தமிழர்களின் 2015 போர்மிலாவுக்கு வீழ்ச்சியா? நீட்சியா? உறைநிலைக்கு போவது சஜித்தா? கோட்டாவா?

  • Prem
  • November 15, 2019
460shares

இலங்கைத்தீவின் அரசியல்தடத்தில் கிழநரி ‘குள்ளநரி’ என்றும், ‘யங்கி டிக்கி’ என்றும் விளிப்புக்களை பெற்றவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா. அவ்வாறானவிளிப்புக்குரிய ஜே.ஆர் 1978 இல் சிறிலங்காவின் அரசியலமைப்பில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தைச் செய்தார்.

அன்று தான் அறிமுகப்படுத்திய அந்த அரசியலமைப்பின் ஊடாக புகுத்தப்பட்ட ஒரு தேர்தல்முறையில் வாக்களிக்க 41 வருடங்கள் கழித்து 2019 நவம்பர் 16 என்ற தினத்தில் இலங்கைத்தீவின் வாக்காளப்பெருமக்கள் வரிசையில் நிற்கக்கூடும் என அன்று ஜே.ஆர் நினைத்திருப்பாரோ தெரியவில்லை.

ஆனால் தமிழினத்துக்கு பல பாதகங்களை அரசியல் மற்றும் ராணுவ செய்த அதே ஜேயாருக்கு ஆன்மா என ஒன்றிருந்து அது மேலேயிருந்து நாளை கீழேபார்த்தால் அந்த ஆன்மா இலங்கையில்இந்த நிலையை காணக்கூடும்.

ஆகமொத்தம் நாளைய வாக்களிப்பின் ஊடாக சிலவேளைகளில் சஜித் மேற்பார்த்த ரணில் குழாமின் நல்லாட்சி அடையாளம் வீழ்ச்சிக்கு உள்ளாகலாம்.

இல்லையென்றதால் சஜித்தின் வெற்றி ஊடாக அது நீட்சிக்கும் உள்ளாகலாம். அதுபோல இலங்கையில் கடந்த 5 வருடங்களாக முடக்கபட்ட மகிந்தஅதிகாரமையமும் கோட்டாபாயவின் வருகை ஊடாக சிலிர்த்துக்கொள்ளலாம். இல்லையென்றால் மீண்டும் உறைநிலைக்குச் செல்லாம்.

ஆனால் இரண்டு தெரிவுகளில் எது இடம்பெற்றாலும் அது இலங்கைத்தீவில் மிதமானது முதல் பலமானது வரையான அதிர்வுகளை ஏற்படுத்தவேசெய்யும்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை வரலாற்றில் தேர்தல் அடிதடிகள் குறைவாக பதிவுசெய்யப்பட்ட உயிர்ப்பலிகள் ஒன்று கூட பதிவாகாத தேர்தல்களம் என்ற பதிவை இந்தத்தேர்தல் பெற்றுவிட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் திருப்தி கொள்கிறது. இதில் ஒரு ஆதாரம் இருக்கக்கூடும் ஏனெனில் கடந்த முறை யாழ்ப்பாணத்தில் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது இதே தேர்தல் காலப்பகுதியில் நடந்ததைபோல கல்லெறி சம்பவங்களும் இல்லை

அதேபோல கடந்த முறை ஐ.நா பொதுச்செயலாளர் நாயகமாக இருந்த பான்கீமூன் விடுத்த மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யவேண்டும் என்பதாக அவசர கோரிக்கைகளும் இல்லை.

ஆயினும் இறுதிநேரத்தில் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி வெளியான பொய் புரளி குண்டணி வதந்திகளுக்கு மட்டும் குறைவு இல்லை.

இதனடிப்படையில் கோட்டாபயவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் எனத்தெரிவித்து சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவினால் மைத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டதான கடிதம் ஒன்றின் பிரதி முதல்

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பரபரப்பாக கூறிய விடயம் என்பதான காணொளி வரை சமூக ஊடகங்களை அதகளப்படுத்தியது.

இதனையடுத்து இவை போலியானவை என்பதாக அமெரிக்க தூரகமும் சிறிலங்கா காவற்துறை தலைமையகம் அவசரஅறிவிப்புகளை விட்டன. இதற்கும் மேலாக மக்களே நம்பாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழுவும், தேர்தல் கண்காணிப்பாளர்களும் மக்களிடம் கோரிக்கையும் விடுத்தனர்.

ஆகமொத்தம் இலங்கை வரலாற்றில் தேர்தல் அடிதடிகள் குறைவாக பதிவுசெய்யப்பட்ட என்ற பதிவுதேர்தல் முடிவுகள் வந்தபின்னரும் நீடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சாமானியர்களின் பிரார்த்தனையாக இருக்கக்கூடும்.

அசாதாரணமான வகையில் இந்தமுறை அதிக வேட்பாளர்களை கொண்ட வாக்குச்சீட்டை வாக்காளர்கள் ஏற இறங்கப்பார்த்து புள்ளடி இடுவதற்காக வாக்களிப்புக்குரிய நேரமும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத்தேர்தல்களத்தில் கடந்த புதன் நள்ளிரவு முதல் பரப்புரைகள் ஏதுமற்ற 48 மணிநேர மௌனகாலம்நீடித்துவருகிறது. ஏன் இந்த48 மணிநேர மௌனகாலம் வழங்கப்படுகின்றது? தொழினுட்பரீதியாக இதற்கு கூறப்படும்காரணம் யாது?

அதாவது வாக்காளர் ஒருவர் வேட்பாளர்கள் குறித்து தனக்கு வழங்கப்பட்டுள்ள சகல விபரங்களையும் அலசி ஆய்வுசெய்து தீர்மானம் ஒன்றை எடுக்க தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது

ஆனால் நாளை இடம்பெறக்கூடிய தேர்தல் ஆட்டத்தைப்பொறுத்தவரை இந்த 48 மணிநேரத்தை பயன்படுத்தித்தான் முடிவு எடுக்கவேண்டிய தேவை அநேகமான வாக்களர்களுக்கு இல்லையென்பதும் அவர்கள் ஏற்கனவே முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் தெரிவு என்னவாக இருக்குமென்பதையும் ஓரளவுக்கு ஊகிக்கமுடியும்.

கடந்தமுறையைப்போல மகிந்தவுக்கு எதிராக நின்ற மைத்திரியை வெற்றிபெறவைத்து மகிந்தவை வீழ்த்தவேண்டும் என்பதைபோல சஜித்தை வெற்றிபெறவைத்து கோட்டாபாயவை வீழ்த்துவதே தமிழர்களுக்குரிய சிறந்தஉபாயம் என இந்தமுறையும் சுமந்திரன் போன்றவர்களின் செய்தியாக கூறப்பட்டுள்ளது.

ஆயினும் கடந்த முறை போல இந்தமுறை குறித்த தொழினுட்பம் வேலைசெய்யுமா? என்பது முக்கியவினா.

இந்த உபாயம் வேலை செய்யாவிட்டால் தமிழ்தேசிய அரசியலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தீர்மானம் எடுக்கும் சக்தி கடுமையான கேள்விக்கு உள்ளாகும்.

சிறிலங்காவின் அரசியல் தடத்தைப்பொறுத்தவரை கொழும்பு அதிகாரமையத்தின் மீது கவிந்துள்ள தமிழர் அபிலாஷைகள் மீதான வெறுப்புவாதம் என்பது எப்போதுமே ஒரு பொன்முட்டையிடும் வாத்தைப்;போன்றது.

கொழும்பு அதிகாரமையம், தனது அரசியல் மேலாதிக்க நலன்களை பேணிக்கொள்வதற்கும் தேர்தல்வாக்குளை கவர்ந்துகொள்வதற்கும் இந்தவாத்து எப்போதுமே முட்டைபோட்டுக்கொள்ளும். இந்;தவாத்தை தடவிக்கொடுப்பதில் சஜித்துக்கும்; கோத்தாவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.

இதன் அடிப்படையில் சிங்களதேசத்தின் பொதுப்புத்தி திசைக்கு ஏற்ப வினையாற்றவேண்டிய பொறுப்பை சிறிலங்காவின் ஒரு அரசதலைவரும் சிரமேற்கொண்டு செய்தே தீருவார். இவ்வாறான ஒரு யதார்த்தம் இருந்தாலும் இந்தமுறைதேர்தல் களத்தில் தமிழபேசும் வாக்குகளால் கடந்தமுறையைபோல இந்தமுறையும் அன்னம் வெற்றி பெறவைக்கப்பட்டு கோட்டாபாய வீழ்த்தப்படுவாரா? இல்லை இந்ததந்ரோபாயம் முறியடிக்கபட்டு கடந்த 5 வருடங்களாக முடக்கபட்ட மகிந்த அதிகாரமையம் கோட்டாபாயவின் வருகை ஊடாக சிலிர்த்துக்கொள்ளுமா? தேர்தல் முடிவுகளை ஆர்வமாக நோக்கிக்கொள்ளும் வடக்குக்கும் தெற்குக்கும் கொஞ்சம் நகங்களை கடிக்கும் வேளைதான் இது!

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?