ஜெனிவா- சவேந்திரா... ரேமினேற்றரின் இரட்டை மூலதனங்கள்?

  • Prem
  • February 21, 2020
88shares

சந்தடி சாக்கில் கந்தப்போடிக்கும் காற்பணம் என்ற பழமொழியைப் போல ரேமினேற்றர் கோட்டாபாய மேற்பார்த்த ராஜபக்சக்களின் ஆட்சியில் தமக்குத்தமக்குரிய பெருந்தேசியவாத அஸ்திரங்களுடன் சகல தரப்புக்களும் கிளம்பிவிட்டன.

அந்தவகையில் கிளம்பிட்டாங்கைய்யா.. கிளம்பிட்டாங்க பாணியில் சிறிலங்காவின் தேசியபாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு என்ற ஒரு குவியமும் தனது தரப்பு பரிந்துரைகளுடன் தற்போது கிளம்பியுள்ளது.

Sectoral Oversight Committeeon National Security என்ற இந்த குவியமானது தற்போது இனங்கள் மற்றும் மதங்களை அடிப்படையாகக்கொண்;டுள்ள அரசியல்கட்சிகளை இல்லாது ஒழிப்பது புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடைசெய்வது போன்ற கோரிக்கைகளுடன் களம் இறங்கியுள்ளமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பகிரங்கப்பட்டது.

இலங்கைத்தீவில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறு குண்டுத் தாக்குதல் நாசகாரத்துக்குப்பின்னர் நாட்டிலுள்ள சமூகங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளை அடிப்படையாகக்கொண்டு தமது யோசனைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு என்ற இந்த கட்டமைப்பு குறிப்பிடுகிறது.

ஆனால் இந்த நகர்வின் நதிமூலமும் ரிஷிமூலமும் தமிழ்பேசும் மக்களை குறிப்பாக முஸ்லிம்களை குறிவைப்பதை இந்தக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மலித்ஜயதிலக்க நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இலங்கைத்தீவைப்பொறுத்தவரை ரேமினேற்றர் கோட்டாபாயாவின் ஆட்சி உருவான பின்னர் அதில் இணைக்கப்படும் படைய முகங்களின் எண்ணிக்கை ஏறுமுகமாவதும் பௌத்த சிங்கள தேசியவாத்தில் கோலோச்சும் முகங்கள் அரசாங்கத்துக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதும் தொடர்ந்தும் பகிரங்கப்படும் காட்சிகள். அந்த வகையில் சிறிலங்கா ராணுவத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய என்ற முகமும் இந்தவாரம் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்கவேண்டும்

சுpறிலங்காவின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா கடந்தவாரம் தடை விதித்திருந்தாலும் இவ்வாறன நகர்வுகள் தொடரத்தான் செய்கின்றன.

இதற்கிடையே சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் இலங்கை தொடர்பான ஜெனிவாத்தீர்மானத்தில் இருந்து விலகிக்கொள்ளும் நகர்வு ஆகிய இரண்டுவிடயங்களிலும் ராஜபக்சக்கள் தரப்பு எதிர்வரும் தேர்தல் களங்களில் அரசியல் ஆதாயத்தை அடையப்பபோவதை அறிந்து தென்னிலங்கை எதிரணிகள் பதற்றமடைவதால் அவர்களும் வேறுவழியின்றி இந்த விடயத்தை கையி;ல் எடுக்கத்தலைப்படுகின்றனர். அந்தவகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் யதார்த்தமாக சில விடயங்களை சொன்னாலும்

ஜெனிவாத்தீர்மானம் மூலமே மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் மின்சாரக் கதிரை தண்டனையிலிருந்து தம்மால் காப்பாற்றமுடிந்தது. தமது இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேசம் மேற்கொள்ளவிருந்த நடவடிக்கைகளை நிறுத்த முடிந்தது என சொல்லியிருப்பதையும் அவதானித்துக்கொள்ள வேண்டும்

எது எப்படியோ சவேந்திர சில்வா தொடர்பான வோசிங்டனின் அறிவிப்பும் ஜெனிவாத்தீர்மானத்தில் இருந்து கொழும்பு விலகும் முடிவும் தென்னிலங்கை எதிரணிகளை பதற்றப்படுத்துவதால் இது இப்போது சிறிலங்காவின் அரசியற் பரப்பில் கடுமையானவாதப்பிரதிவாதங்கள் நீட்சிக்குள்ளாக்கிவருகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொதுத்தேர்தல் நடத்தப்டலாம் என எதிர்பார்கப்படும் நிலையில் இது வேறுவழியின்றி அரசியல்பரப்பை சூடாக்கிவருகி;ன்றது.

தமிழ் அரசியல் தரப்பைபொறுத்தவரை அது அமெரிக்காவின் இந்த நகர்வை வரவேற்கும் வகையில் தமது எதிர்வினைகளை வெளிப்படுத்துவது எதிர்பார்க்கத்தக்கதே. அமெரிக்காவின் இந்தநகர்வால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எந்தளவு ஆதாயம் இருக்கும் என்பது ஒரு முக்கிய வினா.

ஏனெனில் தமிழர் நலன்சார்ந்து இந்த நகர்வை வோசிங்டன் எடுக்கவில்லையென்பதும் அது தனக்குரிய எம்சிசி, அக்சா, சோபா போன்ற ஒப்பந்த தூண்டில் இரைகளை மையப்படுத்தி இந்த நகர்வை எடுப்பதும் வெளிப்படையானது. ஆயினும் எமக்கு மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்கட்டுமே என்ற கருத்தியலின் ஊடாக மட்டுமே தமிழ் அரசியல் தரப்பு அமெரிக்காவின் இந்த நகர்வை சாதகமாக நோக்கிக்கொள்ளத்தலைப்படுகிறது.

ஆனால் மறுபுறத்தே ராஜபக்சக்களுக்கு எதிராக நிற்கும் சிங்களஅரசியல் தலைவர்களோ அமெரிக்காவின் இந்த நகர்வால் சற்று அதிர்வடைந்துள்ளனர்

ஏனெனில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற அரசதலைவா தேர்தலில் வெளிப்பட்டதைபோல ரேமினற்றர் கோட்டாபாய மேற்பாத்த ராஜபக்சக்கள் எதிர்வரும் தேர்தலிலும் இந்தவிடயத்தை பிரதான அரசியல் உத்தியாக பயன்படுத்தி சிறிலங்காவின் இறைமையையும் சுதந்திரத்தையும் உறுதி செய்யும் ஆட்சிஇயந்திரம் தாமே சிங்கள மக்களிடம் உசுப்பேற்றலை செய்து வாக்கு அறுவடையை பெற்றுக்கொள்ளும் என தென்னிலங்கை அரசியல் முகங்கள் பதற்றப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்தப்பதற்றத்தில் ஆதாரம் உள்ளது. ஏனெனில் சவேந்திர சில்வா தொடர்பான வோசிங்டனின் அறிவிப்பும் ஜெனிவாத்தீர்மானத்தில் இருந்து விலகும் தமது முடிவும அனைத்துலக அரங்கில் தமது அதிகார மையத்துக்கு சவால்களை ஏற்படுத்தினாலும் உள்ளுரின் அது அரசியல் ரீதியாக, அறுவடை வழங்கக் கூடியது என்பதால் இந்த விடயங்களை கொதிநிலையில் வைத்திருக்கவே அது விரும்பும்

ஆனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் மேற்குலகபெரிய இடங்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுக்காவிட்டால் அனைத்துலக சவால்கள் தொடரும் என்பதையும் அறியாதது அல்ல ராஜபக்சக்களின் அதிகாரமையம்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்