உத்வேகம் எடுக்கும் மாவை! கட்சியின் மறுசீரமைப்பு விரைவில்..?

92shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மறுசீரமைக்க மாவை முயற்சிப்பதோடு, ஆற்றலுள்ள புதிய முகங்களை கட்சிக்குள் கொண்டு வருவது காலத்தின் தேவையாகவுள்ளது என யாழில் இருந்து கட்டுரையாளர் கணபதி சர்வாணந்தா தெரிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்டைவுக்குக் காரணம் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையிலான தனது கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கட்டுரையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் மறுசீரமைக்க மாவை முயல்வதோடு , ஆற்றலுள்ள புதிய முகங்களையும் கட்சிக்குள் கொண்டுவருவதே காலத்தின் தேவையாகும்.

தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. சிங்கள அரசியல்வாதிகள் தமது குறியை எட்டிவிட்டனர் என்று சொல்லப்படும் அதே வேளை, தமிழ் தரப்பு மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாகத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்ட, பல தமிழ் கட்சிகளைக் கூட்டாகக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அதற்கான காரணமாகப் பலர் பலதைச் சொல்லுகின்றனர். அதற்குரிய காரணம் என்னவென்று மேலோட்டமாகத் தென்படாவிட்டாலும் , அது மறைபொருளாக இருக்கவும் வாய்ப்புண்டு.

எம்மைப் பொறுத்தவரை மற்றவர் முகம் கோணாது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள். .அதனால் பிறர் குற்றமிழைப்பதைக் கண்டாலும் அதனைப் பொது வெளியில் சொல்வதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் இது பெரிய பாதிப்பை உண்டாக்காது என்று சொல்லப்பட்டாலும், பொது நிறுவனங்களைப் பொறுத்தவரை இது பாரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பல சமூக நிறுவனங்கள் வளராததற்கும், நிரந்தரமாக மூடப்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம் எனலாம். என்னைப் பொறுத்தவரை தனிமனித உறவைப்பேண இம் முறை சரியாயினும், பொது மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்படுகின்ற பொது நிறுவனங்களில் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. அங்கு நடைபெறும் மோசடிகளுக்கும் இதுபோன்ற போக்கே காரணமாகவும் அமைகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

பொது நிறுவனங்களைப் பொறுத்தவரை முகஸ்துதி பாராது, நன்மை, தீமைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவதுடன், அவை மனம் திறந்து உரையாடப்பட வேண்டும். குறை நிறைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அவற்றை நியாயமாக விமர்சிக்க வேண்டும்.

அதுவே ஆரோக்கியமான முன்னெடுப்புகளுக்கு வழிவகுக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல குறை, நிறைகள் உண்டென்று அறிந்திருந்தும், அவற்றை முதன்மைப்படுத்தி விவாதிக்காததும், அதற்குரிய பரிகாரத்தைத் தேடாததும் பின்னடைவுக்கான முக்கிய காரணங்களில் சில என்று சொல்லப்படுகிறது. எனவே கூட்டமைப்பின் பின்னடைவுக்குச் சரியான காரணத்தை கண்டறிவதே காலத்தின் தேவை என்பது பலரின் கருத்து.

கூட்டமைப்பைப் பொறுத்தவரை,அது நீண்ட காலமாகவே தனிநபர் அபிலாஷைகளுக்கேற்றவாறு வழி நடத்தப்படுவதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அதனை எதிர்க்க வலுவற்றவராகப் பெரும்பாலான உறுப்பினர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தான் அதன் தோல்விக்கு முக்கிய காரணமெனலாம். இந்த நாட்டில் காணப்படும் இரண்டாவது பெரும்பான்மை இனமான தமிழினத்தின் தலைவிதியை ஒரு தனி நபர் தீர்மானிக்கிறார் என்ற கருத்து மேலோங்கும் போதே கட்சி விழித்திருக்க வேண்டும்.

கட்சியில் இருந்து பழைய உறுப்பினர்கள் ஒவ்வொன்றாக வெளியேற்றப்படும்போதும், கட்சி தவறான போக்கில் முன்னெடுத்துச் செல்வதாகப் பல சமூக வலைத் தளங்கள் சுட்டிக் காட்டியிருந்தன. அப்போது கட்சி ஒன்று கூடி. அவற்றிற்கான சரியான காரணங்களை இனங்கண்டு அதிலிருந்தும் கட்சியைக் காப்பாற்றியிருக்கலாம் . அதைவிட்டுப் பின்னடைவுக்குத் தனிநபரோ அல்லது ஊடகங்களோ காரணம் என்று இப்ப சொல்வதில் அர்த்தமில்லை. பிழை எங்கோ இருக்கையில் , வேறு ஒரு இடத்தில் அதனைத் தேடுவது அர்த்தமற்றதும், பலனளிக்காத தொன்றும் என்பதில் நாம் முதலில் தெளிவு பெறவேண்டும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்தம் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தக் கூடிய வலுவானதொரு அமைப்பாக வளர்த்தெடுக்க வேண்டும். என்பதே இன்றை கடமை. அத்துடன் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான மூத்த கட்சி என்று கருதப்படும் தமிழ் அரசுக் கட்சிக்கு ஒரு வரலாறு உண்டு. அதற்கெனக் கட்டி வளர்த்ததொரு அரசியல் பாரம்பரியம் உண்டு.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்குப் பங்கம் ஏற்பட்டபோது அதனை எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா தோற்றுவித்தார். அது மட்டுமல்ல தற்போது அதன் தலைமையை ஏற்று வழி நடத்தும் மாவைக்கும் வரலாற்று ரீதியாகப் பல தகமைகள் உண்டு. எனவே கட்சியைக் காப்பாற்ற வேண்டுமாயின் முதலில் தலைமை காப்பாற்றப் படல் வேண்டும். பின்னடைவுக்கான சரியான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

ஒரு கூட்டுக் கட்சிகளின் அமைப்பு என்ற அடிப்படையில் அதன் பின்னடைவுக்கான பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அதற்குரிய காரணத்தையும் சேர்ந்தே கண்டறிய வேண்டும். அதை விட்டு தேர்தல் வரை நின்று, அதுவும் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த பின்பு தலைமையையும், தனிநபரையும், ஊடகத்தையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

தன்னை மக்கள் பிரதிநிதி என்று சொல்பவர் , முதலில் பிழைகளை ஏற்றுக் கொள்கின்ற மனோபாவம் உள்ளவராக இருத்தல் அவசியம். அப்படிப்பட்ட ஒருவரே சிறந்ததொரு அரசியல்வாதியாகவோ அல்லது மக்கள் தலைவனாகவோ இருக்க முடியும்.

எனவே கட்சி சந்தித்துள்ள பின்னடைவுக்குரிய சரியான காரணத்தைக் கண்டறிவதன் மூலம் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவில் குளிர்காய எண்ணும் சுயநலவாதிகளை இனங்கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டுவரலாம். அதே வேளை கட்சியையும் மேலும் பலமாக்கி முன்கொண்டு செல்லலாம் என்பது பலரின் வேண்டுகோளாகக் காணப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தனது தோல்வியை ஆராயத் தனக்குள்ளே குழுவொன்றை நியமித்ததாகத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், கட்சிக்கு வெளியே உள்ள அரசியல் ஆய்வாளர்களையும், அத்துறை சார்ந்தவர்களையும், பொதுமக்களையும் அக் குழுவில் ஒன்றிணைத்து இது தொடர்பாகக் கருத்துக் கேட்பதும் மிகவும் அவசியமானதொன்றே.

இந்தியாவில் காங்கிரஸ் ஒருமுறை படு தோல்வியடைந்தபோது கட்சியின் தலைவராக இருந்தவர் காமராஜர். கட்சியை மறு சீரமைத்துப் புதிய உறுப்பினர்களைக் கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டவரே இந்திராகாந்தி.பின்னர், அவர் பிரதமாராக இருந்தபோது அன்று இட்ட விதைகளே விருட்சமாகி இன்றும் இந்தியதேசத்தைக் கட்டிக்காத்து வருகிறது. எனவே அது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் மறுசீரமைக்க மாவை முயல்வதோடு , ஆற்றலுள்ள புதிய முகங்களையும் கட்சிக்குள் கொண்டுவருவதே காலத்தின் தேவையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட 15 உத்தரவுகள்! ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்

முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட 15 உத்தரவுகள்! ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது