தமிழர் பிரச்சினையை ஒருமித்த குரலில் சர்வதேசத்திற்கு முன்வைப்பது எப்போது? பூனைக்கு யார் மணி கட்டுவது?

0shares

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 வருடங்கள் உருண்டோடி விட்டன. இறுதி யுத்தத்தில் கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடைய எவருமே இதுவரை தண்டிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல திருகோணமலையில் மாணவர் படுகொலைக்கான உரிய ஆதாரங்களை வெளியில் கொண்டு வந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொல்லப்பட்டமை உட்பட தமிழ் மக்கள் மீதான கொலைகளை நடத்தியவர்களுக்கு இதுவரை தண்டனைகள் கிடைக்கப்பெறாது குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதுடன் எழுமாறாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் கூட தற்போதைய அரசாங்கத்தால் விடுதலை செய்யப்படும் நிலையே இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் யுத்தம் முடிந்து வருடாந்தம் ஜெனிவா மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகின்றபோதிலும் தமிழர் தரப்பில் பெரும் ஆரவாரத்துடன் அந்த மாநாட்டுக்கு தனித்தனியே சென்று வந்த போதிலும் இதுவரை அவர்கள் தமிழ் மக்கள் சார்பாக சாதித்தவை எவை என்று கேட்டால் கிடைக்கும் விடை பூஜ்ஜியமாகவே இருக்கும்.

யார் என்ன சொன்னாலும் விடுதலைப்புலிக்ள இருக்கும் வரை வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகவே இருந்தது. எடுக்கும் முடிவுகளும் உறுதியானதாகவே இருந்தது.

ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்துள்ளது. அவர்களது வாக்கு வங்கியும் நடைபெற்ற தேர்தல்களில் சரிந்து வந்துள்ளதே நிதர்சனம்.

அந்த கூட்டிலிருந்து வெளியேறியவர்களே இன்று தமிழர் நலன்சார்ந்தது எனத் தெரிவித்து ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கி மக்களிடம் வாக்கு பிச்சை கேட்கின்றனர். இதனால் தமிழர்களுக்கு என்ன இலாபம்?

இலங்கைத்தீவில் இன்று தமிழினம், தான் வாழ்ந்த இடங்களில் இருந்து திட்டமிட்ட குடியேற்றங்களால் வெளியேற்றப்படுவதுடன் அவர்களது நிலங்களும் திட்டமிட்ட வகையில் அரசால் கபளீகாரம் செய்யப்பட்டுவருகிறது. ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை மற்றும் மணலாறு என்று முன்னர் அழைக்கப்பட்ட தமிழர் நிலம் இன்று வெலிஓயா என நேரடியாக பெயர் மாற்றப்பட்டு தமிழர்களிடமிருந்து பறிபோய்விட்டன.இன்று மட்டக்களப்பிலும் மயிலத்தமனை மேய்ச்சல் தரை விவகாரத்தால் தமிழரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

தற்போது தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், என்பன தம்மிஷ்டப்படி காணிகளுக்குள் எல்லைகளை போடுவதும் அதற்குள் எவரும் பிரவேசித்தால் தண்டனை என அறிவித்தல் பலகையை வைப்பதும் நாளாந்த செயற்பாடாகி விட்டது.அத்துடன் படைக்கு தமிழரின் உறுதிக் காணிகளை கூட கையகப்படுத்த முயற்சிப்பதும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி விட்டன.

இவ்வாறு இருக்கையில் தமிழர் நலன்சார்ந்து என ஒவ்வொருத்தரும் தம்மிஷ்டப்படி கட்சிகளை தொடங்கியுள்ள நிலையில் எந்தக்கட்சியிடம் இன்றுவரை தமிழரின் பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்கள் உள்ளன.

குறிப்பாக இறுதி யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளி விபரங்கள் கூட எந்தக் கட்சியிடமாவது உண்டா?

கிளிநொச்சியில் ஐ.நா அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர் முன்பொருமுறை தெரிவித்தார் - ஐ.நாவின் முக்கிய அதிகாரி ஒருவரை சந்திக்க வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்கள் தொடர்பான விபரங்கள் கூட இல்லாமல் வந்ததாகவும் அதைக் கூட தாமே அவர்களுக்கு கொடுத்து உதவியதாகவும் தெரிவித்தார்.

இதுதான் தமிழ் கட்சிகளின் நிலை. அவர்களிடம் எந்தவொரு புள்ளிவிபரங்களும் இல்லை.மாறாக வாய் கிழிய கத்துவது.

இவ்வாறு ஆளுக்கொரு கட்சியை தொடங்கி நடத்துபவர்கள் இந்த புள்ளிவிபரங்களை சேகரித்து அனைவரும் ஒருமித்து ஐ.நா மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக்க முடியாமல் தத்தளிப்பது ஏன்? தமிழருக்கு என கட்சியை தொடங்கியவர்களை இன்று ஒன்றிணைக்க ஒரு சிவில் சமுகம் தேவைப்படுகிறது.அதுவும் கூட்டத்தில் ஒற்றுமை போல் காட்டிக் கொண்டு வெளியில் வந்ததும் ஆளை ஆள் பிடித்து தின்பது போல் கடும் விமர்சனம்.

அப்படியென்றால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் வீதியில் தான் இருக்க வேண்டும். வலி வடக்கில் விடுவிக்கப்படாத மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தான் இருக்கவேண்டும். தொல்பொருள் திணைக்களம், வனவளதிணைக்களம் நாளாந்தம் செய்யும் செயல்களை பார்த்து தமிழர்கள் வாளாதிருக்கவேண்டும். படையினருக்காக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் போது போராட்டம் நடத்திவிட்டு அன்றைய போராட்டம் வெற்றி என்று கூறி மார்தட்டவேண்டும்.மட்டக்களப்பில் மயிலத்தனைமடு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்ந்து இழுபட வேண்டும்.

வருடத்துக்குகொருமுறை நடைபெறும் ஐ.நா மனித உரிமை மாநாட்டில் தமிழருக்கு ஏதோ தீர்வு கிடைத்துவிடப்போகிறது என்ற பிம்பத்தை வெளிக்காட்டுவது. இன்று 11 வருடங்கள் கடந்தும் சாதித்தது என்ன?

மக்கள் நலன் சார்ந்தே கட்சிகள் செயற்படவேண்டுமே தவிர தமக்கு வசதியாக கட்சியை தொடங்கி எமக்குள்ளேயே நாம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அது அரசாங்கத்துக்கே சாதகமாக அமையும் என்பதை கட்சிகளை உருவாக்கியவர்கள் ஏன் இன்னமும் சிந்திக்கிறார்கள் இல்லை.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலிம் கூட இதுதான் நடந்தது. அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை எமது மக்களாலேயே தாரைவார்த்து கொடுத்ததை கூட மறந்து அதே அரசியலையே இன்றுவரை எமது தமிழ் கட்சிகள் தொடர்வதுதான் வேதனை.

பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டுவார்கள் அதில் குறறச்சாட்டுக்கள் எல்லாம் எம்மை நோக்கித்தான்.அதாவது எம் விரலையே எம்மை நோக்கி சுட்டுவதுதான். அப்படியென்றால் எமக்குள்தான் எதிரிகள் உள்ளனர். வெளியில் இல்லை என்பதை இவர்களே நிரூபிக்கின்றனர்.

அப்டியென்றால் இதுதான் தமிழர்களுக்கு எமது கட்சிகள் உதிரிகளாக நின்று கொடுக்கப்போகும் தீர்வா? இவர்கள் எப்போது ஒன்று சேர்வது, தமிழர் பிரச்சினையை ஒருமித்த குரலில் சர்வதேசத்திற்கு முன்வைப்பது எப்போது? பூனைக்கு யார் மணி கட்டுவது?

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு