இலங்கை மாதாவே! தமிழர்களும் உன் சேய்களா?

  • Prem
  • February 04, 2020
125shares

ஆசியக்கண்ட நாடுகளில் முதன் முதலாக ஆண்பெண் என இருபாலாருக்கும் வாக்குரிமையை வழங்கிய நாடு. ஆசியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்த நாடு. உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்த நாடு. உலகிலேயே முதன் முதலாக வனவிலங்கு சரணாலயத்தை அமைத்த நாடு

உலகுக்கு உயர்தர தேயிலை மற்றும் உயர்தரமான வாசனைகொண்ட கறுவாவை ஏற்றுமதி செய்த நாடு என பட்டியல் இடும் அளவுக்கு சிறப்புகள்

பெருமைகள் கொண்ட இந்துசமுத்திரத்தின் முத்துக்கு... மரகதத்தீவுக்கு... புராதன பாரசீக வணிகர்கள் விளித்த செரண்டிப்புக்கு.. லத்தீன் மொழியூடாக ஐரோப்பியர்களால் அடையாளம் காணப்பட்ட சீலான் செய்லான் சிலோன் ஆகிய விளிப்புகள் கொண்ட அந்த அழகிய தீவுக்கு இன்று (பெப் 4) சுதந்திர தினமாம்.

பொதுவாகவே ஒரு நாட்டின் சுதந்திரதினம் அதன் ஒட்டுமொத்தக் குடி மக்களுக்கும் எவ்வளவு சிறப்பு. அந்த வகையில் இலங்கைத்தீவின் குடிமக்கள் அனைவருக்கும் இது உவப்புக்குரிய நாளாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 72 வருடங்களாக ஒவ்வொரு முறையும் பெப்ரவரி 4 என்ற இந்த அடையாளம் வரும்போது அதேதீவில் வாழும் இன்னொரு தேசிய இனத்திற்கு மட்டும் இந்தநாள் உவப்பான நாளாக இருந்ததேயில்லை.

இன்றைய 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வாயிலில் கட்டப்பட்டிருந்த கறுப்புகொடிகளும் பதாகைகளும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் அவவரஅவசரமாக அகற்றப்பட்டிருந்தாலும் கூட அன்றும் இன்றும் இந்த கரிநாள் கருத்தியல் இருக்கத்தான் செய்கிறது.

2020 சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் வாதிகள் மதில் மேல் பூனைகளாக இருந்தாலும் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்கும் படி கோரிக்கைவிடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; இந்த நாளில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

மறுபுறத்தே அந்ததீவில் அதிகளவு குடிப்பரம்பலைக்கொண்ட சிங்களமக்களுக்கு அன்றும் இன்றும் இந்ததினம் குறித்த பூரிப்பு இருக்கத்தான் செய்கிறது.

71 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திர இலங்கை சார்பாக சிறிலங்காவின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா தனது உரையை அன்றைய இலங்கை வானொலியில வழங்கியிருந்தார்.

இதனைக்கேட்டு அன்று பூரித்த சிங்கள மஹாஜனதாவுக்கும் இன்று சிறிலங்காவின் சுதந்திரசதுக்கத்தில் அதன் முதன்மைத்தலையாரியான கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய சுதந்திரதின உரையை கேட்ட சிங்கள மஹா ஜனதா மனங்களிலும் ஒரு பூரிப்பு இருந்திருக்கத்தான் கூடும்

இவ்வாறான பூரிப்பின் பின்னணியில் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வழமையான அணிவகுப்பு டமாரங்களுடன் 72ஆவது சுதந்திரதினம் கடந்தது.

ரேமினேற்றர் தனக்குரிய தனித்துவ சுதந்திரதின நிகழ்வுகளால் கொழும்பின் இயல்புநிலை அதிகம் பாதிப்படையாதவகையில் நகர்த்தியதையும் அவதானிக்க முடிந்தது.

100 மாணவர்கள் வரிசைகட்டி தேசியகீதத்தை பாடினாலும் எதிர்பார்க்கப்பட்டதைப்போல தேசிய நிகழ்வில் தமிழ் தேசிய கீதத்துக்கு இடமளிக்கப்படவில்லை.

எது எப்படியோ அன்றைய டி. எஸ். முதல் இன்று சிறிலங்காவின் எட்டாவது தலையாரியாக பங்கேற்ற ரேமினேற்றர் கோட்டாபயராஜபக்ஷ வரை தமிழர்கள் கண்டுகொண்ட சிறிலங்காவின் 13 ஆட்சிக்கொலுத்தலையாரிகளின் தடங்களில் என்னமாற்றம் இருக்கக்கூடும்? ஒருவேளை தமிழமக்களின் மனங்களை வென்ற ஒரு யுகப்புரட்சி அந்ததீவில் இடம்பெற்றிருந்தால் இன்று சுதந்திர இலங்கை என்ற பெப்ரவரி4 அடையாளத்தை தமிழர்களும் உவப்புடன் கொண்டாடியிருக்ககூடும்.

ஆனால் மறுபுறத்தே அந்தத்தீவை ஆட்சிசெய்யும் கொழும்பு அதிகாரமையத்திடமிருந்து ஆச்சல் ஆச்சலாக பல இனச்சங்காரங்களையும் பல துரோகங்களையும் ஒப்பந்தங்கள் அல்லது உடன்பாடுகளின் கிழித்தெறிப்புக்களையும் கண்ட இனமாக தமிழினம் இருந்தது.

இந்த எதிர்வினையின் அடிப்படையில் தனிநாடு கோருவதற்காக ஒரு பெரும் உதிரம் சிந்திய தியாகப்போராட்டத்தை நடத்தி சமகாலத்தில் தமிழ்அரசியல் வாதிகளால் கையறு நிலைக்கு தள்ளப்பட்ட இனமாகவும் தமிழினம் மாறியுள்ளது.

கொழும்பு அதிகாரமையத்தின் அதிகாரங்களையும் பௌத்தபுனிதங்களையும் கடுமையாக எதிர்வினைக்குள்ளாக்கிய அதே இனத்தில் இன்று தேர்தல் ஆதாயத்துக்கு அறிக்கைவிடக்கூடிய தமிழ்அரசியல்வாதிகள் மட்டுமே எஞ்சியுள்ளதும் இன்னொரு விடயம்

எது எப்படியோ இன்று சிறிலங்காவின் சுதந்திரதினத்தில் தனது உரையை வழங்கிய ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபக்ச, தனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் வழமைபோலவே இலங்கைத்தீவில் எந்நதவித தீவிரவாத அமைப்புக்கோ அல்லது அடிப்படைவாதத்துக்கோ இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையும் விட இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசு எனக்கூறிய ரேமினேற்றர் மேலும் தனக்குரிய தனித்துவமான முறையில் சில விடயங்களை சொல்லியிருந்தார்.

ஆனால் சிறிலங்காவின் சுதந்திர தினம் உண்மையில் இலங்கைத்தீவுக்கு உயரிய சமூகப்பெறுமானம் கொண்ட ஒரு நிகழ்வாக இருந்தால் இன்றைய சுதந்திர தினத்தை இலங்கையர்கள் என்ற அடையாளத்தில் உண்மையில் ஏன் தமிழ்மக்கள் கொண்டாடவில்லை?

72 ஆண்டுகால சுதந்திரம் என்ற அடையாளம் தமிழ்மக்களுக்கு வழங்கியது என்ன? இந்த வினாக்களுக்கும் கொழும்பு அதிகார மையம் மேற்பார்த்த தென்னிலங்கைதான் விடைதரவேண்டும்.

ஆகமொத்தம் 72 ஆண்டுகால சுதந்திரத்தை கொழும்பில் பெருவிழாவாக நடத்திய தென்பகுதிக்கு அதன் தரப்பில் ஒரு நியாயம் இருக்கக்கூடும்.

அதேபோல இதே 72 ஆண்டுகால சுதந்திரம் எமக்கு என்ன வழங்கியது? என்ற வினாவின் பின்னால் உள்ள நியாயத்துடன் துக்கித்துக்கொள்ளும் தமிழர் தரப்பிலும் ஒரு தார்மீக நியாயம் இருக்கத்தானே வேண்டும்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்