பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளியிட்ட கருத்து, அவ்வளவு விரைவாக எவராலும் மறந்திருக்க முடியாது.
“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது, அரசாங்கத் தரப்பில் உள்ள தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தே அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரம்புக்வெல்ல இவ்வாறு தான் கூறியிருந்தார்.
வடக்கில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவி வகிக்கிறார். அங்கஜன் இராமநாதன் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக இருக்கிறார். கிழக்கில் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கிறார். சந்திரகாந்தன் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக இருக்கிறார்.
அரசாங்கத்துடன் இணைந்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், உரிமைகளையும் பெற்றுத் தருவதாக இவர்கள் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் அவர்களுக்கான அச்சுறுத்தல்களும் தான் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
கிழக்கில் உடனடியாக தீர்க்கப்படும் என்று கூறப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் அப்படியே கிடக்கிறது. காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. மேய்ச்சல் தரை பிரச்சினை, சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் என்று பிரச்சினைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.
அதுபோன்று தான், வடக்கில் அரச தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வெட்டியாட நினைக்கிறார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அங்கஜன் இராமநாதனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
மாகாண சபைத் தேர்தல் காலத்தில் சில மோதல் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி.யின் வாக்கு வங்கிளை அசைத்துப் பார்க்கும் வகையில், அங்கஜன் இராமநாதன் செயற்பட்டிருந்தார். இரண்டு பேரும் இலக்கு வைத்த வாக்கு வங்கி ஒன்றாக இருந்ததால், முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன. இந்த நிலையில், அங்கஜன் இராமநாதன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியை வைத்துக் கொண்டு, தனது இணைப்பாளர்கள் மூலம் அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து வந்திருக்கிறது.
தான் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும், தன்னை அச்சுறுத்திப் பணியவைக்க முடியாது என்றும் பகிரங்கமாகவே கூறுகின்ற அளவுக்கு நிலைமை போயிருக்கிறது. அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளர்கள் என்று கூறிக் கொள்வோர் நிகழ்த்தும் இவ்வாறான மிரட்டல்கள் அவருக்குத் தெரிந்து நடந்தால், அது குறித்து ஜனாதிபதி, பிரதமரிடம் கொண்டு செல்வேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்திருக்கிறார்.
ஒரு உறைக்குள் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போலத்தான், யாழ்ப்பாணத்தில் அரசதரப்பில் யார் செல்வாக்குச் செலுத்துவது என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில், அரச அதிகாரிகள் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பல அரச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர், இடமாற்றத்துக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த உள்ளக மோதல்களுக்கு மத்தியில், கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை கரிசனை கொள்ளப்படாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால், வடக்கிலுள்ள பிரச்சினைகளைக் கையாளும் விடயம் இவர்களின் கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட போது, அரச தரப்பில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனுக்கோ அதுபற்றி தெரிந்திருக்கவில்லை.
இந்த முடிவு பற்றி அவர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடியிருக்கவுமில்லை.
அவ்வாறு கலந்துரையாடியிருந்தால் அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருப்பார்கள். வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தில் உள்ள தமது பிரதிநிதிகள் மூலம் தீர்ப்பதாக கூறிய அரசாங்கம், அவர்களையும் கிள்ளுக்கீரையாகத் தான் பயன்படுத்திக் கொள்கிறது.
இரணைதீவில் அடக்கம் செய்யும் முடிவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியதால் தான் சாத்தியமானது.
அத்துடன், வடக்கிற்கு காணி அதிகாரத்தைப் பெற்றுத் தந்திருப்பதாகவும், இணக்க அரசியலின் மூலமே அதனைச் சாத்தியப்படுத்தியிருப்பதாகவும் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கைகளை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
ஏனைய 8 மாகாணங்களாலும் பயன்படுத்தப்படும் காணி அதிகாரங்கள் பல வடக்கிற்கு மட்டும் மறுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தற்போது பெற்றுக் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஏனைய 8 மாகாணங்களும் பயன்படுத்திய காணி அதிகாரங்கள், இதுவரையில் வடக்கிற்கு மட்டும் மறுக்கப்பட்டிருந்தால், அது ஒரு பாரிய அடிப்படை உரிமை மீறல்.
இவ்வாறான நிலையை அனுமதித்தமைக்கு, அரசுடன் இணைந்து பணியாற்றிய அத்தனை அரசியல்வாதிகளும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஐ.தே.க.வுடன் கூடிக் குலவி அரசியல் நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்த நிலையில் இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது. வடக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும், மின்தடை நேரத்தில் அவசர அவசரமாக அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
வட மாகாணத்துக்குரிய அலுவலகம் வடக்கில் இருப்பது தான் முறையானது. அதனை அனுராதபுரத்துக்கு மாற்றுவதற்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவே உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்து தமிழ்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இந்த இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாம் அமைச்சர் சந்திரசேனவுடன் பேசியதாகவும், காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்தை அனுராதபுரத்துக்கு மாற்றும் முடிவை கைவிட்டுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார்.
அவர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாட்களிலேயே வடக்கு மாகாணம் முழுவதிலும் அசாதாரணமான மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தில், யாழ்ப்பாணம் செயலகத்தில் இருந்த காணி ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு இரகசியமாக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
‘குதிரைகள் ஓய்ந்த பின்னர் லாயத்தை மூடிப் பயனில்லை’, என்பது போல, அனுராதபுரவுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த ஆவணங்களை இனி வடக்கிற்கு கொண்டு வருவது சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான்.
வடக்கில் உள்ள அரச காணிகளை தனியார் துறையினருக்கு வழங்குவதற்காகவே இந்த அலுவலகம் மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பளைப் பகுதியில் உள்ள காணிகள் சிங்கள முதலாளிகளுக்கும் சீன முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்தை தமது மாவட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். இது வடக்கிலுள்ள காணிகள் சிங்களவர்களுக்கு பகிரப்படுவதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறானதொரு பாரதூரமான ஒரு பிரச்சினையைக் கையாளக் கூடிய நிலையில் கூட, வடக்கிலுள்ள ஆளும் தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் இல்லாமல் இருக்கின்றனர்.
பிரச்சினை தீவிரமடைந்து போராட்டம், கவனயீர்ப்பு என்ற கட்டத்தை அடைந்த பின்னர் தான், தலையிட முனைகிறார்கள். சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகள், நில ஆக்கிரமிப்புகள் போன்ற விடயங்களில், ஆளும்தரப்பில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளால் இம்மியளவும் கூட எதிர்க்குரல் எழுப்ப முடியவில்லை.
இதற்காகத் தான், அரசதரப்பு தங்கள் தரப்பில் உள்ளவர்களைக் கொண்டே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக கூறியதோ தெரியவில்லை.
- Virakesariஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.P. Thas அவர்களால் வழங்கப்பட்டு 18 Mar 2021 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.P. Thas என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.