மாட்டின் ரோட் கலந்துரையாடல்களின் அடிப்படையில் மாவை எடுக்கும் முடிவுகள் - சீறிப்பாயும் மூத்த போராளி!!

371shares

கிழக்கின் யதார்த்தத்தை புரியாமல் மாட்டின் ரோட்டில் நடக்கும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதை மாவை சேனதிராஜா எப்போது நிறுத்தப்போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த போராளி மட்டு நேசன் .

'மாவையின் சில செயற்பாடுகள் தமிழரசுக்கட்சிக்கான இறுதிச் சடங்ககாக முடிவடைந்துவிடும்' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சாணக்கியனுக்கு அம்பு எய்வோரின் கவனத்துக்கு..' என்ற தலைப்பில் மட்டு நேசன் மற்றும் தயாளன் போன்ற பெயர்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிழக்குத் தேசியம் எனும் பெயரில் வெறும்வாயை மென்றுகொண்டிருக்கும் சிலருக்கு அவல் கொடுக்கின்றனர் சில பிரகிருதிகள்.

தமிழ்த் தேசியத்தில் தாங்கள் தான் 24 கரட் என்று அடம்பிடிக்கும் தமிழ்த் தேசிய முன்னணியையும் விஞ்சும் விதத்தில் செயற்படும் இவர்களினால் நிச்சயம் தமிழரசுக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும்.

வடையைக் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டுப் போகவேண்டும். உளுந்து வாங்கியது எங்கே? ஊறவைத்தது எங்கே? ஆட்டுக்கல்லில் அரைத்தது யார் ? வடைக்கு ஓட்டை போட்டது யார் ? என்று கேட்கும் விதமாக மட்டக்களப்பில் கூட்டமைப்புப் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை வரவேற்பதை விட்டுவிட்டு காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

தமிழர் அரசியலில் ஒரு இளைஞன் தனது ஆற்றலை சமீப நாட்களாக வெளிப்படுத்தி வருகின்றார்.அவர்தான் சாணக்கியன்.

2015 பொதுத்தேர்தலின் போது மட்டு மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களில் விருப்புவாக்கில் கடைசி இடத்தில் நின்றவர் பொன்.செல்வராஜா. விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் ஒரு கட்சியின் தலைமை வேட்பாளர் விருப்பு வாக்கில் கடைசி இடத்தைப் பிடித்த என்ற வரலாறு இவருக்கு மட்டுமே உண்டு. பொது மக்களுடனான உறவில் இவர் எப்போதுமே பெ(க)யில் தான். அந்தத் தேர்தலில் போட்டியிட 25 வயது இளைஞனான சாணக்கியன் விரும்பினார். "உங்களுக்கெல்லாம் வயது இருக்கிறது. அந்த விடயங்களையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் "என்ற பாணியில் இவர் பதிலளித்ததாக த் தெரிகிறது.

இதனால் சாணக்கியன் வேறு முடிவு எடுத்தார். இவரதுபாட்டனார் சி .மூ .இராசமாணிக்கத்தின் மீது அபிமானம் கொண்ட பலரும் இவர் விட்ட தவறைச் சுட்டிக்காட்டியபோது அதனை ஏற்றுக்கொண்டார்.

பென்ஷன் வயது அடைந்த பின்னரே வேட்பாளராகலாம் என்ற எழுதப்படாத விதியை மட்டக்களப்பில் மாற்ற நினைத்தார் சாணக்கியன். அதற்கான வழியைக் கண்டுபிடித்தார். 2020 தேர்தலில் வேட்பாளரானார். கடுமையான விமர்சனங்கள்இதூற்றல்களைக் கடந்த தேர்தல்களில் தோற்ற கூட்டமைப்பு பிரமுகர்கள் பரவவிட்டனர். இந்நிலையில் வெற்றிக்கான வழிகளில் பிரதானமானது எது என ஊகித்தார் சாணக்கியன்.

தமிழரசுக் கட்சி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி எனத் தொடங்கி விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திலும் கிழக்கிலிருந்து முதன் முதல் இணைந்து முள்ளிவாய்க்கால் வரை பயணித்த யோகன் பாதரைச் சந்தித்தார். அவரது ஆதரவு கிடைத்தது. வெற்றி பெற்றார்.

பாராளுமன்றம் சென்ற கூட்டமைப்பினரில் இவர் ஒருவரே புதியவர். உண்மையில் இவருக்கு பேசச் சந்தர்ப்பம் கொடுத்திருக்க வேண்டும் மூத்தவர்கள். அந்தப்பெருந்தன்மை பழையவர்களிடம் இருக்கவில்லை. அதையும் முறியடிக்க என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தார். இவர் பெயர் அறிவிக்கப்பட்டது.பழையவர்கள் முகம் சுழித்தனர். இவரது உரை சகல தரப்பாலும் வரவேற்கப் பட்டது. 29 வயது இளைஞன் சகலவிடயங்களையும் மும் மொழியிலும் இரத்தினச் சுருக்கமாக குறிப்பிட்டமை ஆச்சரியமளித்தது. காணாமற் போனோர் தினத்தன்று இவர் அந்த அமைப்பினருக்காக களமிறங்கிக் கருத்துச் சொன்னவிதம் பழைய அரசியல்வாதிகளை விட இவரிடம் ஏதோ விடயம் இருக்கிறதென சிந்திக்கவைத்தது.

அண்மையில் மேய்ச்சல் தரைகளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பது என்ற பெயரில்1500 ஏக்கரை பொலநறுவை மாவட்ட சிங்களவர்களுக்கு வழங்க முயற்சிமேற்கொள்ளப்பட்டது. அதனை தற்காலிகமாகவேனும் நிறுத்த இவர் வைத்த வாதம் சிங்களவர்களாலும் நிராகரிக்க முடியாததாகும்.

திலீபன் நினைவு நாளன்று இவர் கலந்து கொண்ட சந்திப்பு ஏதோ தேசியத்துக்கு விரோதமானது என்பது போன்று நிறுவ முற்படுகின்றனர் சில வயிற்றெரிச்சல் வாதிகள். அன்றைய சந்திப்பு இளம் அரசியல் வாதிகளுக்கென்றே ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நாமல், சாணக்கியன், ஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு "கூந்தல் உள்ள சீமாட்டி கொண்டை போடுகிறாள்" என்று. இளையவர்களாகவும், எம். பி களாகவும் உள்ளவர்களின் சந்திப்புப்பற்றி இந்த இரண்டு வகையறாக்களிலும் அடங்காதவர்கள் ஏன் குத்தி முறிகின்றனர்?

சாணக்கியன் பாராளுமன்றத்தில் சிங்களவர்களுடனேயே அதிகம் பேசுகிறார் என்றும் ஒரு தமிழ்ப் புலனாய்வு ஊடகவியலாளர் கண்டுபிடித்தார். அங்கு போய் எவருடனும் பேசாமல் பர்தா போட்டுக்கொண்டிருக்க வேண்டும்; சிற்றுண்டிச் சாலையிலும் எவருடனும் பேசக்கூடாது என்றா இந்த 100% தேசிய வாதிகள் கருதுகின்றனர். இவர்கள் அங்கு போனாலும் நிச்சயம் இதைத்தான் செய்வார்கள்.

'ஜனநாயகத்துக்கான இளைஞர்' என்ற தலைப்பிலான சந்திப்பில் 13 பிளஸ் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தா குறிப்பிட்ட விடயம் உட்பட பல்வேறு யதார்த்தமான விடயங்களை சாணக்கியன் குறிப்பிட்டதைக் கவனிக்கவில்லை.

பன்னாடை போல கஞ்சல்களை தக்க வைக்காமல் அன்னம் போல பாலை மட்டும் அருந்தும் பண்பினை இனி எந்த வயதில் கற்றுக்கொள்ளப் போகின்றனர் இந்த விமர்சகர்கள்.

