நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு என்பது அளவிட முடியாத ஒன்று. கொரோனா பிடியினால் பாதிப்படையாத துறைகளே இல்லை. இதில் அதிகம் பாதிப்படைந்தது கல்வி துறையே ஆகும். நாட்டில் பல மாணவர்கள் தங்களது பருவக்கல்வியை இழந்துள்ளனர். இது ஒரு தலைமுறையின் பேரிழப்பாகும்.
மலையக மாணவர்களின் கல்வி நிலையை இந்த அசாதாரண சூழல் மிகவும் பாதித்துள்ளது. இதனால் மலையகத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் என்பது அதிகரித்துள்ளது. மலையகத்தை பொறுத்தவரை பாடசாலை இடைவிலகல் என்பது எப்போதும் பேசப்படும் ஒரு விடயதானமாகத்தான் இருந்து வருகின்றது. ஆனால் தற்போதைய சூழல் இதன் தீவிரத்தன்மையை உணர்த்தியுள்ளது. கொரோனா கால விடுமுறை மாணவர்களை மந்தமான கல்வி சூழலுக்குள் தள்ளிவிட்டது.
மாணவர்களுக்கும் கல்விக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்து செல்கிறது. கொரோனா கால விடுமுறை மாணவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அதற்கு பதிலாக தொலைபேசி பாவனை, தொலைக்காட்சி பாவனை, பயனற்ற பொழுதுபோக்கு என மாணவர்கள் பொழுதை கழித்தனர்.
இணையவழியாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் மலையகத்தில் எல்லா மாணவர்களினாலும் அதனை அனுபவிக்க முடிவதில்லை. டிஜிட்டல்மயமாக்களினால் உலகளாவிய ரீதியில் பன்மைத்துவம் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. பல ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. இதனால் நாட்டில் குறிப்பாக மலையகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தங்களது கல்வியை தொடர முடியாமல் இடைநடுவே கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலநடைமுறைகள் மீதான அதிப்தி கல்வி மீதான அக்கறையின்மையையும் கவனயீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் கல்வி பற்றிய அடிப்படை விளக்கம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். பிள்ளைகளின் கல்வியை வழிப்படுத்த வேண்டிய பெற்றோர்களே இன்று கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். இன்னும் சில பெற்றோர்கள் தற்போது அதிகரித்த வறுமை காரணமாக பிள்ளைகளின் கல்வியை தாங்களாகவே இடைநிறுத்தி தொழிலுக்கு அனுப்புகின்றனர். இன்று மலையகத்தில் அதிகமான மாணவர்கள் சாலையோர வியாபாரிகளாகவும், கூலி தொழிலாளியாகவும் மாறிவருகின்றனர்.
மலையகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையும் இளவயது திருமணங்களும் பாடசாலை இடைவிலகலை இரட்டிப்பு செய்துள்ளது. இது கல்வி துறையில் மாத்திரம் அல்ல எதிர்காலத்தில் மலையகத்தின் பண்பட்ட வாழ்க்கைக்கும் சவாலாக அமையும் என்பதை மாணவர்கள் நன்கு உணர வேண்டும்.
மலையகத்தில் கடந்த காலங்களிலும் பார்க்க கல்வித்துறையில் எடுத்துக்காட்டக்கூடிய பல முன்னேற்றங்கள் அடைந்து வருகின்றது. ஆனால் இன்று பாடசாலை கல்வியை மட்டுமல்ல பல்கலைக்கழக கல்வியையும் கைவிடும் நிலையும் தோன்றியுள்ளது. சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திற்காக இரண்டாம் தரபரீட்சாத்தியாகவும், விண்ணப்பித்த பலர் அதனை கைவிட்டு விட்டனர் அதுமட்டுமா?
மலையகத்தில் இருந்து தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் வீதம் அதிகம். ஆனால் கொரோனா காலத்தில் மலையகத்தில் அதிகரித்த இளவயது திருமணங்கள் மற்றும் பாடசாலை கல்வி இடைவிலகல் என்பன எதிர்காலத்தில் மலையகத்திற்கான சிறந்த ஆசிரியர் சமூகம் ஒன்று உருவாகுவதையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலை தொடருமாக இருந்தால் இனி மலையகத்தின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கையும் பின்னோக்கியே செல்லும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
எனவே பிள்ளைகளின் கல்வியை நன்கு அவதானித்து அவர்களது பிரச்சினைகளையும், நடத்தைசார் உள பிறழ்வுகளையும் ஆராய்ந்து அவற்றை தீர்த்து கல்வியை மேம்படச் செய்வது பெற்றோர்களினதும் , பாடசாலை அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் கடமையாகும். இதற்காக கல்வி பற்றிய விழிப்புணர்வுகளையும் முக்கியத்துவத்தையும் பெற்றோர்களுக்கு வழங்கி தமது பிள்ளைகளின் நடத்தையில் கவனம் செலுத்துபவர்களாக மாற்ற ஒவ்வொரு கிராம மட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும.;
இதற்காக பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர், சிறுவர் பாதுகாப்பு நன்நடத்தை பிரிவு அதிகாரிகள்( பொலிஸ்) மற்றும் பிரதேச சபை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என அனைவரும் முன்னின்று பணிபுரிய வேண்டும். அவர்களுடன் சேர்ந்து சமூக ஆர்வலர்களும் செயற்படுதல வேண்டும். மேலும் கல்வி ஆலோசனை வழிக்காட்டல். மற்றும் தொழில் வழிக்காட்டலுக்கான ஏற்பாடுகளை காலம் தாழ்த்தாது ஏதேனும் மாற்று வழிகளை கையாண்டு முன்னெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களும் கொரோனா அச்சம், சமூக பழக்கவழக்கம், மற்றும் சமூகத்தில் நிகழும் எதிர்மறையான கருத்து, வன்செயல் என்பன தொடர்பிலான விழிப்புணர்கள் வழங்கப்பட்டு, ஊடகங்களால் ஏற்படும் நன்மைகளையும், மாணவர்கள் எவ்வாறு தமது கல்வி செயற்பாட்டுக்காக ஊடகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்பது தொடர்பிலும் வழிகாட்டல்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேசமயம் ஊடகங்களும் பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும்.
மலையக கல்விக்கான நிதியுதவிகளை அதிகரிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாடசாலைகளில் பெற்றுக்கொள்ளப்படும் நிதி சம்மந்தமான எந்த மறைமுக திட்டங்களும் முன்மொழிவுகளும் முன்னெடுக்கப்படுதல் உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும். டிஜிட்டல் தொடர்பான கற்றல் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட கல்வி முறைமையை மாற்றியமைக்கவும் அனைவருக்கும் சமனான மற்றும் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் மலையக சமூக ஆர்வலர்களும், நலன் விரும்பிகளும், மலையக பட்டதாரி இளைஞர்களும் முன்வர வேண்டும்.
மாணவர்களே! இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் கொரோனா பாதிப்பு குறைந்து நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், அனைத்து துறைகளும் முன்னேறும், கல்வி துறையும் முன்னோக்கி செல்லும். ஆனால் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய பின் உங்கள் வாழ்க்கையின் நிலையென்ன?
எனவே இன்றைய சூழலில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் என்பது அசூர வேகத்தில் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் போன்றது. இந்நோய்க்கு என்றோ ஒருநாள் தீர்வு உண்டு. ஆனால் இன்றுஉங்களின் கல்வி இழப்பு என்பது ஒரு தலைமுறைகளின் பேரிழப்பாகும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்.
திருமலை ஜெனித்தா
ஊடகக்கற்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.P. Thas அவர்களால் வழங்கப்பட்டு 16 Feb 2021 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.P. Thas என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.