எதைச் சாதிக்க நினைக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி?

82shares

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நகர்வுகள் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்கிற கேள்வி ஆரம்ப நாட்களிலிருந்து தற்போது வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

போருக்குப் பின்னர் தமிழர் தேசம் மிகப் பெரும் அழிவை சந்தித்து மீண்டு வரத் துடிக்கிறது. எனினும், சொற்பமான சலுகைகளும், அபிவிருத்தித் திட்டங்களுமே தமிழர் பகுதியை நோக்கி வருகின்றன.

ஆனைப்பசிக்கு சோளப்பொரி என்பது போல் இருக்கிறது தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்திச் செயல்பாடுகள். இங்கே தமிழர்களின் தேவை அபிவிருத்தியா அல்லது அரசியலா என்கிற கேள்வியை பலர் தொடுக்க இயலும். அரசியல் தீர்வுத் திட்டம் என்பது பல ஆண்டுகாலப் போராட்டத்தினால் இன்னமும் கிடைக்கவில்லை.

யுத்தத்தின் அழிவுகள் இன்னமும் தமிழரை தலை நிமிரச் செய்யவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தேவையாக இருப்பது அபிவிருத்தி. அபிவிருத்தி ஒரு புறமும் அரசியல் நகர்வுகள் மறுபுறமும் ஒருங்கே நகர்த்தப்படும் போது மட்டுமே தமிழர்களின் அடுத்தகட்ட இருப்புக்கான வழியாக அது அமையும்.

மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கையில் அவர்களை அரவணைக்காமல், அபிவிருத்திப் பாதையில் இழுத்துச் செல்லாமல் எப்பயணும் ஏற்படாது.

ஆக, தமிழர் தரப்பின் பிரதிநிதிகள், அது நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்தாலும் சரி, பிரதேச சபை பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் தமிழர் பகுதியின் அபிவிருத்தி திட்டத்தையும் கையிலெடுத்தே நகர வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இச்சூழ்நிலையில், யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 5 மேலதிக வாக்குகளால் இன்றைய தினம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ். மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் 19 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ள நிலையில், 2 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

அந்த வகையில் இலங்கை தமிழரசிக் கட்சியின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்ரஸ்ஸின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அரசியல் நகர்வுகள் எது? தொடர்ச்சியாக அத்தனை விடயங்களிலும் அரசாங்கத்தையும், தமக்கு எதிராக இருப்பவர்களையும் எதிர்ப்பது மட்டும்தானா?

இன்றைய வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்ததன் மூலமாக இன்று இவர்கள் சாதித்தது என்ன? அல்லது தோற்கடித்ததன் மூலமாக பெற்ற நன்மை தான் என்ன?

ஈபிடிபி கட்சியினருடன் இணைந்து இன்றைய வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்திருக்கிறார்கள். அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன், இணைந்து செயலாற்ற முடியும். அது மாத்திரமல்லாது அரசாங்கத்துடன் இணைந்துள்ளவர்கள் என்கிற வகையில் அவர்களால் எக்காரியத்தையும் நிறைவேற்றிடவும் முடியும்.

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதன் அடிப்படையில் இவ்வாறு செயல்படுகிறார்கள்? தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் யாழ். மாநகர சபை இருப்பதனால் தமக்கு எதிரானவர்கள் என்கிற எதிர்ப்பு அரசியலை இங்கும் செய்கிறார்களா?

அதாவது தமிழர் அபிவிருத்தி செயல்பாடுகளில் இவர்களின் எதிர்ப்பை காட்ட விளைகிறார்களா என்னும் கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.

தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை இங்கிருக்கும் ஏனைய பிரதிநிதிகளுடன் இணைந்து பெற்றுக் கொள்வதை விடுத்து தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியல் செய்வதே கொள்கை எனில், தெரிவு செய்த மக்களுக்கு இவர்கள் எதனைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

யாருக்கான அரசியல் இது? தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கான அரசியலா? அல்லது தமிழ் மக்களுக்கான அரசியல் அபிவிருத்தி செயல்பாடுகளா?

உங்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்த மக்களுக்கு இவர்கள் எதை கைமாறாகக் கொடுக்கப் போகிறார்கள்?

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அபிவிருத்தியொன்று தேவைப்படுகிறது. அதனை செய்வதற்கு எதிர் ஆளும் தரப்பு என்று இருப்பதைக் காட்டிலும் அபிவிருத்தி விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.

ஒற்றுமை மட்டுமே தமிழர்களை தலைநிமிரச் செய்யும், அபிவிருத்தி விடயத்திலாவது அதனை சரிவரச் செய்யுங்கள்.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு