தமிழரின் அரசியல் தலைமையை பலவீனப்படுத்த கங்கணம் கட்டி செயற்படும் சக்திகள்

50shares

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அதனை சிங்கள பௌத்த மயமாக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்படும் சக்திகளுக்கு வடக்கு கிழக்கில் பலமான அரசியல் தலைமை ஒன்று இருப்பது நெருக்கடிதான்.

30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது சிறிலங்கா அரச தரப்புக்கு பெரிய சவாலாக இருந்தது.

இந் நிலையில்தான் விடுதலைப் புலிகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் அயல்நாடுகள் உட்பட பல உலக நாடுகளின் உதவியுடன் திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டார்கள்.

விடுதலைப் புலிகளுடைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த வேளையில் தமிழர்களுக்கு ஜனநாயக ரீதியான அரசியல் தலைமையாக இருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். சர்வதேசமும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தமிழர்கள் மத்தியில் பலமான அரசியல் தலைமை ஒன்று இருப்பதை சிங்கள தரப்பு அறவே விரும்பவில்லை. தமிழர்களின் அரசியல் தலைமையை பலவீப்படுத்தி அழிப்பதற்கு சில தரப்புக்கள் எத்தகைய சதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமே அத்தனையையும் செய்தார்கள்.

இலங்கையில் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் இருந்தன.

தமிழர்கள் மத்தியில் பலமான அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தெரிவு செய்திருந்தார்கள்.

முஸ்லீம்கள் மத்தியில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி இருந்தது.

2005ஆம் ஆண்டுக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் துண்டாடி பிளவு படுத்தினர்.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியையும் மூன்றாக பிளவு படுத்தி பலவீனப்படுத்தினார்கள்.

கதிரைச் சின்னம், வெற்றிலைச் சின்னம் , யானைச் சின்னம் , மரச் சின்னம் ஆகியன அழிக்கப்பட்டன. அல்லது பலவீனப்படுத்தப்பட்டன.

இந்த நான்கு தேர்தல் சின்னங்களுக்கும் இறுதியாக இடம்பெற்ற மூன்று தேர்தல்களிலும் காணாமல் ஆக்கப்பட்டன.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் கடந்தாலும் இன்னும் இலங்கை அரசுக்கும் பெரும் தலையிடியாக இருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்புதான்.

இதற்கு எடுத்துக்காட்டாக 08.01.2015ம் திகதி இடம்பெற்ற ஏழாவது சனாதிபதித் தேர்தல் மற்றும் 17.08.2015 இடம்பெற்ற இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது பாராளுமன்றத்தேர்தல், 10.02.2018 இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல், இறுதியாக 16.11.2019 இடம்பெற்ற எட்டாவது சனாதிபதித் தேர்தல் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

இந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பு சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியாக மாறியது. சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் மத்தியில் பலமான அரசியல் தலைமை ஒன்று இருப்பது தமக்கு நெருக்கடியும் ஆபத்தும் என சிறிலங்கா அரசு தரப்பு நம்புகிறது.

இதனால் 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தலைமை ஒன்றை இல்லாமல் செய்யும் சதி முயற்சியில் தென்னிலங்கை அரசுகள் செயற்பட்டு வருகின்றன.

இதனால் 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் எங்கும் இல்லாத அளவு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலுக்காக இறக்கப்பட்டு வாக்குகள் பிரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

ஓவ்வொரு மாவட்டங்களிலும் 10க்கு மேற்பட்ட சுயேச்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் களமிறக்கியிருப்பது தென்னிலங்கi சக்திகள் தான்.

அது தவிர தமக்கு சார்பான தமிழ் கட்சிகளையும் களமிறக்கி உள்ளனர்.

தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டால் தமிழ் மக்களின் அரசியல் தலைமை பலவீனப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்து இலகுவாக தப்பிக்கொள்ளலாம் என்பது தென்னிலங்கை சக்திகளின் நோக்கம்.

எவ்வாறு தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தி அழித்தார்களோ அந்த வழியில் இப்போது தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் தலைமையையும் அழிப்பதற்கு பல்வேறு சதி வலைப்பின்னல்களை தென்னிலங்கை பேரினவாத சக்திகள் செய்து வருகின்றன.

இந்த சதி வலையில் சிக்கிய தமிழர்கள் சிலரும் இதற்கு துணை போவது ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தை அழிக்கும் அபாயகரமான செயலாகும்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டிய தேவை கடந்த காலத்தை விட இப்போது மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒரே ஒரு பலம் வாக்கு பலம் தான்.

தமது உணர்வையும் கோபத்தையும் எதிர்ப்பையும் ஒன்றுமையையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் காட்டினார்கள்.

அதே ஒற்றுமை வேகம், துணிவு அனைத்தும் ஒன்று சேர தமிழரின் அரசியல் தலைமையை பலப்படுத்த வேண்டியது தன்மானமுள்ள அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதோ பலவீனப்படுத்துவதோ தமிழ் மக்கள் தங்கள் தலையில் எண்ணெய் ஊற்றி தீவைப்பதற்கு சமனாகும்.

திருமாறன் சோமசுந்தரம்.


இதையும் தவறாமல் படிங்க
“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்; ஒருவர்  உயிரிழப்பு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்