ஆங் சான் சூச்சீயை போல மகிந்தவை ஹேக்கில் காணமுடியுமா?

  • Prem
  • December 12, 2019
35shares

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முன்வரிசையில் மியன்மாரின் நடைமுறைத்தலைவர் ஆங் சான் சூச்சி கடந்த 11 ஆந் திகதி இருந்த காட்சியைக்கண்டு ஈழத்தமிழினத்துக்கும் தாம் 2009 க்குப்பின்னர் காண விரும்பக்கூடிய ஒரு எதிர்காலக்காட்சி ஒன்று நிழலாடியிருக்கக்கூடும்.

ஆங் சான் சூச்சீ அனைத்துலக நீதிமன்ற அரங்கில் இருந்ததைப்போல தமிழினத்தின் மீதான உதிரப்பழிக்கு பொறுப்புக்கூறவேண்டிய கொழும்பு அதிகாரமுகங்களும் இதே அரங்கில் இருந்தபடி இருக்கும் காலம்வராதா? என ஈழத்தமிழர்கள் ஏங்கியிருக்கக்கூடும்.

ஆனால் மியான்மாரில் 2017 ஆம் ஆண்டில் இடமபெற்ற ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை மையப்படுத்தி இந்த நகாவு ஒன்றும் சுயம்புவாக இடம்பெறவில்லை

ஆபிரிக்க நாடான கம்பியா அனைத்துலக நீதிமன்றத்திடம் இது தொடர்பாக தொடுத்த வழக்கின் அடிப்படையில் ஆங் சான் சூச்சி இப்போது ஹேக் அரங்கில் தோன்றவேண்டிய ஒரு நிலைவந்திருந்து.

எனினும் இனப்படுகொலையை அல்லது இனச்சுத்திகரிப்பை செய்யக்கூடிய அனைத்து அதிகாரமையங்களும் கூறுவதைப்போலவே ரோஹிஞ்சாமுஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டை ஆங் சான் சூச்சி நிராகரிக்கத்தான் செய்திருந்தார்

ரொஹிஞ்சாக்கள் மீது 2017 இல் தொடுக்கப்பட்ட திட்டமிட்ட வன்முறைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு ஏழு இலட்சம் ரொஹிஞ்சா ஏதிலிகள் அயல்நாடான பங்களாதேசுக்குத் தப்பிச்சென்ற துன்பியல் யதார்த்தம் இருந்தாலும் ஆங் சான் சூச்சியிடமிருந்து இவ்வாறான ஒரு நிராகரிப்பும் மறுப்பும் வருமென்பது ஊகிக்கத்தக்கதே.

ஏனெனில் அனைத்துலகநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்தவழக்கில் மியான்மர் சார்பாக தானே முன்னிலையாகப்போவதாக அவர் நெதர்லாந்துக்கு புறப்படமுன்னரே அறிவித்து விட்டார்.

மியன்மாரின் நலனுக்காக மியான்மர்அரசாங்கமும், ராணுவமும் இணைந்தே இந்த வழக்கை சந்திக்கும் எனவும் அவர் சூளுரைத்திருந்தார்.

ஆயினும் ரோஹிஞ்சாமுஸ்லிம்கள் மீதான வன்முறைகள் இப்போது அனைத்துலக நீதிமன்ற அரங்கினால் விசாரிக்கப்படுவது முக்கியமான ஒரு நகர்வாக பதிவாகியிருப்பதை மறுக்கமுடியாது.

சிறிலங்காவைபோலவே பௌத்த மதத்தை ஒரு அரசியல் சக்தியாக கொண்டுள்ளநாடு மியான்மர், சிறிலங்காஅரசாங்கம் தமிழ்மக்கள் மீதான ராணுவநடவடிக்கைக்கு மனிதாபிமான நடவடிக்கை என காரணம் கூறுவதைப்போலவே ரோஹிஞ்சாக்களின் பகுதிகள் மீது பயங்கரவாதத்தை தடுப்பதற்காக ஒரு அவசியமான நடவடிக்கையே எடுக்கப்பட்டதாக மியன்மார் கூறுகிறது.

ஆகமொத்தம் ஆங் சான் சூச்சி மேற்பார்த்த மியன்மார் அரசாங்கம் தன்மீதான இந்த குற்றச்சாட்டை மறுப்பதற்காக இன்றும் சிலவருடங்களுக்கு ஹேக்குடன் இழுபட்டு செல்லவேண்டிய நிலைமைதான் உள்ளது.

இப்போது இலங்கைத்தீவின் விடயத்துக்குத்திரும்புங்கள் இவ்வாறான ஒரு எதிர்காலக்காட்சி தமது இனம் சார்ந்து எடுக்கப்படவேண்டும் என ஆர்வப்படும் ஈழத்தமிழினத்துக்கு இந்த இடத்தில் ஒரு முக்கியமான உபரிசெய்தி உண்டு.

அதாவது ரோஹிஞ்சாக்களுடன் எந்தவித நேரடியான தொடர்பையும் கொண்டிராத போதிலும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஆபிரிக்காவில் இருந்தாலும் முஸ்லிம்குடிப்பரம்பலை அதிகம் கொண்ட நாடான கம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தநகர்வை எடுத்திருக்கும் செய்தி இது

நம் கண் முன்னே ஓரு இனப்படுகொலை நடந்த போது நாம் அமைதி காத்தது நம் தலைமுறைக்கே தலைகுனிவான விடயமென கூறியபடி கம்பியாவின் நீதித்துறை அமைச்சர் எம் டம்பாடோ இந்த நகர்வை எடுத்தார்.

இப்போது தர்க்கரீதியில் இலங்கைத்தீவின் உள்ளுர்தமிழர்களோ அல்லது புலம் பெயர் தமிழர்களோ அனைவரும் தமது மனங்களில் ஒரேயொரு வினாவை மட்டும் எழுப்பிக்கொள்ளுங்கள்

ரோஹிஞ்சாக்களுக்கு கம்பியா குரல்கொடுப்பதைப்போலவே ஈழத்தமிழினமும் தமக்குஆதரவாக இன்னநாடு குரல் கொடுக்கும் எனக்கூறி ஒரு நாட்டையாவது இப்போது அடையாளமிட முடியுமா?

இலங்கைத்தீவின் உள்ளுர்தமிழர்களாக இருக்கட்டும் அல்லது புலம் பெயர் தமிழர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு இந்தவினாவுக்குவிடையளிப்பது மிகக்கடினமே! இலங்கைத்தீவின் பூகோளஅமைவிடமும் அதன் ராஜதந்திரதடமும் தமிழர்கள் இவ்வாறான ஒரு விடையை வழங்குவதை தடுத்துக்கொள்கின்றது.

தற்போதுகூட சிறிலங்காவின் ரேமினேற்றர் கோட்டாபாய உட்பட்ட ராஜபக்ஷ சகோதரயோக்களும் இந்தோ-சீன-அமெரிக்க மையங்கள் அனைத்துக்கும் கொடுப்பதை கொடுத்துவாக்குவதை வாங்கும்சாதகநிலைமைகளை கொண்டுள்ளனர்.

ஏதோ சுவிஸ் வி;டயத்தில் மட்டும் கொழும்புக்கு இப்போது ஒரு சறுக்கல் அவதானிக்கப்பட்டாலும் அதனையும் சமாளிக்கவே அது முனையும்

சிறிலங்காவின் முதன்மைத்தலையாரியாக ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டபின்னர். தமிழர்களுக்கு உண்மையில் சவாலான நிலைமை உருவாகிவிட்டது.

ஆயினும் இந்த சவாலான நிலையை மாற்றுவதற்கு தேவையான ஆகக்குறைந்த செயல்முறையை கையாள்வதில் அவர்களிடம் இதுவரை கொஞ்;சம் கூட ஏறுமுகமான ஒரு நிலைமை இல்லாதமையே பெரும் பலவீனமாகின்றது.

மறுபுறத்தே ரேமினேற்றரின் ஆட்சி நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகளின் அதிகரிப்பு தினசரி காட்சியாகிவிட்டது

முதலில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல்குணரத்ன, பாதுகாப்புச் செயலாளரானார். பின்னர் இன்னொரு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகமாக எகொடவெல, அரசதலைவர் செயலகத்தின் பிரதானியானார். இதற்கும் அப்பால் இப்போது லண்டன் கறுத்தறுப்பு சைகையாளர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக பதவியேற்றுவிட்டார். இன்னும் பல முன்னாள் படைய முகங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் இழுத்தெடுக்பட்டுள்ளனர்

இதற்கிடையே குடிசார் நிர்வாகத்துக்கு உதவும் வகையில், ஆயுதப்படைகளுக்குச் சிறப்பு வர்த்தமானி மூலம் அதிகாரங்களும் வழங்கப்பட்டுவிட்டன.

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கமா? சீச்சி அப்படியொன்றும் கிடையாது என்ற பல்லவியை கூறியபடியே நாடு ராணுவநிர்வாகமயமாகிறது.

ஆகையால் கூட்டிக்கழித்துப்பார்த்தால், ஆங் சான் சூச்சீயை அனைத்துலக நீதிமன்றத்தில் காணக்கூடிய ஒரு நிலைமையை போல தமிழினத்தின் மீதான உதிரப்பழிக்கு பொறுப்புக்கூறவேண்டிய கொழும்பு அதிகாரமுகங்களையும் அதேஅரங்கில் காணமுடிவது இப்போதைக்கு சாத்தியமற்ற ஒரு விடயமே!

அடபோங்கப்பா இது மட்டுமா சவால் ? 13 ஆம் திருத்தம் வழங்கும் அனைத்து உள்ளுடன்களையும் தமிழர்கள் பெற்றுக்கொள்வதும் ரேமினேற்றர் ஆட்சியில் பெரும் சவாலான நிலைதான்.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்