2020 புத்தாண்டும்! நப்பாசைக்கு கூட இல்லாதஅரசியல் தீர்வும்!!

  • Prem
  • December 31, 2019
44shares

உலகப்பந்து என விளிக்கப்படும் சமகால நவீனஉலகின் பெரும்பகுதி கிறகோரிய தினக்குறிப்பு அடையாளத்தின்படி புத்தாண்டு என்ற மகிழ்வான நிகழ்வில் மூழ்கியுள்ள நேரம்இது

இன்றைய டிசம்பர் 31 நள்ளிரவுக்குப்பின்னர் ஜனஸ் என்ற ரோமானியர்களின் இரட்டை முகக்கடவுளுக்குரிய முதல்நாள் ஜனஸ் ஆகிய ஜனவரி மாதமாக இலங்கைத்தீவு உட்பட்ட ஆசியபசுபிக்பிராந்தியத்தில் 20-20 எனப்படும் 2020 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.

வழமைபோலவே வாணவேடிக்கைகள் உட்பட்ட நானாவித கொண்டாட்டங்களுக்குரிய கோலாகல அடையாளங்களுடனும் ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் அன்ரனியோ குற்றர்ஸ் போன்றவர்களின் புத்தாண்டு செய்திகளுடனும் அதேபோல ஒஸ்ரேலியா போன்ற நாடுகளில் காட்டுத்தீகுறித்த கலக்கங்களுடனும் உலகப்புத்தாண்டு பிறந்துவிட்டது.

இலங்கைத்தீவைப்பொறுத்தவரை கடந்தஉயிர்த்தஞாயிறு கந்தகநாசகாரம் ஏற்படுத்திய அவல அனுபவத்தினால் கொழும்பு, காலிமுகத்திடல் போன்ற முக்கிய மையங்களில் ஏற்படுத்தப்பட்ட விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் புத்தாண்டு பிறந்தது

ஈழத்தமிழ்மக்களை பொறுத்தவரை ஜனவரிப்புத்தாண்டு சித்திரைப்புத்தாண்டு என புதியஆண்டு அடையாளங்கள் பிறக்கும்போது அவ்வாறாக பிறக்கும் ஆண்டுகள் புதிய வாழ்வையும் வளத்தையும் சமாதானத்தையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என வாழ்த்துகள் வெளிப்படுவது வழமை.

ஆனால் இற்றைக்கு பன்னிரெண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறாக ஒரு புத்தாண்டு 2019 ஆக பிறக்க இருந்தவேளையில் இரா. சம்பந்தன் பாணியில் பொங்கலுக்குள் அரசியல்தீர்வு தீபாவளிக்குள் புதிய அரசியல் அமைப்பு என ஒரு வாய்ச்சவடால் பேச்சுக்காவது சொல்லக்கூடிய நிலைமை இருந்தது.

கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இரண்டுநாட்கள் இருந்தபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய முகமான சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது ஊடக சந்திப்பை நடத்தியபோது ஒரு விடயத்தைக்கூறியிருந்தார்.

அதாவது 2018 ஒக்டோபரில் உருவாக்கப்பட்ட ஆட்சிக்குழப்பங்களின் போது ரணில் தரப்பை மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சிக்கொலுவேற்றியிருப்பதால் அதன் மீது தெற்கில் தற்போது ஒரு நல்லெண்ணம் உருவாகியிருப்தாகவும் அதன் ஊடாக புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திற்கு ஒரு சாதகமான நிலை தோற்றுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆதரவின் அடிப்படையில் புதிய அரசியலமைப்புக்குரிய நகல் வரைவு ஐக்கியதேசியக்கட்சி மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணி, மற்றும் ஜே.வி.பி போன்ற அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் 2019 இல் முன்வைக்கப்படுமெனவும் அன்று சுமந்திரன் 2019 பிறந்த புத்தாண்டுகாலத்தில் நம்பிக்....கை வைத்திருந்தார்.

ஆனால் அந்தோ பரிதாபம் இப்போது 2020 பிறந்துவிட்ட இந்தவேளையில் புதிய அரசியலமைப்பு என்ற ஒருபேசுபொருள் மருந்துக்குக்கூட இலங்கையில் இல்லை. அது எங்கேயோ கேட்ட குரலாகி நாட்களாகிவிட்டன.

ஒரு நப்பாசையில் கூட 2020 என்ற இந்த புதியஆண்டில் தமிழருக்கு அரசியல்தீர்வு கிட்டும் என ஆசிகூறமுடியாதவகையில் இலங்கைத்தீவில் ஒரு அரசியல் ரேமினேற்றரின் ஆட்சி ஒன்று இருப்பது முக்கியமான விடயமாக துருத்திக்கொண்டு நிற்கிறது.

இந்தஆட்சியின் ராசியினால் அரசமரத்தைப் பிடித்த சனி பிள்ளையாரை பிடித்ததுபோல் முன்னாள் அமைச்சர் ராஜிதவை பிடித்த ரேமினேற்றர் ராசி இப்போர் அவரது செயலாளர் எனகூறப்படும், சிறிலங்கா அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டையும் உள்ளே தள்ளிவிட்டது. வெள்ளை வாகனக்கடத்தல்கள் தொடர்பாக ராஜித நடத்திய ஊடகசந்திப்புடன் தொடர்பான விசாரணைகளுக்காகவே ரூமிக்கும் சிறிலங்கா குற்றப்புலனாய்வுத்திணைக்களம்; இன்று (31 12.19) தடுப்புகாவல் ரும் போடப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவைப்பொறுத்தவரை கடந்த ஒருவருடத்தில் தான் எத்தனை மாற்றங்கள்.

கொழும்பில் 11 தமிழர்களை கடத்திகாணாமல் ஆக்கிய குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சூத்திரதாரிக்கு அடைக்கலம் கொடுத்து, வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல உதவியதாக சுட்டுவிரல் நீட்டப்பட்டு கடந்தவருட இறுதியில் சிலநாட்கள் உள்ளேயிருந்த அதேஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன

இன்று சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற தகுதிநிலையில் தனது 39 வருடகால சேவையை நிறைவுசெய்து இன்றுடன் ஓய்வுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் அவரை மையப்படுத்தி இன்னமும் விடைகாணப்படவேண்டிய விடயங்கள் இருந்தாலும் தற்போதைய ரேமினேற்றரின் ஆட்சி இனிமேல் இவ்வாறான விடைகளுக்குரிய காலத்தை உருவாக்க நிச்சயமாகவே அனுமதிக்காது.

இதனை இன்னமும் வெளிப்படையாக கூறினால் இது கோட்டாபாய உட்பட்ட ராஜபக்ச முகங்களுக்கு பின்னால் வலுவாக உள்ள சிங்கள தேசியவாதத்துடன் தொடர்புடையவிடயமாக உள்ளது.

இதனால்தான் ராஜபக்ச சகோதரர்களின் அதிகாரத்தின் மீது மக்களுக்கு எதிர்ப்பு உருவாகாத வரை புதிய அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்க தயாராக இல்லையென ஜே.வி.பி ஆகிய மக்கள் விடுதலை முன்னணி யூ வடிவத்திருப்பம் எடுத்துள்ளது. இதனை ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் லால் காந்த வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்

அதாவது கடந்த நவம்பரில் ரேமினேற்றரின் எழுச்சிக்கு வித்திட்ட அதே மக்கள் சக்தி அதே அதிகாரமையத்துக்கு எதிராக குரல்கொடுக்கும் வரை தாம் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகளை நடத்தத்தயாராக இல்லையென குறிப்பிடுவதன் மூலம் சிங்கள மஹாஜனதாவின் நாடித்துடிப்பை ஜே.வி.பி கணக்கிட்டு நகர்வது தமிழ்மக்களுக்கும் ஒரு முக்கிய செய்தியாக கூறப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் இலங்கைத்தீவில் 2020 பிறந்தாலும் புலர்ந்தும் புலராத ஒரு அதிகாலைப்பொழுது இருப்பதைப்போலவே இப்போதைக்கு ராஜபக்ச சகோதரர்களின் அதிகார மையத்திடம் தமிழினம் பெறக்கூடிய அடைவுகள் மீது ஒரு புலராத பொழுது தான் தெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?