யாழ்.பல்கலைக்கழகத்தின் கரிநாள்! மாற்று வடிவங்களில் தொடரும் இனவழிப்பு - ஜெரா

167shares

இலங்கையானது விநோதமான முறைகளில் எல்லாம் இனவழிப்பு செய்யும் நாடாக அறிமுகப்பட்டிருக்கிறது. ஓரினத்தை முற்றாக அழிப்பதற்குத் திட்டமிடும் அரசுகள், பல்வேறு படிமுறைகளை செயற்படுத்துகின்றன.

தரப்படுத்தல் மாதிரியான வடிகட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்தி சொத்தழிப்பு செய்வது, பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்துவது, அச்சுறுத்தலை ஏற்படுத்தி தாய்நிலத்தை விட்டுப் புலம்பெயரச் செய்வது, குறித்தவோர் இனத்தை எல்லாவகையிலும் நலிவுறச் செய்தபின்னர், குண்டுகளை வீசி கொன்றொழிப்பது, அதிலும் ஆண்களை இலக்கு வைத்து அந்த இனக்குழுமத்தின் ஆண்களை இல்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகள் இனவழிப்புச் செயற்பாடுகளாகக் கொள்ளப்படும்.

இனவழிப்பின் வடிவம் இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் 2010 வரைக்கும் இடம்பெற்றதை அவதானித்திருக்கிறோம். 2010 ஆம் ஆண்டின் பின்னர் இந்த இனவழிப்பு வடிவங்கள் வேறுவடிவம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. போதைப்பொருள் பயன்பாட்டு ஊக்குவிப்பு, பண்பாட்டு சிதைப்பு, நிலத்தின் பௌதீக வெளியை மாற்றக்கூடிய விதத்தில் பௌத்தமயமாக்கல், சுற்றுச்சூழல் அழிப்பு, பாரம்பரிய உணவுக் கலாசார மறுப்பு, நினைவேந்தல் மறுப்பு, நினைவத்தூபி சிதைப்பு என இந்தப் பட்டியல் நீளும். இவை ஒவ்வொன்றுமே இனவழிப்புக் குறித்த தனித்தனி ஆய்வுக்குரியன. இதில் நினைவுத்தூபி அழிப்புக்களை மாத்திரம் பார்க்கலாம்.

பண்பாட்டு அழிப்பு

ஈழப் போர் முடிவுக்கு வந்த கையுடன் அரச படைகள் செய்த முதற்காரியம் எதுவெனில், தமிழர் தாயக நிலப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் நினைவில்லங்கள், மாவீரர் நினைவுத்தூபிகள், படுகொலை நினைவுத்தூபிகள், கட்டவுட்கள், படுகொலையை நினைவுபடுத்தும் பேருந்து நினைவிடங்கள் போன்றவற்றை அழித்தமையாகும்.

கடந்த காலம் தொடர்பில் நினைவையேற்படுத்தும் அனைத்து நினைவில்லங்களும் இரவோடிரவாகவே இடித்தழிக்கப்பட்டன. இவ்வாறு ஏன் இடித்தழிக்கப்பட்டன? பொதுவாகத் தமிழ் பண்பாட்டில் இறந்தோர் வழிபாடு முக்கியமிக்கப் பண்பாட்டு நிகழ்வாக இருக்கிறது. இறந்தோரை முழுமையாக மண் தாழியொன்றினுள் வைத்து அவர் இறந்த பின்ன வாழ்வதற்குரிய அனைத்துப் பொருட்களையும் அதனுள் இட்டு மண்ணுள் புதைத்த ஈமத்தாழி தொடக்கம் நடுகல் வரைக்கும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் இதற்கு உண்டு. அதாவது இறந்தவர்கள் இறைவராவார் என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் இவ்வெண்ணம் சந்ததி கடத்தப்பட்டிருக்கிறது.

இந்த நற்பண்பானது நம் அரசியலையும் வழிநடத்தக்ககூடியது. அது இனம்சார் உளவியல் கட்டமைப்புடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பது. எனவேதான் இனழிப்பாளர்களின் முதற்தெரிவாக நினைவில்ல அழிப்புக்கள் இருக்கின்றன. மனதளவில் குமுறியிருக்கின்றனர் அந்தவகையில் தமிழர் தாயக நிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த நினைவில்லங்கள், நினைவுத்தூபிகள் அழிக்கப்பட்டாயிற்று. அவ்விடத்தில் நினைவுகள் மட்டும் கனதிமிக்கவையாய் இருக்கின்றன. அந்த நினைவுகளுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் கடந்த காலம் பற்றிய கற்பித்தல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெளிவாகக் கற்பிக்கப்படவில்லை. நம்மை நாமே சுயதணிக்கைக்குட்படுத்தி பழக்கிக்கொண்ட வாழ்வுப் பொறிமுறை இந்தக் கற்பித்தலை தடைசெய்தே வந்திருக்கின்றது. எனவே கடந்த காலங்களைக் கற்பிக்கும் நினைவுசார்ந்த இடங்களை அழிக்கும்போதெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இனமாகக் கூட்டுத்திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் மனதளவில் குமுறி உளநோய்வாய்ப்பட்டிருக்கின்றனர்.

பல்வேறு அழுத்தங்கள்

இவ்வாறு தமிழ் தேச வெளியில் இருந்த அனைத்து நினைவிடங்களும் அழிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் எஞ்சியிருக்கும் நினைவில்லங்கள் மாத்திரமே அழிக்கப்படாமல் இருந்தன. மற்றறைய இடங்களில் செயற்பட்டதைப் போல இராணுவத்தால் அடாவடியாக இறங்கி அழிக்கமுடியாத சூழல் நிலவியது.

எனவே அடிமை சேவகம் செய்யக்கூடிய தரப்பொன்றை பல்கலைக்கழக உயர்பதவிகளில் அமர்த்தியபின் அந்தக் காரியங்கள் நிறைவுசெய்யப்பட்டிருக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பான கட்டடிடங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரால் அடையாளப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் இனவழிப்புக்குள்ளான லட்சக்கணக்கான தமிழ் மக்களின் நினைவாக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபி திருட்டுத்தனமாக இருட்டில் அழிக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுக்க நின்ற மாணவர்களை “பெக்கோவை ஏற்றிக்கொல்லுவோம்” என்ற மிரட்டல் பத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் மிலேச்சத்தனமாக செயற்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் இருட்டில் இடம்பெற்றாலும் ஊடக வெளிச்சங்களுக்கு முன்னால் நிகழ்த்தப்பட்டவை. இந்தத் தான்தோன்றித்தனமான அதிகாரம் அறிவுஜீவிகளுக்கு கிடைக்க வேண்டுமெனில், அதற்குப் பலமான பின்னணி இருக்க வேண்டும். அதனையும் துணைவேந்தர் தன் ஒலிக்குறிப்பில், “பல்வேறு அழுத்தங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே துணைவேந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் எந்த விடயத்தையும் செய்துவிடமுடியும் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அத்தோடு கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இராணுவமும், சிங்கள மாணவர்களும் அமைத்திருக்கும் போர் வெற்றி நினைவில்லங்களையும், பௌத்த விகாரைகளையும் சட்டரீதியானவை என்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

கறுப்புப் பக்கம்

இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக இரவிரவாக மாணவர்களும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் கூடியும் அதற்கு பல்கலைக்கழகம் எவ்விதப் பொறுப்பான பதில்களையும் வழங்கவில்லை. இராணுவத்தையும் பொலிஸாரையும் பல்கலைக்கழகத்தக்கு உள்ளே எடுத்துக்கொண்டு, மாணவர்களைத் தெருவில் விட்டு கதவைப் பூட்டும் இழிகாரியத்தையே பல்கலைக்கழகத்தால் செய்யமுடிந்திருக்கிறது.

யாழ். பல்கலைக்கழக வரலாற்றின் கறுப்புப் பக்கத்தின் முதற்தொடக்கமாகவே இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது. இதுபோதாதென்று போராடும் மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டதுடன், களத்தில் நிற்பர்வர்கள் மீது கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் பாயும் எனப் பொதுவெளியில் அறிவிப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இந்த நாடு சர்வதேச நோய்ப்பரவல் நிலமைகளைத் தன் இனவழிப்பு அரசியலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

பதவி மோகர்களின் தற்குறித்தனம்

தமிழர் பகுதியின் புலமைசார் இதயமாகக் கொள்ளப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் இச்செயற்பாடு, இனநலன் சார்ந்து சிந்திக்கத் தலைப்படாத பதவி மோகர்களின் தற்குறித்தனம். இந்தத் தற்குறித்தனமானது இனத்தின் வலியை, அந்த வலி ஏற்படுத்ததித்தரும் வலிமிகு அரசியலை அழித்திருக்கிறது. அழிக்க கங்கணம் கட்டிநிற்கும் சக்திகளுக்கு ஏவல்பேய் வேலைபார்த்திருக்கிறது. ஆயினும் இதில் இருக்கம் ஒரு நம்பிக்கை என்னவெனில், இது மாதிரியான சம்பவங்களே, தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் இனவழிப்பை இன்னமும் உலகறிய அறிக்கப் படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுதான். அதற்கு இந்தச் சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரத்திற்குள் வெளியான கனேடிய நகரொன்றின் நகர மேயரின் ருவீற்றர் குறிப்பே சான்றாகும். அதைவிட தமிழகத் தலைவர்கள் பலரும் உடனடியாகவே தமது கண்டனத்தை வெளியிட்டமையும் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அரசியல் உறவை மீள்நினைவுபடுத்திப்போயிருக்கின்றது.

முடிவாக,

பிரச்சினை ஆரம்பித்து இரண்டாம் நாளாகிய இன்று, பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இவ் அறப்போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கின் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, முஸ்லிம் அரசியல்வாதிகளும், அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் தம் ஆதரவைத் தெரிவித்துவருவதோடு, கூட்டாக இணைந்து நாளைய தினத்தை (11.01.2021) ஹர்த்தலாகக் கடைபிடிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நினைவேந்தல் இடிப்பிற்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று இராணுவத் தளபதி தெரிவித்ததைப்போன்றே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் தெரிவித்துவிட்டது. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரோ, தனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின்பேரிலேயே இடித்ததாகவும், மாணவர்களின் உணர்வு தனக்கும் உண்டெனவும், அரசியல்வாதிகள் அனுமதி எடுத்துத் தருவார்களாயின் இடிக்கப்பட்ட தூபியை மீளமைக்கத் தான் விண்ணப்பிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஓரிடத்திலும் யார் அழுத்தம் தந்தார்கள் என்றோ, அதற்குரிய ஆதரங்களை இவைதான் என்றோ துணைவேந்தர் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்யவில்லை.

உண்மையில், கடந்த காலங்களில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு இவ்விதமான அழுத்தங்கள் வரும்போது எவ்வகையில் அவற்றைக் கையாண்டு தப்பித்தார்கள் என்பதையாவது இந்தத் துணைவேந்தர் கற்றுக்கொண்டிருக்கலாம் என்ற விமர்சனங்கள் அவர்மீது முன்வைக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்குள் இயங்கும் அமைப்புக்களே அவரை விமர்சிக்குமளவுக்கு நிலையை கையாளத் தவறியவராகவே கணிக்கப்படுகிறார்.

இந்நிலமையின் நீடிப்பில் துணைவேந்தர் பதவி விலகுவாராயின், தகுதி வாய்ந்த அதிகாரியையோ அல்லது புதிய துணைவேந்தரையோ அரசு நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுபவர் தமிழராகத்தான் இருக்கவேண்டியதுமில்லை. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் பெரும்பான்மையின மாணவர்களுக்கான தனி ஒன்றியங்கள், வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான சொத்தல்ல என்கிற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

எனவே இந்த நினைவேந்தல் தூபி அழிப்பின் பின்னால் இருக்கும் அரசியல் இன்னும் சில வாரங்களிலேயே அம்பலப்பட்டு நிற்கப்போகிறது. தமிழர்களுக்கு என்றிருந்த ஒரே புலமைத்துவ அடையாளமான யாழ். பல்கலைக்கழகத்தையும் இழந்துபோகும் நாட்கள் அண்மையில் வந்துநிற்கின்றன. இதுவும் நம் புத்திசீவிகள் கையாளத்தவறிய இடியப்ப சிக்கலான பிரச்சினை இது.

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்