எதிர்க்கவும் முடியாது - சகித்துக் கொள்ளவும் முடியாது: இலங்கையால் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிலை - சுபத்ரா

0shares

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வலுவான ஆதரவை பாகிஸ்தான் வழங்கி வருகின்ற நிலையில், அநுராதபுர - சாலியபுரவில் உள்ள கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் பாகிஸ்தான் - இலங்கை இராணுவ அணிகளின் கூட்டுப் பயிற்சி ஒன்று ஆரம்பமாகியிருக்கிறது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையில் முதல் முறையாகத் தொடங்கப்பட்டிருக்கிறது இந்தக் கூட்டுப் பயிற்சி.

இலங்கை - இந்திய கடற்படைகளுக்கு இடையில் SLINEX என்ற கூட்டுப் பயிற்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இலங்கை இராணுவத்துக்கும், இந்திய இராணுவத்துக்கும் இடையில் ஆண்டுதோறும் மித்ரசக்தி என்ற பெயரில் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது.

அதுபோலத் தான், பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சி இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது.

“கைகுலுக்கல் பயிற்சி 1” (ExShake Hands 1) என்ற பெயரில், கடந்த 17ஆம் திகதி தொடங்கிய இந்தப் பயிற்சி மார்ச் 31 வரையில் இடம்பெறுகிறது.

இதில் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகளும் 35 படையினரும், இலங்கை இராணவத்தின் கஜபா ரெஜிமென்டைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மற்றும் 40 படையினரும் ஈடுபடுகின்றனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சி பிரதானமாக, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும், புரட்சி முறியடிப்பு போர்முறை தொடர்பான உத்திகளைக் கொண்டதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகை, அதனை ஒட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள், உறவுகள் என்பனவற்றின் மத்தியில், இராணுவ ரீதியான ஒத்துழைப்பும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போதுமே பாதுகாப்பு உறவுகள் உச்சமான நிலையில் தான் இருந்து வந்திருக்கின்றன.

இலங்கையில், தமிழ் அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது, அதனை ஒடுக்குவதற்கான உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தான் முக்கியமானது.

1983 இனக்கலவரத்துக்குப் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கம் மேற்குலக ஆதரவுப் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் ஆட்சியில் இருந்த இந்திராகாந்தி தமிழ் போராளிக் குழுக்களை அரவணைக்க ஆரம்பித்தார்.

தமிழீழ விடுதலை அமைப்புகள் தமிழகத்தை தளமாக கொண்டு செயற்பட்டதுடன், அவர்களுக்கு அங்கேயே பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இந்தியாவிடம் இருந்து ஆயுத உதவிகளும் கிடைத்தன.

எப்போதும், இந்தியாவுக்கு எதிராகவே செயற்படும் பாகிஸ்தான், இலங்கைப் படைகளுக்கு தேவையான பயிற்சிகள், இராணுவ உதவிகளை வழங்க ஆரம்பித்தது. அதற்கு பின்னர் இருதரப்பு உறவுகள் மேலும் மேலும் வலுவடைந்து வந்தன.

1985ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஷியா உல் ஹக் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட போது, இலங்கை இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து, அதற்கான வசதிகளைச் செய்து தருவதற்கு மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தார்.

இலங்கைப் பயணத்தின் முடிவில், பாதுகாப்பு அமைச்சில் ஒரு செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜெனரல் ஷியா உல் ஹக், இலங்கை ஆயுதப் படைகளின் எந்தவொரு தேவைகளையும் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

பாகிஸ்தான் விசேட படைப்பிரிவின் ரெஜிமென்ட் தளபதியாக இருந்த பிரிகேடியர் தாரிக் மஹ்மூத்தை அவர் இலங்கைக்கு அனுப்பினார். பிரிகேடியர் தாரிக் மஹ்மூத்தை, கேணல் ஜெரி டி சில்வா பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கக்கூடிய இடத்தை ஆராய்ந்தார்.

பல படைத்தளங்களையும் பார்வையிட்டு விட்டு பிரிகேடியர் தாரிக் மஹ்மூத் தெரிவு செய்த இடம் தான் சாலியபுர.

கஜபா ரெஜிமென்ட் தலைமையகமாக இருந்த சாலியபுரவில், இலங்கை இராணுவத்தின் இளநிலை அதிகாரிகளுக்கும், கட்டளையிடும் அதிகாரம் இல்லா அதிகாரிகளுக்கும் இரண்டு பிரிவுகளாக பயிற்சிகளை வழங்கினார் பிரிகேடியர் தாரிக் மஹ்மூத்.

அவரிடம் அப்போது 500 இலங்கை இராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்றிருந்தனர். அவர்களே அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட, இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

அதற்குப் பின்னர், மேலும் விரிவடைந்து கொண்டிருந்த பாதுகாப்பு உறவுகளுக்கு தடைபோடும் வகையில் அமைந்தது இந்திய இலங்கை உடன்பாடு.

அந்த உடன்பாடு வருவதற்கு சில நாட்கள் முன்னதாக, பாகிஸ்தான் முன்னெடுக்கவிருந்த பாரிய பயிற்சி அளிக்கும் திட்டம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் இரத்துச் செய்யப்பட்டது.

அதற்குப் பிறகு, 1990இல் மீண்டும் இரண்டாவது கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர், பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்கள், பயிற்சிகளை வழங்கி உதவியது.

2000ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடாநாட்டின் மீது விடுதலைப் புலிகள் படையெடுத்து, யாழ். நகரில் எல்லை வரை முன்னேறியிருந்த போது செக்கோஸ்லாவாக்கிய தயாரிப்பு பல்குழல் பீரங்கிகளை விமானங்களில் ஏற்றி வந்து பலாலியில் இறக்கியது பாகிஸ்தான்.

அந்த பல்குழல் பீரங்கிகளின் தாக்குதல்களால் தான் அப்போது சண்டைகளில் திருப்பம் ஏற்பட்டது. இராணுவத்தினால் குடாநாட்டை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

2008இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் மாங்குளத்துக்கு அருகே படைகள் முன்னேறியிருந்த போது இராணுவத்துக்கு பெரும் ஆட்லறி, மோட்டார்குண்டு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அப்போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன், தொடர்பு கொண்டு உதவி கோரியதை அடுத்து, பாகிஸ்தான் இராணுவத்தின் களஞ்சியங்களில் இருந்து ஆட்லறி மற்றும் மோட்டார் குண்டுகள் இலங்கை இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பின் உச்சக்கட்டமாக இதனை குறிப்பிடலாம். எந்த நாட்டு இராணுவமும் தனது தேவைக்கான இருப்பில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை வழங்க முன்வராது.

இவ்வாறாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போதுமே இராணுவ ஒத்துழைப்பு அதிகமாக இருந்தாலும், இப்போது அது புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது.

அதாவது இலங்கை மண்ணில் இரண்டு நாட்டு இராணுவங்களும் இணைந்து பயிற்சிகளைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்துக்கு பாகிஸ்தான் இராணுவம் பயிற்சி அளித்தது. இலங்கை இராணுவம் நடத்தும் நீர்க்காகம் போன்ற கூட்டுப் பயிற்சிகளில் பாகிஸ்தான் பார்வையாளராகவும் பங்காளராகவும் கலந்து கொண்டது.

இப்போது இரண்டு நாடுகளின் இராணுவங்களும் தனியான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றன. இது இந்தியாவைப் பொறுத்தவரையில் சவாலானது தான். இந்தக் கூட்டுப் பயிற்சியை இந்தியாவினால் எதிர்க்க முடியாது. அதேவேளை இதனை சகித்துக் கொள்ளவும் முடியாது.

இவ்வாறான இராணுவ ஒத்துழைப்பை இந்தியா தனக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கும். இந்தியாவின் இந்தக் கவனிப்பையும், எதிர்ப்பையும் தவிர்த்துக் கொள்வதற்காகவே மிக தந்திரமான முறையில் இந்த போர்ப் பயிற்சிக்கான உத்தி தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் புரட்சி முறியடிப்பு போர் முறை என்று அது வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவம் இந்த இரண்டு விடயங்களிலும் பெரிதாக எந்த சவாலையும் எதிர்கொள்ளவில்லை.

ஆயினும் இந்தியாவை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக இதனை விட வேறு உத்தி பொருத்தமானதாக இருக்க முடியாது.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்