வல்லாதிக்கச் சக்திகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் -அ.நிக்ஸன்

0shares


ஈழத்தமிழர்கள் இன அழிப்புக் கோரிக்கையில் பிடியாக நிற்காமல், இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்கச் சக்திகளுக்கு ஏற்றவாறு செயற்படுகின்றமை இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு வாய்ப்பாகவே அமையும். குறிப்பாகச் சிங்கள அரசியல் தலைவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள், இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பைக் காப்பாற்றுவதில் ஒரே இலக்கோடு செயற்படுகின்றனர். 1948 இல் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றம், இன்று வரை தொடர்கிறது.

வடக்குக் கிழக்கில் 1983 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள், புத்த விகாரை கட்டும் செயற்பாடுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடனும் 2015 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறுவனங்கள், திணைக்களங்கள் மூலமாகவும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் தொடருகின்றன.

அதாவது அன்று ஜே.ஆர் ஜயவர்த்தன ஆரம்பித்து வைத்த சிங்களக் குடியேற்றங்கள் இன்று ராஜபக்ச ஆட்சிவரை தொடருகின்றன. அத்துடன் சர்வதேச அரசங்கில் இலங்கையின் இறைமையைக் காப்பாற்றவும் இன இழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கான சர்வதேச விசாரணைகளைத் தடுப்பதிலும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருமித்த கருத்தோடு செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கை அரசு என்ற கட்டமைப்புடன் அதில் பணியாற்றும் சிங்கள இராஜதந்திரிகள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆட்சிமாறினாலும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விடயங்களைக் கையாள்வதில் ஒருகூட்டுப் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு செயலாற்றுகின்றனர். இதனை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தெளிவாகக் காணமுடிகின்றது.


ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சென்ற பத்து ஆண்டுகால சூழலில் ஒரு கூட்டுப் பொறிமுறைக்குள் செயலாற்றியிருக்க வேண்டிய தமிழ்த்தேசியக் கட்சிகள் தனித்தனியாகச் செயற்பட்டு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையின் பிரதான அம்சத்தை வலுவிழக்கச் செய்கின்றனர்.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசம் என்ற கோட்பாடு நிலைநிறுத்தப்படுவதற்கு ஏதுவான முறையில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நகர்வுகள் அமையவில்லை என்பதை, ஜெனீவாவைக் கையாள்வது தொடர்பாக அவர்கள் தயாரித்த பொது ஆவணம் எடுத்துக் காட்டுகின்றது.

இன அழிப்பு, சுயநிர்ணய உரிமை, தேசம் என்பதைப் பிரதான அடிப்படைகளாக முன் நிறுத்திக் கடந்த பத்து ஆண்டுகள் தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபட்டுக் கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரு ஆசனங்களைப் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும். அந்தப் பிரதான அடிப்படை அம்சத்தில் இருந்து விலகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் ஈழத்தமிழர்களின் சார்பில் பிரதிபலிக்கக் கூடிய கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக முன்வைத்துள்ளன என்பது நீண்டகால இடைக்குப் பின்னரான மகிழ்ச்சிதான்.

ஆனால் அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான பிரதான அம்சங்கள் நீக்கம் செய்யப்பட்டு, சிங்கள ஆட்சியாளர்களைச் சமாளிக்கக் கூடிய கோரிக்கையாகவே அந்தப் பொது ஆவணம் அமைந்துள்ளது.

இன்னும் சொல்வதாக இருந்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்க சக்திகளின் விரும்பங்களுக்கு ஏற்ற முறையிலான வாசகங்களுடனேயே அந்தப் பொது ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றதெனலாம்.
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு அடிப்படையில் இலங்கையைத் தங்கள் பக்கம் எடுக்க வேண்டும் என்பதில் இந்தியா. அமெரிக்கா போன்ற நாடுகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. ஆகவே ஈழத்தமிழர்கள் இலங்கையைக் கோவப்படுத்தும் முறையில் தங்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்துவிடக் கூடாதென இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்கச் சக்திகள் பரிந்துரைத்தமைக்கு அமைவாகவே இந்தப் பொது ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறதோ என்ற கோள்விகள் எழாமலில்லை.

ஏனெனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ள ஆவணத்தில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் காணப்படும் சில வாசகங்கள் (ஆங்கிலச் சொற்கள்) ஒன்றாகவே இருக்கின்றன.

ஐ.சி.சி எனப்படும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென்ற ஆணையாளரின் பரிந்துரையும் உறுப்பு நாடுகள் தமது நாடுகளில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்ற ஆலோசனையும் தற்காலிக மகிழ்ச்சியைத் தரலாம்.

ஆனால் ஆணையாளரின் இந்தப் பரிந்தரைகள் என்பது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இலங்கை பற்றிய ஒரு அவதானக் குறிப்பு மாத்திரமே. இந்த அவதானக் குறிப்பையே ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடமும் கைளளித்திருக்கிறார்.

அமர்வு மார்ச் மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஆணையாளர் தனது பரிந்துரைகளை உறுப்பு நாடுகளுக்கும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாட்டுகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அந்த விதிமுறைக்கு அமைவாகவே சென்ற நவம்பர் மாதம் அந்தப் பரிந்துரைகள் இலங்கையிடம் கைளிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பிரிந்துரைகள் நிச்சயமாகத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரநிதிகளுக்கும் காண்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அந்தப் பரிந்துரைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டிருக்கலாம். இதனடிப்படையிலேயே தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து தயாரித்த பொது ஆவணத்தில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரதான அம்சத்திற்குள் அடக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சிவில் அமைப்புகள் வலுறுத்தியதனால் தமிழ் இன அழிப்புப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கான சர்வதேசச் சுயாதீன விசாரணைப் பொறிமுறை பொது ஆவணத்தில் கோரப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் ஆணையாளரின் பரிந்துரையில் இன அழிப்புப் பற்றிய விசாரணை தொடர்பாக எதுவுமே இல்லை. ஆகவே ஆணையாளரின் இந்தப் பரிந்துரை என்பது இலங்கை அரசாங்கத்துக்கான ஓர் எச்சரிக்கை மாத்திரமே. ஏனெனில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்தினாலும் சர்வதேச வல்லாதிக்க நாடுகள் அதற்கு அனுமதிக்குமா என்பது கேள்விதான். அங்கே வீற்றோ அதிகாரங்கள்கூடப் பயன்படுத்தப்படலாம்.

இந்தத் தடைகளைக் கடந்து இலங்கையைக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தினாலும்கூட போர்க்குற்ற விசாரணை. மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகள் மாத்திரமே நடைபெறும். அங்கு இன அழிப்புப் பற்றிய விசாரணைகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்கின்றனர் சர்வதேசச் சட்ட வல்லுநர்கள்.

அத்துடன் 2002ஆம் ஆண்டுதான் ரோம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதால், அதற்குப் பிந்திய குற்றங்கள் குறித்தே சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும் அதற்கு முந்திய மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அல்லது இன அழிப்புப் பற்றிய விசாரணைகள் நடைபெறக்கூய வாய்ப்புகள் இல்லவேயில்லை. அத்தோடு இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுமில்லை. அமெரிக்காவும் கைச்சாத்திடவில்லை.

போர்க்குற்ற விசாரணை நடைபெறும்போது இருதரப்புகளும் இழைத்த குற்றங்கள் விசாரிக்கப்பட்டு இலங்கைப் படை உயர் அதிகாரிகள் சிலர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டலாம். இலங்கையைத் திருப்திப்படுத்த, முன்னாள் விடுதலை உறுப்பினர்கள் சிலரும் தண்டிக்கப்படலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படலாம். ஐக்கிய நாடுகள் சபையும் புலிகள் மீது தடை விதிக்கலாம். பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் தண்டிக்கப்பட்ட இலங்கைப் படை அதிகாரிகள் விடுக்கப்படலாம். பதிலுக்கு தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு வழங்கப்படலாம்.

அத்தோடு ஈழத்தமிழர் விவகாரம் சர்வதேச அளவில் முடிவுறுத்தப்பட்டு விடும். ஆகவே ராஜபக்ச குடும்பமும், படை அதிகாரிகள் சிலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் விருப்பமல்ல. மாறாக இலங்கை அரசு என்ற கட்டமைப்பு கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈபட்டு வருகின்றது என்பதை நிரூப்பதே நிலைப்பாடு.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் அதில் இருந்து விலகிச் சர்வதேச வல்லாதிக்கச் சக்திகளின் விரும்பங்களுக்கு அமைவாக ஜெனீவா விவகாரத்தைக் கையாளுகின்றன. இலங்கை அரசாங்கமோ அன்றில் இருந்து இன்று வரை ஒரே நிலைப்பாட்டில் நின்று ஈழத்தமிழர் விவகாரத்தை உள்ளகப் பிரச்சனையாக மாற்றவே முற்படுகின்றது.

ஆணையாளரின் பரிந்துரைகளை நிராகரித்துப் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் பத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேசத் தொழில் நுட்ப உதவிகளை மாத்திரம் இலங்கை கேட்கக்கூடும்.

அப்படிக் கோரினால் மனித உரிமைச் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கக்கூடிய ஆபத்தும் உண்டு. ஆகவே இந்த ஆபத்துக்களைத் தடுப்பதற்குரிய மாற்று ஏற்பாடுகள் பற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஆலோசிக்கின்றனவா? மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் 4 இல் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாக இலங்கையை உறுப்பு நாடுகள் கொண்டுவர வேண்டும் அப்படி நான்கிற்குள் கொண்டுவந்தால் மாத்திரமே சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த முடியும்.

அதற்கான கோரிக்கைகளைக்கூடத் தமிழ்த்தேசியக் கட்சிகள் முன்வைத்துள்ளதா? வெறுமனே பொது ஆவணத்தை மாத்திரம் கையளித்துவிட்டுச் சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென்ற ஆணையாளரின் பரிந்துரை பற்றி மார் தட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே மார்ச் மாதம் மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக எடுக்கப்படப்போகின்ற தீர்மானமும் 2015 ஆம் ஆண்டு 30/1 தீர்மானம் போன்றதாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

பிரித்தானியக் காலனித்துவத்தில் ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்த ஈழத்தமிழர்கள் அடிமை விசுவாசிகளாக இருந்தது போன்றதொரு இழி நிலை இந்த நவீன யுகத்திலும் தொடருவதுதான் வேதனை. ஜெனீவாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க 1948 இல் தொடங்கிய சிங்களக் குடியேற்றம் அடுத்த சில ஆண்டுகளில் பூர்த்தியாகிவிடும் ஆபத்தே தென்படுகிறது.
இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!