வல்லரசு நாடுகளின் இலங்கை குறித்த பலவீனமான வெளியுறவுக் கொள்கை!! -அ.நிக்ஸன்-

0shares

---பொறுப்புக்கூற வேண்டுமென்ற மனித உரிமைச் சபையின் குறைந்தபட்ச அழுத்தங்களுக்குக்கூட செவிசாய்க்காமல், அல்லது பயம்கொள்ளாமல், சர்வதேச நாடுகளுக்கு இலங்கை பதில் எச்சரிக்கை விடுக்கின்றதோ, அதேபோன்றதொரு தொனியில் இன அழிப்பு என்பதை தமிழ்த்தரப்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை---

ஜே.ஆர் ஜயவர்த்தன காலத்தில் இருந்து இன்றுவரை சிங்கள ஆட்சியாளர்கள், இந்திய அரசின் அழுத்தங்களைப் புறக்கணிப்பதுடன் அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளின் கதைகளை ஒரு காதல் கேட்டு மற்றக்காதல் வெளியேற்றுகின்ற ஒருவகையான இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குப் பல உதராணங்கள் உண்டு. அதற்கும் மேலாகச் சென்று பேராசிரியர் பீரிஸ் தற்போது புதிய கதை ஒன்றைச் சொல்லியிருக்கின்றார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள போலியான குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். முப்படையினரையும் காப்பாற்றக்கூடிய முறையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் போதிய சட்டங்கள் இல்லையென்றும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.

அதுவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு பகிரங்கமாகச் செய்தியாளர்களிடம் சொல்லியிருக்கின்றார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து இலங்கை தவறியுள்ளதால் சர்வதேச நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டுமென மனித உரிமைச் சபையின் ஆணையாளர் உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், போர்க்குற்றத்தில் படையினர் ஈடுபடவேயில்லையென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் திங்கட்கிழமை கூறியிருக்கின்றார்.

அதுவும் கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் நிலையில் கல்வித்துறை பற்றிய விடயங்களைச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்காமல், சர்வதேச விவகாரம் தொடர்பாகவே பீரிஸ் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்வதேச நாடுகளின் கூற்றுக்களை பொய்யாக்கும் வகையில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கருத்து வெளியிட்டிருப்பது எந்தப் பின்னணியில் என்ற கேள்விகள் எழுகின்றன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுத்துவந்தாலும், இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையைத் தங்கள் பக்கம் எடுக்கும் நோக்கிலேயே இந்த வல்லாதிக்க செயற்பட்டு வருவதாக ஈழத்தமிழர் தரப்பு குற்றம் சுமத்தி வருகின்றது.

ஆனாலும் இந்த வல்லாதிக்க நாடுகளையே பொய்யர்களாக மாற்றும் நகர்வுகளை இலங்கை துணிவோடு மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கோகண்ண பீஜிங்கில் உள்ள சீனாவுக்கு ஆதரவான நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுமாறு கோரியிருக்கிறார்.

சீன அரசும் இலங்கைக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயற்பட்டு வரும் நிலையில், சீனாவின் ஆதரவோடு ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள். மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை முற்றாகவே நீக்கம் செய்யும் நகர்வுகளை இலங்கை மேற்கொண்டு வருகின்றமை பகிரங்கமாகிறது.

இதனையே அமைச்சர் பேராசிரியர் பீரிஸின் கருத்து எடுத்துக்காட்டுகின்றது. இலங்கைப் படையினரைச் சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் இருந்து காப்பாற்ற இலங்கையில் போதிய சட்டங்கள் இல்லை என்றும் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சரினால் வெளியிடப்பட்ட தகவல், மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்குச் சவாலாகவே அமையும் எனக் கூறலாம்.

அதாவது எவருடைய அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது என்பதும் சீனாவின் உதவியே இலங்கைக்குப் போதுமானதென்ற துணிச்சலான தொனியும், வல்லாதிக்க நாடுகளுக்கு பெரும் செருப்படியாகும்.

ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தை வெறுமனே ஒப்பாசாரத்துக்காக மனித உரிமைச் சபையில் உச்சரிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கையின் ஜனநாயகப் பண்பற்ற இந்த அணுகுமுறை தெரியாததல்ல. இந்த இக்கட்டான பூகோள அரசியலைப் பயன்படுத்தத் தவறியது யார்? தமிழ்த்தேசியக் கட்சிகளின் மனட்சாட்சிக்கு இது தெரியாததல்ல.

தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளிடம் கையளித்த பொது ஆவணம் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை அழுத்தம் திருத்தமாக ஒரே வாக்கியத்தில் நேரடியாகவே கோரியிருந்தால், சிங்கள ஆட்சியாளர்கள் நிலைதடுமாறியிருப்பர். இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக பேராசிரியர் பீரிசும் சொல்லியிருக்கமாட்டார். சர்வதேச நாடுகளும் இலங்கையின் தாளத்துக்கு ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் இருந்து சற்று மாறியிருக்கும்.

ஆனால் காலனித்துவ ஆட்சியின் விசுவாசம், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரநிதிகளை அடிபணிய வைத்திருக்கிறது. ஆகவே அமைச்சர் பீரிஸின் கருத்து தமிழ்த்தேசியக் கட்சிகளின் மனச்சாட்சியை உலுக்கியிருக்க வேண்டும்.

ஈழத்தமிழ் மக்களுக்களின் அரசியல் விடுதலைக்கான சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்களை தமிழ்த்தேசிய கட்சிகள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் நடத்துவதற்கு தயங்குகின்றன. இவ்வாறானதொரு நிலையில், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் அம்பிகா செல்வகுமார் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சாதாரண குடும்பத் தலைவியாக இருக்கும் இந்தப் பெண், சர்வதேச நீதிகோரி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கருதியமை அறிவு ரீதியானதும் உணர்வு ரீதியானதுமான செயற்பாடாகும். ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு மற்றும் சுயநிர்ணய உரிமையை வலியுத்தியே இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது.

ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்கள் தாயகத்தில் அரசியலில் ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசியக் கட்சிகளே. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான தேர்தல் அரசியலில் மாத்திரம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலேயே இந்தக் கட்சிகளுடைய செயற்பாடுகளை அரசாங்கம் பொருத்படுத்துவதில்லை. இதனாலேயே அமைச்சர் பீரிசும் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டம் இயற்றவுள்ளதாகக் கூறுறதற்கும் காரணமாகியது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல், மகாண சபை தேர்தல், உள்ளூர் ஆட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றுவதிலேயே கவனம் செலுத்தி வரும் இந்தத் தமிழ்த்தேசிய கட்சிகள், அரசியல் விடுதலை வேண்டி சாதாரண மக்கள் நடத்துகின்ற போராட்டங்களில்கூட கலந்துகொள்வதில்லை.

அப்படிக் கலந்து கொண்டாலும் ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் சென்று விடுகின்றனர். இவர்களின் முழு இலக்கும் தேர்தல் அரசியல் தான். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுக்கத் தவறுகின்றனர்.

சாதாரண கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசின் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியலை தீவிரமாக பேசுகின்றனர். நாடாளுமன்றத்திலும் ஆவேசமாக பேசுகின்றனர்.

அதனை தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக பிரசுரிக்கின்றன. அத்தோடு அவர்களுடைய போராட்டம் நிறைவடைகின்றது. ஆனால் அறிவு பூர்வமாக மக்களை விழிப்படையச் செய்து அரசியல் விடுதலைக்கான அறவழிப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்த இவர்கள் மறுதலிக்கின்றனர்.

அந்த அடிப்படையில் அம்பிகா செல்வகுமார் முன்னெடுக்கும் போராட்டம் புலம்பெயர் நாடுகளிலும் வடக்கு கிழக்கு தாயகத்தில் வாழும் மக்களுக்கும் முன்னுதாரணமாகும். மக்கள் ஒரு தேசமாக எழுவதற்கு தயாராகவே இருக்கின்றனர். அந்த உணர்வு தமிழ்த்தேசிய மக்களிடம் தாராளமாகவே இருக்கின்றது. ஜனநாயக வழியலான அகிம்சைப் போராட்டங்களை மக்கள் தீவிரமாக முன்னெடுக்கும்போது அதனை வன்முறையின் மூலம் தடுக்கவும் முடியாது.

அப்படித் தடுத்தாலும். அது இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டாகவே பார்க்கப்படும். காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கங்கள் அவ்வாறான ஜனநாயகப் போராட்;டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் மக்களின் அந்த உணர்வுகளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மாத்திரம் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பயன்படுத்துகின்றனர். ஆகவே புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தான் தமிழ்த்தேசியத்திற்கான அறவழிப் போராட்டங்களை தொடர்சியாக முன்னெடுக்க வேண்டும்

இலங்கைத்தீவில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வாளர்களின் தொடர் கண்ணகாணிப்பால் சாதாரண அப்பாவி மக்கள் தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்களை நடத்த முடியாத சூழல் இருந்தும் அவ்வப்போது கிளர்ந்தெழுந்து தேசமாக தம்மை வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறான ஒரு சூழலில் புலம்பெயர் மக்களின் போராட்டமே தாயக மக்களின் உணர்வுக்கும் விடுதலை சார் அறிவிற்கும் வலுச்சேர்ப்பதாக அமையும். ஆனால் புலம்பெயர் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பதிலும் நடைமுறைப் பிரச்சினைகள் உண்டு. அதுபற்றிக் கலந்தாலோசிக்க வேண்டிய பொறுப்பு ஓன்றினைந்த புலம்பெயர் அமைப்புகளுக்குரியது.

அவ்வாறாறு புலம்பெயர் அமைப்புகள் ஒன்றினைந்து ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்திப் போராடினால், சாதாரண தேர்தல் அரசியலில் ஈடுபடும் தமிழ்த்தேசியக் கட்சிகள் விரும்பியோ விரும்பாமலோ, வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் ஒரு தேசமாக எழ வேண்டிய கட்டாய நிலை உருவாகும். சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும்.

ஆகவே பொறுப்புக்கூற வேண்டுமென்ற மனித உரிமைச் சபையின் குறைந்தபட்ச அழுத்தங்களுக்குக்கூட செவிசாய்க்காமல், அல்லது பயம்கொள்ளாமல், சர்வதேச நாடுகளுக்கு இலங்கை பதில் எச்சரிக்கை விடுக்கின்றதோ, அதேபோன்றதொரு தொனியில் இன அழிப்பு என்பதை தமிழ்த்தரப்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு