ஜனாஸா எரிப்பு, ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் அவலம் - யூ.எல்.எம்.என்.முபீன்

31shares

கொரோனா மரணத்தை தழுவும் முஸ்லிம்களின் ஜனாஸாவை பலவந்தமாக எரிக்கும் கொடுஞ்செயல் தொடர்கதையாய் தொடர்கின்றது. இது தொடர்பில் முஸ்லிம்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காய் மாறியதுடன் அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்க இம்மியளவும் விரும்பாத மனநிலையுடன் தொடர்ந்தும் செயற்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ராவின் தொடர்ந்தும் கொரோனா மரண உடல்கள் எரிக்கப்படும் என்ற அறிவிப்பு பறைசாற்றுகிறது.

கொரோனா முதல் அலை நாட்டை தாக்கிய போது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியுடன் அதாவது சிங்கள ஜனாதிபதி என்ற இருமாப்புடன் சிங்கள பெருந்தேசிய வாக்குகளாலேயே நாடாளுமன்ற தேர்தலையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் பல்வேறு அடிப்படை கலாசார மற்றும் மார்க்க விடயங்கள் சிங்கள மக்களின் மத்தியில் பிழையாக பிரசாரப்படுத்தப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் சிங்கள மக்களை பெருந்தேசியவாத அலைக்குள் ஓர் அணியாக்க பெரிதும் உதவியதுடன் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள பெரிதும் துணை புரிந்தது.

அப்போதைய சூழ்நிலையில் தேர்தல் இலக்கை அடைந்து கொள்ள ஜனாஸா எரிப்பு ஒரு கருவியாக அரசுக்கு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஏன் எரிக்கப்படுகின்றன?

கொரோனா பரவல் ஆரம்ப நாட்களின் பொருத்தமான ஆய்வு முடிவுகளின் பற்றாக்குறையால் அடக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தை வாதத்திற்கு முன்வைத்தால் இன்று அடக்க முடியும் என்ற விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் பரவலாக கிடைத்துள்ள நிலையில் ஏன் அரசு எரித்தல் என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் உள்ளது?

இது பெருந்தேசிய அடிப்படை வாதிகளை திருப்திப்படுத்தவே அன்றி வேறில்லை. அரசு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற தான் விதைத்த இனவாதத்திலிருந்து தன்னால் விடுபட முடியாமல் உள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேசத்திலிருந்தும் அரசின் மேல் விடுக்கப்படும் அழுத்தங்களை கையாள இந்த அரசு நிபுணர் குழு என்ற மாயாஜால வித்தையை கனகச்சிதமாக கையாளுகிறது.

இலங்கையின் மருத்துவ துறையின் இரண்டு முக்கிய அமைப்புகள் கொரோனா மரண உடல்களை அடக்கம் செய்யவும் முடியும் என்ற தமது விஞ்ஞானபூர்வமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன.

இலங்கை சமுக மருத்துவ கழகம் (The College of Community Physicion of Sri Lanka (CCPSL)) மற்றும் இலங்கை மருத்துவர் சங்கம் Sri Lanka Medical Association (SLMA)ஆகிய இரு அமைப்புகளே இத் தெளிவுபடுத்தல்களை பகிரங்கமாக அறிவித்துள்ளன.அதாவது மரணித்தவரின் இறுதிக் கிரிகைகள் தொடர்பிலான எரிப்பதா அல்லது அடக்குவதா என்பதற்கான தெரிவு அக்குடும்பத்தினருக்கே விடப்பட வேண்டும். அது சுகாதார அமைச்சின் கடுமையான வழிகாட்டல் சிபாரிசுடன் வழங்கப்பட வேண்டும். என இம் முக்கிய இரு அமைப்புகளும் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

இவ்வறிவிப்புகளை சற்று விளக்கமாக நோக்கின்

இலங்கை சமூக மருத்துவ கழகம் (CCPSL) தனது உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜனாஸாவை அடக்குவதால் அந் நோய் பரவுவதற்கான உறுதியான ஆதாரம் இல்லை. கட்டாய எரிப்பை விடுத்து குடும்ப உறுப்பினர்களின் இறுதிக்கிரியை செய்வதற்கான விருப்பத் தெரிவிற்கு விடப்பட வேண்டும். கட்டாய எரிப்பு தீர்மானம் சர்வதேச நெறிமுறைகளுக்கு விரோதமானது.

நாட்டின் பிரபலமான வைரஸ் நிபுணர்கள் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் நாட்டின் அதிகார மையத்தின் கட்டாய எரிப்பு தீர்மானத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். மேற்படி கட்டாய தீர்மான விதிமுறைகள் இலங்கையின் இந்நோயை முகாமைத்துவம் செய்வதில் பல்வேறு கலாசார விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது நோய்ப்பரவல், கண்டுபிடித்தல், சிகிச்சையளித்தல் நோய் தடுப்பு மற்றும் இறந்த உடல்களை முகாமை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும். இத்தீவிரப் போக்குடைய தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்வதற்கான மாற்று சிந்தனை விஞ்ஞான ரீதியிலான விவாத தடயமாக தாம் முன் வைக்கிறோம். என இலங்கை சமுக மருத்துவ சங்கம் அறிக்கை இட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தனது அறிவிப்பில்,

"உலகத்தை மோசமாக தாக்கும் இவ் வைரஸ் இலங்கையையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில்

கொரோனா மரண உடல்களை கையாளும் இலங்கை கட்டாய எரிப்பு தீர்மானம் இலங்கையின் இன நல்லிணக்கத்தையும் பல்லினத் தன்மையையும் பாதித்துள்ளது. இதற்கு எல்லா சமூகமும் ஏற்றுக் கொள்ளும் பொருத்தமான மரணித்த உடல்களை அகற்றும் கொள்கை அவசியம்.ஆரம்பத்தில் கிடைக்கப் பெற்ற வரையறையிலான விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு உடல்களை எரிப்பதற்கான கட்டாய தீர்மானத்தினால் நாட்டில் குறிப்பிட்ட சமுதாயங்களில் கலவர மனநிலையை உருவாக்கியுள்ளது. இது நோய் தடுப்பு விடயத்தில் மக்கள் ஒத்துழைக்காத நிலையை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

புதிய விஞ்ஞான தீர்மானங்களின்படி எரிக்கும் தீர்மானம் அவசரமாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். கிடைக்கின்ற விஞ்ஞான தகவல்களின்படி அடக்கம் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளது.

இதனிடையே கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாக மற்றுமொரு இரண்டாம் நிபுணர் குழுவை நியமிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது.

இவ் இரண்டாவது நிபுணர் குழு

பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையில் பதினொரு பேர் கொண்ட குழுவை கொரோனா ஒழிப்பிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சணி பெணாண்டோபுள்ளே நியமித்திருந்தார்.

இவ் நிபுணர் குழு "ஜனாஸாவை அடக்கம் செய்யவோ எரிக்கவோ முடியும்" என தனது பரிந்துரையை வழங்கியிருந்தது.

இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா எதிர்ப்புத் தெரிவித்தார். அத்துடன் இவ்வளவு காலமும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழைய முதலாவது நிபுணர் குழு இவராலேயே நியமிக்கப்பட்டிருந்தது.

கடந்த 31/12/2020 அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு நிபுணர் குழுவும் கலந்து கொண்டனர். பவித்ராவின் குழு ஜனாஸா அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் முடிவின்றி கூட்டம் கலைந்தது.

பவித்ரா நியமித்த முதலாவது நிபுணர் குழுவில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணத்தினாவலேயே இரண்டாவது நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

கொரோனா ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சரை நியமித்த அரசாங்கம் அவர் மூலம் வைரஸ் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் அடங்கிய இரண்டாம் குழுவை நியமித்த பின் எரிப்பை தூக்கிப் பிடித்து அரசியல் செய்யும் முதலாவது நிபணர் குழுவை மீண்டும் அழைத்து ஆலோசனைகள் கேட்டுள்ளது.

முதலாவது நிபுணர் குழுவில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணதாதினால் இரண்டாவது நிபுணர் குழு அமைக்கப்பட்டால் ஏன் முதலாவது நிபுணர் குழுவை கலைக்கவில்லை?

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இரண்டாம் குழுவில் உறுப்பினராக செயற்பட்ட பேராசிரியர் நீலிகா மலவிகே கலந்து கொண்டனர். இவர்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்வதை தவிர்த்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த பேராசிரியர் நீலிகா மலவிகே "உண்மையில் இந்த விவகாரத்தில் எனக்கு தோன்றுவது தற்போது இதில் விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் மட்டும் தாக்கம் செலுத்தவில்லை. இதில் மேலும் பல்வேறு விடயங்கள் சேர்ந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நான் பேச விரும்பவில்லை." என்றார்.

மேற்படி விடயங்கள் அரசின் இரட்டை முகத்தை தெளிவுபடுத்துகின்றது.

ஜனாஸா எரிப்பை தொடர வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது போல் தெரிகிறது. மாகாண சபை தேர்தல் வரை இது இழுபடுமோ தெரியவில்லை.

உலக சுகாதார நிறுவனம், உலக மற்றும் இலங்கை வைரஸ் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள், இலங்கை சமூக மருத்துவ கழகம், இலங்கை வைத்திய அஷோஷியேசன், இலங்கை அரசு நியமித்த இரண்டாம் நிபுணர் குழு என்பன அடக்கம் செய்ய முடியும் என விஞ்ஞான பூர்வ ஆதாரங்களுடன் கூறும் நிலையில் தொடர்ந்து முஸ்லிம்களின் இறுதி மார்க்கக் கடமையில் அரசு விடாப்பிடியாக இருப்பது அரசு தனக்கு தானே வைத்துக் கொள்ளும் சூனியமாகும்.

நமக்கு இருக்கும் ஒரேயொரு தீர்வு அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவது மட்டுந்தான்.

அல்லாஹ் போதுமானவன்.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு