ராஜதந்திர ஒப்பந்தத்தை சிறிலங்கா மீறிவிட்டது! கொழும்பில் தூதரகஊழியர் கடத்தப்பட்டதால் சுவிஸ்சீற்றம்!!

72shares

இலங்கைத்தீவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து எவ்வாறான அச்சங்கள் எல்லாம் ஊகிக்கப்பட்டனவோ அவ்வாறான ஆட்டங்கள் எல்லாம் இடம்பெற ஆரம்பித்துவிட்டனவோ என ஐயப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன.

இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் பெரியண்ணணான இந்தியாவின் அழைப்பில் இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லிக்குச்சென்ற சிறிலங்காவின் முதன்மைத்தலையாரி கோட்டாபாயராஜபக்சவிடம் தாம் இலங்கைத்தீவில் வாஞ்சிக்க(?)கூடிய அமைதிகுறித்து டெல்லி இடித்துரைக்கக்கூடும்.

ஆயினும் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு உருட்டி மிரட்டப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் கட்டியம் கூறல் அச்சமூட்டத்தான் செய்கிறது.

இவ்வாறான அச்சங்களை களையவேண்டிய பொறுப்பு அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்ச மேற்பார்த்த மகிந்த அரசாங்கத்திடம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டு சற்றேறக்குறைய இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடயம் தற்போது கொழும்பு -பேர்ண் ராஜதந்திர வழித்தடத்தில் பரபரவென பற்றிப்பிடித்துள்ளது. இதேபோல அனைத்துலக ஊடகங்களிலும் இந்தவிடயம் பளிச்சிட்டுள்ளது.

இந்தவிடயத்தில் உடனடியாகவே கவனம் எடுத்த சிறிலங்காவுக்கான சுவிஸ்தூதர் ஹான்ஸ்பெத்தர் மொக் நேற்று சிறிலங்கா பிரதமர் மகிந்தராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்தனா ஆகியோரை அடுத்தடுத்து நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

இதேபோல சுவிற்சலாந்தில் உள்ள சிறிலங்கா தூதரகத்திடமும் பேர்ண் விளக்கம் கேட்டிருந்தது. பேர்ணிலுள்ள அந்த தூதரகத்தில் இப்போது நிரந்தர தூதர் இல்லை.

இதனால் தற்போது சுவிஸ் தூதரபணிகளையும் ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதர் கருணசேன ஹெட்டியாராட்சிதான் கவனித்துக்கொள்கிறார். இதனால் சுவிசின் அழைப்பை அடுத்து அவரும் அங்கு பறந்து நேரடி விளக்கத்தை வழங்கவேண்டியதாயிற்று.

ஆகமொத்தம், இந்தவிடயம் இலங்கைத்தீவில் பெரும் நம்பிக்கையுடன் சிங்கள வாக்காளர்களின் அதிக அங்கீகாரத்துடன் மீள்வருகையுற்றிருக்கும் ராஜபக்ச அதிகாரமையத்துக்கு பெரும்சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

இந்தால் விடயம் தொடர்பாக தமதுதரப்பில் தீவிரமான விசாரணைகள் இடம்பெறுவதாகவும். 1961 ஆம் ஆண்டில்உலகளாவிய அளவில் உருவாக்கபட்ட ViennaConvention on Diplomatic Relations எனப்படும் ராஜதந்திரஉறவுகள் குறித்த வியன்னா கடப்பாட்டை கடுமையாக மதிக்கும் தமது அரசாங்கம் கொழும்பில் பணியாற்றும் தூதரக ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என நைச்சியமாக கூறியுள்ளது.

ஆனால் சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான அதிகாரி அல்லது சீ.ஐ.டி என்ற அடையாளத்துக்குரியநிஷாந்த டி சில்வா அச்சம்காரணமாக தனது குடும்பத்துடன் கடந்த 24 ஆந்திகதி பிற்பகல் இலங்கையை விட்டு சுவிற்சலாந்துக்குப் பறந்தபின்னர் இந்தச்சம்பவம் இடம்பெற்றிருப்பதுதான் இங்கு முக்கியமான ஹைலைற்.

நிஷாந்த டி சில்வா சுவிசுக்கு பறந்த மறுநாளில்தான் குறித்த சுவிஸ் தூதரக பணியாளரும் கடத்தப்பட்டிருக்கிறார். அதாவது இந்தகடத்தலின் பின்னணியை தொழினுட்பரீதியாக நோக்கினால் சீ.ஐ.டி நிஷாந்த டி சில்வாவுக்கு எப்போது சுவிஸ் செல்வதற்குரிய விசாவுக்கு விண்ணப்பம் செய்தார்?

அவரைப்போலவே வேறு எந்தெந்தஅதிகாரிகள் எல்லாம் யாரெல்லாம் இலங்கையை துறந்து சுவிசுக்குப்பறக்க விசாவுக்குரிய விண்ணப்பம் செய்துள்ளனர்? என்பது போன்ற வினாக்களும் இவ்வாறான விபரங்களை கறப்பதற்காகவே சுவிஸ் தூதரகத்தின் விசாபிரிவில் முக்கிய பொறுப்பிலுள்ள குறித்த பெண் கடத்தப்பட்டிருக்கலாம் என்பது முதற்கட்டத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அரசாங்கம் முனகுவது போல> இது தமது அரசாங்கத்தை மாட்டிவைப்பதற்கான சதி என்ற வாதம் இருந்தால் அது இரண்டாம் பட்சமே.

குறித்த அதிகாரி தனது பணி முடிந்து வீடு திரும்பும் போது வெள்ளைவானம் ஒன்றில் முதலில் கடத்தப்பட்டுள்ளார். அதன்பின்னர் அந்தவாகனத்துக்குள் வைத்தே அவர் 2-3 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் உருட்டிமிரட்டப்பட்டிருக்கிறார்.

அவரது செல்லிடப்பேசியில் இருந்த சில தரவுகளும் அந்த நாசகாரிகளால் பிரதிசெய்யப்பட்டுள்ளன. சீ.ஐ.டி நிஷாந்த டி சில்வா போல வேறு எந்தெந்தஅதிகாரிகள் சுவிசில் அரசியல்தஞ்சம் கோருவதற்காக கொழும்பில் உள்ள தூதரகத்தை நாடியுள்ளனர் என்பதையறியும் வகையிலும் உருட்டல்மிரட்டல்கள் பிரயோகிப்பட்டதாகவும் அதன்பின்னர் அவரை வீதியோரத்தில் இறக்கிவிட்டு குறித்த வாகனம் பறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்குப்பின்னரே அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் என்ற பேரில் எழுநூறு புலனாய்வாளர்களின் பெயர்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வுபிரிவுக்கு பறந்துள்ளது.

சுவிசுக்கு பறந்த நிஷாந்த டி சில்வா ஓரளவு நீதியை நிலைநாட்ட முனைந்த குற்றப்புலனாய்வுத்துறையின் ஒரு அதிகாரி என்றவகையில் முன்னர் இடம்பெற்ற ஊடகர்களின் படுகொலைகள்-கடத்தல்கள்- சித்திரவதைகள் மற்றும் வெள்ளைவாகன கடத்தல்கள் உட்பட்ட சிலதுன்பியல் சம்பவங்களில் பக்கச்சார்பு இன்றிவிசாரணைகளை மேற்கொண்டதாக கருதப்படுபவர்.

இந்தச்சம்பவங்களில் அநேகமானவை காட்டாபய ராஜபக்ச அன்றையநாட்களில் பாதுகாப்புச்செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றவை.

ஆகையால் சுவிசில் தஞ்சம்கோரக்கூடிய நிஷாந்த டி சில்வா தன்னிடம் இருக்கக்கூடிய மனிதஉரிமைமீறல் தரவுகளை மேற்குலக மேலிடங்களுக்கு வழங்கிவிடுவார் என்ற அச்சத்தில்தான் இவ்வாறு தூதரகப்பணியாளர்களை கடத்தும் மாதனமுத்தா வேலைகள் இடம்பெறுகின்றன.

ஆனால் சிறிலங்காவின் முதன்மைத்தலையாரியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற இந்தவிடயத்தை சுவிஸ் அரசாங்கம் சிறிய விடயமாகக்கருதவில்லை என்பதும் ராஜபச்ச அதிகாரமையத்தின் புதிய ஆட்டத்தில் குடைச்சலை வழங்க அதுமுயல்வதுதான் இப்போதைக்கு பெரும் பாதகமாக விடயமாக மாறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க