சாணக்கியன் வேண்டுமென்றே திலீபன் நாள் தொடர்பான வழக்கில் புகுத்தப்பட்டார் என்ற கண்டுபிடிப்பும் வேறு. ஏற்கெனவே தாங்கள் தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக பொலிசார் சாணக்கியனிடம் தெரிவித்ததை வசதியாக மறந்து விட்டனர்.

தவராஜா சிறந்த வழக்கறிஞர்தான். பல முன்னாள் விடுதலைப் புலிகளை சிறையில் இருந்து விடுத்திருக்கிறார். இது சுமந்திரனால்கூட சாத்தியமாகாத விடயம். அதற்காக தவராஜா மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வராமல் விட்டதை நியாயப்படுத்தியும், சாணக்கியனை கொச்சைப்படுத்த சுமந்திரனின் வருகையை பயன்படுத்துவதும் தர்மத்துக்கு ஏற்றதல்ல.

எப்படியோ மட்டக்களப்பு நீதிமன்றில பிரபல எழுத்தாளர் எஸ் பொவின் மகன் அனுரா உட்பட சில இளைஞர்கள் தொடர்பான வழக்கில் ஆஜராக மு.சிவசிதம்பரம் வருகை தந்த போது அனைத்துச் சட்டத்தரணிகளும் ஒரே நிலைப்பாடு எடுத்ததைப் போன்று இந்த வழக்கிலும் தமிழ்த் தேசியம் உயிரோடு இருப்பதை உணரமுடிகிறது.

இந்த வில்லங்களுக்குள் பொன். செல்வராஜாவை மட்டக்களப்பு விவகாரங்களுக்காக நியமித்து தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறார் மாவை . மக்கள் உணர்வை எந்த வயதில் புரிய முயற்சிக்கப்போகிறார் இவர். தந்தை செல்வா காலம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை

அறவழி மற்றும் ஆயுதப் போராட்டத்தில் ஈடு பட்ட பாலிப்போடி சின்னத்துரையை கட்சியின் செயலாளராக்குங்கள் என விடுத்த வேண்டுகோள் கிணற்றில் போட்ட கல்லுப்போல் இருக்கிறது.தனது இளமைக்காலம் முழுவதையும் தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணித்த யோகன் பாதரின் விடயத்தை கவனத்திலெடுக்காமல் 2015 ல் விருப்பு வாக்கில் கடைசி இடத்தைப் பிடித்தவரை நியமித்து கட்சிக்கு இறுதிச் சடங்கு நினைக்கிறாரா மாவை .புதிய சுதந்திரனில் வெளிவரும் கட்டுரைகள் அரசியல் வாதிகளில் மாவைக்கு மட்டுமே

அற வழி போராட்டத்தில் சம்பந்தமுண்டு என நிரூபிக்க முயல்கின்றன . அதை விடுத்து யோகன் பாதர் போன்றோரை கவனத்தில் எடுக்க முடியாதென்பதும் ஒரு நிலைப்பாடு போல உள்ளது.

கிழக்கின் யதார்த்தத்தை புரியாமல் மாட்டின் ரோட்டில் நடக்கும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதை எப்போது நிறுத்தப்போகிறார் மாவை .

சாணக்கியனுக்கு எதிராக தேர்தல் காலத்திலும் பின்னரும் செயற்படுவோர் தொடர்பாக சுட்டிக்காட்டியதை தான் பொருப்படுத்தப்போவதில்லை என மாவை கருதுவதின் வெளிப்பாடே பொன். செல்வராஜாவின் நியமனம் .

கருணா, பிள்ளையான், வியாழேந்திரனை எதிர்கொள்ள செல்வராஜா போன்றோரால் இயலாது என்பது மாவைக்கு புரியாததல்ல. இப்போது சாணக்கியனுக்கெதிராக (வடக்கைச் சேர்ந்தோர் உட்பட) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிடில் தமிழரசுக் கட்சிக்கான இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான்.

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை