சிங்களத் தலைவர்களுக்காக நியாயம் கேட்பது ஏன்? சுமந்திரனுக்கு சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் பகிரங்கக் கடிதம்

571shares

சட்டத்தரனி சுமந்திரனுக்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளரும், பிரபல அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் அவர்களே-

நீங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறைய ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயமானதாகக் காண்பித்து. அதனைச் சர்வதேசஅரங்கில் ஒப்புவிக்கும் வேலைத் திட்டத்தை நன்றாகவே செய்து வருகின்றீர்கள் என்பது புரிகிறது.

அதாவது, தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகளை இலங்கையிலேயேநடத்த வேண்டும் என்பதுஇலங்கை- இந்திய அரசுகளின்குறிப்பாக இந்தியஅரசின் விருப்பம். கலப்பு நீதிமன்ற விசாரணை என்பதைக் கூட இலங்கை அரசு, குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே விரும்பவில்லை. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு உங்கள் ஒத்துழைப்புடன் அமெரிக்க, இந்திய அரசுகளின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு தரும் என்று கூறினீர்கள். நம்பியிருந்தீர்கள்.

மைத்திரிபால சிறிசேனவை, சம்பந்தன் நெல்சன் மண்டேலா என்றும் புகழ்ந்தார். அதுவே நல்லாட்சி என்றும் சம்பந்தன் இடித்துரைத்தார். ஆனால் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்தது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். அதனைப் பற்றி இங்கு விவாதிக்க வரவில்லை.

ஆனால் 2018 ஆம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதக இருந்தது. அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதால், இலங்கையில் ஜனநாயகமே பறிபோய்விட்டது என்ற தொனியில் நீங்கள் இலங்கை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தீர்கள்.

2015 ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதியில் இருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மாலை, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி பறிபோகும் வரையான காலப்பகுதியில் நல்லாட்சி என்று தம்மைத்தாமே கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் விட்டுத்தந்த ஜனநாயகம்தான் என்ன?

இலங்கை நீதித்துறை சிங்கள மக்களுக்கு நியாயமானதாகவே செயற்படுன்றது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவிக்காகவும் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்ற நோக்கிலும் உயர் நீதிமன்றத்தில் நீங்கள் வழக்குத் தாக்கல் செய்து வாதாடி வெற்றி பெற்றீர்கள். இலங்கை நீதித்துறை நியாயமானது என்று சம்மந்தன் கூடப் பாராட்டியிருந்தார்.

அதுவும் தமிழ் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி விசாரணை கோரப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை உயர் நீதிமன்றத்தைச் சம்பந்தன் பாராட்டியிருக்கிறார். நீங்கள் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்த கதாநாயகனாகவும் திகழ்ந்து கொண்டிருந்தீர்கள்.

உண்மையில் சிங்கள அரசியல் தலைவர்களுக்காக இலங்கை உயர் நீதிமன்றத்தில் நீங்கள் அல்ல, எந்தவொரு யூனியர் சட்டத்தரணி வாதாடினாலும் வெற்றியை இலகுவாகப் பெறமுடியும். ஏனெனில் இலங்கை நீதித்துறை சிங்கள மக்களுக்குரியது. ஆனால் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுரிமைகளோடு சம்மந்தப்பட்ட வழக்குகள் என்றால், இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பைஎவ்வாறு வழங்கியிருந்தது என்பதற்கு வரலாறுகள் உண்டு. இது உங்களுக்குத்தெரியாதா?

ஏன், 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணம் உயர் நீதிமன்றத்தினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது நீங்கள்தானே தமிழ் மக்கள் சார்பில் வாதாடினீர்கள்? ஆனால் என்ன நடந்தது? ஏன் அந்த வழக்கை உங்களால் வெற்றிபெற முடியாமல் போனது?

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைக்காக சர்வதேச ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்ட இரண்டு மாகாணங்களைச் சட்டத்தினால் எவ்வாறு பிரிக்க முடியும் என்று சிந்திக்காமல் இலங்கைத் தேசியவாதக் கண்ணோட்டத்தில் அன்று உயர் நீதிமன்றம் செயற்பட்டமை உங்களுக்குத் தெரியாதா?

சரி- நுவரேலியாவில் சோலமலை ராசு என்பவரின் காணி தொடர்பான வழக்கில் நீங்கள்தானே உயர் நீதிமன்றத்தில் வாதாடினீர்கள். ஆனால் தீர்ப்பு எப்படி வந்தது? இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் மாகாணங்களுக்குக் காணி உரிமை இல்லை என்றுதானே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாணங்களுக்குக் காணி- பொலிஸ் அதிகாரங்கள் உண்டு. ஆகவே மாகாணங்களுக்குக் காணி உரிமை இல்லை என்று எந்த அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?

சரி- இன்று வரை உங்களால் வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது தவறு என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிந்ததா? அல்லது மாகாணங்களுக்குக் காணி உரிமை உண்டு என்பதை நியாயப்படுத்தி உயர் நீதிமன்றத்தில் உங்களால் வழக்குத் தாக்கல் செய்ய முடிந்ததா?இல்லை- ஏன்?

ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமை பற்றிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்வென்று உங்களுக்குத் தெரியும். எழுபது ஆண்டுகாலஈழத் தமிழ் போராட்டத்தின் அரசியல் உரிமைகளை இலங்கையின், அதுவும் ஒற்றையாட்சிஅரசின் உயர் நீதிமன்றம் நியாயப்படுத்தாது.இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தினால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. நாடாளுமன்றத்துக்கு வெளியே இருதரப்புப் பேச்சுக்கள்மூலமே தீர்வை எட்ட முடியும்.

சரி- அரசியல் உரிமை பற்றிய பேச்சை விடுவோம். ஆனால் குறைந்த பட்சம் போரின் பக்கவிளைவுகளான அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில் புத்தர் சிலை வைத்தல், விகாரைகள் கட்டுதல் தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிந்ததா?

2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுத்தீர்கள். நல்லிணக்க அரசு என்று ரணில்வேறு கூறினார். ஆனால் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இராணுவ முகாம்கள் குறைக்கப்பட்டதா? படையினரால் அபகரிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள், பொதுக் காணிகள் அனைத்தும் உரிய முறையில் கையளிக்கப்பட்டதா? அரசியல் கைதிகள்; விடுதலை செய்யப்பட்டார்களா? புத்தர் சிலை வைப்பது, விகாரைகள் கட்டுவது போன்ற செயற்பாடுகள் ஏதுவும் குறைவடைந்ததா? இல்லையே?

குறைந்த பட்சம் இவற்றை ஓரளவுக்கேனும் உங்களால் குறைக்க அல்லது தடுக்க முடியவில்லையே? சரி- இவ்வாறான நிலையில் தற்போது போரை நடத்திய ராஜபக்சவின் ஆட்சி மீண்டும் 2019 ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி பதவிக்கு வந்து விட்டது. இந்த நிலையில் கொரேனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவில்லை. ஆனால் எப்படியும் நடத்துவேன் என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

ஆனால் அப்படி நடத்தினால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன் என்றும் மீண்டும் பழைய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்றும் நீங்கள் அடித்துக் கூறுகின்றீர்கள். அதற்குச் சட்டத்தில் இடமிருக்கா இல்லையா என்பதெல்லாம் வேறு.ஆனால் உங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஏன் சிங்கள அரசியல் தலைவர்களுக்காக உயர் நீதிமன்றம் வரை சென்று நியாயம் கேட்கிறீர்கள்? தேர்தல் நடந்தால் என்ன? அல்லது பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டினால் என்ன கூட்டாமல் விட்டாதான் என்ன? அதில் ஏதும் நன்மைகள் தமிழ் மக்களுக்கு உண்டா?

சரி, அப்படித் தமிழ் மக்களுக்கு நன்மை என்றால், ஏன் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கிற மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்ய்வில்லை?

மாகாண சபை தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்பது வேறு கதை.ஆனால் உங்கள் மைத்திரி- ரணில் நல்லாட்சியில் 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட 30-1 தீர்மானத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி மாகாண சபைகள் ஒழுங்காக நடைபெற இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அந்தத் தீர்மானத்துக்கு நீங்கள் ஆதரித்த மைத்திரி ரணில் அரசாங்கம் இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. நீங்கள்தான் (சுமந்திரன்) இதன் முன்னோடி என்று நீங்களே கூறினீர்கள். ஆகவே அந்த மாகாண சபைக்குரிய தேர்தலை 30-1 தீர்மானத்தின் படி இதுவரை ஏன் நடத்தவில்லை என்றும் மாகாணங்களுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களை ஏன் இதுவரையும் வழங்கவில்லை என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கலாமே?

அல்லது 30-1 தீர்மானத்தின்படி 13 ஆவது திருத்தச் சட்டம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இன்னமும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு முறையிட்டிருக்கலாமே? ஏன் உங்களால் இதைச் செய்ய முடியாமல்போனது?

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென்றும் பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமெனவும் கேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய எடுக்கும் உங்கள் முயற்சி யாருக்காக? தமிழ் மக்களின் நன்மைக்காகவா?

2018இல் ரணில் விக்கிரமசிங்கவுக்காக, 2020இல் சிங்கள அரசியல் கட்சிகளுக்காக உயர் நீதிமன்றம் செல்ல முடியும் என்றால், ஏன் மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுரிமைகள் சம்மந்தப்பட்ட விடயங்களில் உங்களால் அக்கறை செலுத்த முடியாமல் போனது?

சாவகச்சேரியில் 2000 ஆம் ஆண்டு எட்டுத் தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தன்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவச் சிப்பாயொருவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளீர்கள். அது ஏன்?

இலங்கை நீதித்துறைய நியாயப்படுத்தவா? இனப் படுகொலைக்குச் சர்வதேச விசாரணை அவசியமென்று சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தக் கூடிய சூழல் ஒன்று வந்து கொண்டிருக்கும் நிலையில், அதுவும் இலங்கை நீதித்துறையில் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஜெனீவா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டிய பின்னரும் எதற்காக இப்படியான வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள்?

சிலவேளை பொதுமன்னிப்பு வழங்கியமை தவறு என்று தீர்ப்பு வழங்கி. மீண்டும் அந்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டால், இலங்கை நீதித்துறை நியாயமானது என்ற முடிவுக்கு அல்லவா சர்வதேசம் வந்துவிடும்?

ஆகவே மேலே கூறியதுபோன்று இலங்கை ஒற்றையாட்சி அரசை நியாயப்படுத்தி இலங்கை இந்திய அரசுகளின் விருப்பங்களை நிறைவேற்றவே நீங்கள் பாடுபடுகிறீர்கள் என்பது கண்கூடு. தமிழ்த் தேசிய அரசியலை இலங்கைத் தேசியத்துடன் கரைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது இங்கு பலரின் எதிர்ப்பார்ப்பு. எனவே அந்த எதிர்ப்புகளின் கருவியாகவே நீங்கள் செயற்படுகிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியாக இருக்கலாம், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியாக இருக்கலாம், சிங்களத் தலைவர்கள் எவருடைய ஆட்சியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்லக் கூடிய பொதுவான- நிரந்தரமான இலங்கை அரச பிரதிநிதியாகத் தமிழ் மக்களின் வாக்குகளால் உங்கைள நியமித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தால், அதில் மாற்றுக் கருத்திருக்காது.

தமிழ் மக்கள் உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் உயர் நீதிமன்றத்தில் வாதாடி ஜனநாயக உரிமைகளைப் பொற்றுக் கொடுக்க அல்ல. மாறாக தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்துக்கான அங்கீகாரத்தைப் பெறக் கூடிய ஏற்பாடுகளை ஜனநாயக வழியில் செய்யுங்கள்.

சிங்கள மக்களின் முகநூல்களைப் பாருங்கள். உங்களை (சுமந்திரன்) திட்டுகிறார்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறிக் கொண்டு தங்கள் அரசியலை நீங்கள் அழிப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். ரணிலின் ஆதரவாளர்கள் கூட உங்களை ஏசுகிறார்கள். சுமந்திரனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதாலதான் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வு அழிவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

மறுபுறத்தில் ராஜபக்சக்களின் ஆதரவாளர்களும் அப்படித்தான் பார்க்கின்றனர். ஆனால் சிங்கள அரசியல் தலைவர்களுக்காக உயர் நீதிமன்றத்தில் உங்களை வாதாட அனுப்பி, அதன் மூலம் இலங்கை ஒற்றையாட்சி அரசையும் அதன் யாப்பையும் சா்வதேச அரங்கில் நியாயப்படுத்தப் பிரதான சிங்கள அரசியல் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயற்படுகின்றனர்.

உங்களைப் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை சிங்கள மக்கள் பலர் அறியாமல், தங்கள் முகநூலில் திட்டுகிறார்களே என்று தற்போதைக்குச் சிங்களத் தலைவர்கள் மனதுக்குள் கவலைப்படக் கூடும். இருப்பினும், பின் ஒருகாலத்தில் சுமந்திரனை நாங்கள் எப்படிப் பயன்படுத்தினோம் என்பதைச் சிங்கள மக்களுக்குச் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிய வைப்பார்கள்.

இதுதான் யதார்த்தம். இதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் சுமந்திரன் அவர்களே.

இப்படியான நிலையில் சிங்கள மக்களிடம் பேசி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவேறு நீங்கள் மார்தட்டுவதுதான் இங்கே வேடிக்கை.

நன்றி

அ.நிக்ஸன்

சிரேஸ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரும்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து