைத்துவிட்டார்

ஆகமொத்தம் சிறிலங்காவின் தற்போதைய தேர்தல்களத்தை தமிழர்கள் உணர்வுபூர்வமாக மட்டும் கையாளப்போகின்றார்கள் என்பதை துல்லியமாக அறிந்துகொள்வதால் பிரபாகரனை சேர் என்ற தூண்டிலை சந்திரிகா வீசிவிட்டார்

இனியென்ன இந்த சேர் கதையும் தமிழர்கள் இந்த தேர்தல் களத்தை அறிவு ரீதியாக அணுகும்வரை உணர்வுபூர்வமாக கையாளவும் மேலும் வாய்ப்பளிக்கவும் கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?