இந்தியாவை மிரட்டும் இலங்கை? பனிப் போராக மாறும் 13 வது திருத்தச் சட்டம்!

357shares

13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து மாகாண சபைகளை இல்லாமல் செய்வது குறித்து இலங்கை அரசு மீண்டும் பேச ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பேசு பொருளாக அது தற்போது மாறி இருக்கிறது.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கூடாது இந்தியா இலங்கையின் உள் நாட்டு விடயத்தில் தலையிடக்கூடாது என்று பௌத்த பிக்குகள் தொடங்கி இராஜாங்க அமைச்சர்கள் வரை இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.

தமிழீழ தனி அரசு கேட்டு பல இலட்சக்கணக்கான உயிர்களை பறி கொடுத்து விட்டு தமிழ் தரப்புகள் இன்று மாகாண சபை அதிகாரங்களை கூட பெறமுடியாது திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறை படுத்தாத நிலையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வது குறித்து இலங்கை அரசில் உள்ள கடும் போக்காளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கும் அவர்களது தாயக கோட்பாட்டின் அத்திவாரமாக இந்த 13 வது திருத்தச் சட்டத்தை கருத முடியும்.

இன்று இருக்கும் சூழலில் 13 இல் இருந்தே தமிழர்கள் தங்களது அரசியல் அதிகாரம் குறித்து பேச ஆரம்பிக்க முடியும். அதுவே இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சட்ட ரீதியான அங்கிகாரமாக உள்ள ஒரு திருத்தச் சட்டம் என்பதுடன் அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டம் இலங்கை அரசின் பிராந்திய நலன் சார்ந்த விடயங்களில் இந்தியாவின் ஆதிக்க கருவியாக மாறி இருப்பதாக இலங்கை அரசு உணரத் தொடங்கியுள்ளது. அதாவது அது இலங்கை அரசுக்கு போடப்பட்ட மூக்கனாங் கயிறாக சிங்கள கடும் போக்காளர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே காலத்துக்கு காலம் மாறி மாறி வரும் சிங்கள அரசு 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்தாது அதனை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக சிங்கள தலைவர்கள் ஒருமித்த கருத்துக்களுடனேயே பயணிக்கின்றனர். அதாவது 13 வது திருத்தச் சட்டம் ஊடாக தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது என்பதில் இலங்கையில் உள்ள எதிர்கட்சி ஆளும் கட்சி, இடதுசாரி கட்சிகள் என அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இருந்த வடகிழக்கு இணைப்பை jvp கட்சியினர் நீதிமன்றத்தின் ஊடாக இல்லாமல் செய்தது முதல் கொண்டு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய அரசியல் பிரமுகராக இருந்த மிலிந்த மொறகொட அவர்கள் அண்மையில் மாகாண சபைகளினால் இலங்கையில் பல மில்லியன் ரூபாய் வீனடிக்கப்படுவதாக கூறிய கருத்து வரை 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதாகவே உள்ளது.

இந்தியாவை மிரட்டும் சிங்கள தரப்பு!

தற்போது இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீன இந்திய அமெரிக்க ஆதிக்கப் போட்டியின் காரணமாக இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துவதை சீனா விரும்பவில்லை

இதற்காக சிங்கள இனவாத தரப்புகளை தூண்டி விட்டு இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை இலங்கை மக்கள் மத்தியில் பரப்பில் வருகின்றது.

அதில் மிக பிரதானமாக இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் ஊடாக சட்ட ரீதியாக இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. இந்த சட்டத்தில் இருந்து விலகுவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீறும் செயலாகவும் அது இந்தியா இலங்கை உறவில் சர்வதேச ரீதியில் விரிசலை உருவாக்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் இராணுவ அதிகாரியான தற்போது உள்ளூராட்சி, மாகாண சபைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இந்த 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது இலங்கை இந்திய அரசுகளின் பனிப் போராக 13வது திருத்தச் சட்டம் மாறிவருகிறது.

ஒரு புறம் சீன இந்திய எல்லையில் இந்திய சீன நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தங்களை கிழித்தெறியும் நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுப்பது என்பது இலங்கை இந்திய உறவில் பாரிய விரிசலை அது ஏற்படுத்தும்.

இன் நிலையில் வருகிற மாகாண சபை தேர்தலில் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்கப் போட்டி வடகிழக்கு தேர்தலில் பிரதிபலிக்க உள்ளது.

அதாவது இந்திய அரசின் ஆதரவை பெறும் கட்சியோ, அரசியல் கூட்டணியோ வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தி வடகிழக்கில் இந்திய அரசாங்கம் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்க கூடும் என்பதால் இலங்கை அரசு வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் பொது ஜன பெறமுன கட்சியை வெற்றி பெற வைப்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

அதாவது வடகிழக்கு இணைப்பை தவிர்ப்பதற்கும் இந்திய அரசாங்கத்தை தனது பக்கம் திருப்புவதற்காக கிழக்கு மாகாணத்தில் பொது ஜன பெறமுன கட்சி ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் வருகிற மாகாண சபை தேர்தல் வடகிழக்கில் இந்திய இலங்கை அரசுக்கு இடையிலான வல்லாதிக்கப் போட்டியாக அமையப் போகிறது.

தமிழ் கட்சிகள் என்ன செய்ய போகிறது!

இலங்கையில் உள்ள வடகிழக்கு தமிழர்களின் போராட்ட வரலாற்றில் 13 வது திருத்தச் சட்டம் இலங்கை என்ற யானைக்கு எறும்பு போன்ற ஒன்று.

அதாவது யானை என்ற இலங்கை அரசுக்கு எறும்பு போன்ற 13 வது திருத்தச் சட்டம் எப்போதும் குடைச்சலாகவே உள்ளது.

ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்ள வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் தவறிவிடுகின்றனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக கொடுத்த விலை மிக அதிகமானது. அத்தோடு அதற்காக தமிழ் மக்கள் இழந்த காலம் அதைவிட அதிகம். இன்நிலையில் எந்த வித அதிகாரமும் அற்ற 13 வது திருத்தச் சட்டத்தை ஏற்பதற்கு தமிழ் கட்சிகள் தயாராக இருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்தால் யுத்தம் நடைபெற்ற கடந்த முப்பது ஆண்டுகளில் தனி தமிழிழ அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது.

ஆனால் இன்று விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதையே ஏற்க மறுக்கும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தில். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்குள் சிறுபான்மை இனத்தின் அரசியல் அபிலாசைகள், உரிமைகளை மூடி மறைக்க முயற்சிக்கும் இலங்கை அரசாங்கத்தை கையாள்வதற்கு இந்தியா என்ற பிராந்திய அரசை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

அதிலும் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது. அதற்காக இந்திய அரசின் ஆதரவை பெறுவதில் தமிழ் தேசியக் கட்சிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

தற்போது தமிழ் கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்பதானது மிகவும் சிறந்த தருணம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்திய பேரரசின் துணை இன்றி அல்லது இந்தியாவை புறந்தள்ளி ஈழத்தமிழர்கள் அதிகாரத்தை பெறுவது என்பது முடியாத காரியம் என்பதனை எமக்கு வரலாறு கற்று தந்துள்ளது.

எனவே தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமித்து செயற்பட வேண்டிய காலம் மீண்டும் ஒரு முறை வந்துள்ளது.

இலங்கையின் இனவாதிகள் இந்திய அரசை மிரட்டும் அளவுக்கு சீனாவின் அதிகாரம் இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் தமிழ் கட்சிகள் இந்திய அரசாங்கத்தின் கைகளை பலப்படுத்தி இலங்கையில் உள்ள தமிழர் தாயகத்திற்கான அதிகாரங்களை பெற்றெடுக்க முயற்சிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தை பிரித்தெடுப்பதில் வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டை இல்லாது ஒழித்து 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாது தடுப்பதில் இலங்கை அரசு மிகவும் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

இதற்காகவே இலங்கை அரசு தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே தொடர்ச்சியாக விரிசலை ஏற்படுத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்ற இஸ்லாமிய தீவிர செயற்பாட்டாளர்களை தூண்டி விடுகிறது.

கடந்த காலங்களில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஊடாக கிழக்கு மாகாண சபையை கையாண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தற்போது முஸ்லீம் கட்சிகளின் ஆதரவை திரட்டி கிழக்கில் பொது ஜன பெறமுன கட்சியின் ஆட்சியை நிறுவ முற்படுகிறது.

அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் வடகிழக்கு தமிழர் தாயக கோட்பாடு இல்லாமல் செய்யப்பட்டு. 13 வது திருத்தச் சட்டமும் செயலற்று போகும்.

எனவே 13 வது திருத்தச் சட்டம் தொடர்பில் வடகிழக்கில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். எனவே 13 வது திருத்தச் சட்டம் தொடர்பில் மிகவும் வலுவான சக்தி ஒன்றை உருவாக்கி எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் பின்னர் பொலீஸ்,காணி அதிகாரங்களுடன் கூடிய மாகாண சபை அதிகாரத்தை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இது தமிழர்களின் அதிகாரப் பரவலாக்கத்திற்கான முதல் படியாக அமையும்.

-தீரன்-

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்