சீனாவின் ஆதிக்கத்தினுள் ஆழமாக பயணப்பட்டுள்ள ஸ்ரீலங்கா- சீன-அமெரிக்க அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிப்பு! சு.பிரஜீவன் ராம்

0shares

இந்தியா ஏன் இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என உலக தமிழர்கள் மத்தியில் பாரிய கேள்வி உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

உண்மையில் இந்திய அரசாங்கம் குறித்த தீர்மானத்தை ஆதரிக்காதது ஒரு இராஜதந்திர நகர்வு என ஒரு சிலர் கூறியதுடன் இலங்கை அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா தொடர்ந்தும் நம்புகின்றது எனவும் தொிவித்தனர்.

வேறு சிலர் உலக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்தியா செயற்பட்டுள்ளது எனவும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பெரும் பங்களிப்பை வழங்கிய நாடு இந்தியா எனவும் அவ்வாறான சூழ்நிலையில் எப்படி இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மையில் ஐ.நா தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்காமல் நடுநிலை எனும் பெயரில் நழுவியமை என்பது பல தரப்பட்ட கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. இந்திய அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பங்களிப்பு செய்திருந்ததா என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலையே அளிக்கின்றனர்.

இந்தியவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கா. அய்யநாதன், மேலும் இக்கருத்தினை வலுப்படுத்த அவர் எழுதிய “ஈழம் அமையும்” என்ற நூலில் இந்தியா இலங்கைக்கு எவ்வகையில் உள்நாட்டு யுத்த காலத்தில் உதவிகளை வழங்கியிருந்தது என குறிப்பிட்டுள்ளமையை சுட்டிக்காட்டி, யுத்த குற்றத்திற்கு இலங்கையுடன் இணைந்து செயற்பட்ட இந்தியா, எப்படி இலங்கை அரசை மட்டும் குற்றவாளி எனக் கை காட்டும்.

அவ்வாறு இலங்கையை குற்றவாளி எனக் கூறினால் இந்தியா இலங்கைக்கு உதவியமையை இலங்கை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகி சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அபகீர்த்தியை உருவாகிவிடும் என எழுதியுள்ளார். இவரின் கருத்துகளில் இருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும். இந்தியா ஐ.நா தீர்மானத்தில் நடுநிலை வகித்தமைக்கு பின்னணியில் இலங்கையை போர் குற்றவாளி எனக் கூறுவது தன்னை தானே காட்டிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பமாக அமையும் என கருதியிருக்கலாம்.

இன்னோர் பார்வையில் இலங்கை மீதான ஆதிக்க அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கலாம். எனினும் தற்போதைய சூழ்நிலைகளை உற்று நோக்குவோமாயின் இலங்கையின் வெளியுறவு கொள்கை என்பது மெல்ல மெல்ல சீனா நோக்கி நகர்வடைந்து செல்வதை அவதானிக்கலாம்.

உண்மையில் இந்திய இலங்கை உறவு என்பது ஆரம்ப காலம் தொட்டே சிக்கல்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இதனை கடந்த கால வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக 1971ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் இந்தியா இடையில் பெரும் மோதல் ஏற்பட்ட வேளை பாகிஸ்தான் விமானங்கள் இலங்கை விமான நிலையங்களில் இறங்குவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அப்போதைய இலங்கை அரசாங்கம் அனுமதியளித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா இலங்கையின் இறமையை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தது. குறிப்பாக இலங்கையில் தமிழ் ஆயுத குழுக்கள் உருவாகுவதற்கு இந்தியா பின்புலமாக செயற்பட்டமை, ராஜீவ் அரசாங்கத்தால் 1987 ஆம் ஆண்டு ஒப்ரேசன் பூமாலை எனும் பெயரில் இந்திய விமானப்படை இலங்கையின் அனுமதியின்றி இலங்கை வான் பரப்பில் பறந்து இலங்கை தமிழ் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியமை மேலும் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பவற்றை குறிப்பிட முடியும்.

எனினும் இம்முறை இலங்கையின் அதிகார மையத்தை கைப்பற்றிய மகிந்த குடும்பத்தினர், இந்தியா உடனான உறவினை குறைத்து கொண்டு சீனா உடனான உறவினை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்கலாம். குறிப்பாக இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையப் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகியமையை குறிப்பிட முடியும்.

அதே சமயம் இந்தியாவின் மறைமுக பங்களிப்பு ஐ.நா தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியிருப்பதை உணர்ந்த கோட்டாபய அரசாங்கம், சீனாவின் பக்கம் வெளிப்படையாக சாய தாயாராகியுள்ளது. இதனை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சீனா அதிபர் ஐி ஜின்பிங் இடையிலான உரையால் வெளிப்படுத்துகின்றது.

இந்த உரையாடல் ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இடம் பெற்றுள்ளமை அவதானத்திற்கு உரியது. இதில் இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்கொள்ளும் அநியாய அழுத்தங்களில் இருந்து பாதுக்க சீனா உறுதுணையாக செயற்படும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் ஹம்பாந்தோட்டையில் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இங்கு அநியாய அழுத்தங்களை பிரயோகிக்கும் நாடுகள் என குறிப்பிடுவது பிரித்தானியா தலைமையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் இதற்காக திரைமறைவில் செயற்பட்ட அமெரிக்கா, இந்தியாவையும் மறைமுகமாக சாடியுள்ளார்.

உண்மையில் ஐ.நா தீர்மானம் என்பது சீனா அமரிக்க பனிப் போரின் ஒர் மாறுபட்ட வடிவமாகவே காணப்டபடுகின்றது. இலங்கையில் தற்போாது நிலவும் சீன சார்பு கொள்கையை அமரிக்க சார்பாக மாற்றியமைத்து கொள்ள முற்படுகின்றது அமெரிக்கா. இதற்கு இந்தியாவின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைப்பதற்கான சூழ்நிலையை சீன உடனான இந்திய எல்லைப்பிரச்சனை உருவாகியிருந்தது.

அந்தவகையில் சீன எதிர்பினை இந்துசமுத்திர பிராந்தியத்தில் அமரிக்கா இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. எனினும் இலங்கை அராங்கம் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க சிந்தனைக்கு அடிபணிய மறுக்கின்றது. சீனா ஊடான உறவினை மேலும் பலப்படுத்தவே முற்படுகின்றது.

அதன் அடிப்படையில் இத்தீர்மானம் என்பது இலங்கை அரசாங்கத்தின் மீதான சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி இலங்கை மீது ஐரோப்பிய நாடுகள் தமது அதிக்கத்தினை செலுத்துவதற்கான ஏற்பாடு மாத்திரமே அன்றி தமிழ் மக்களின் நலன்களை அல்லது உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கானதல்ல என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் நகர்வு என்பது எப்போதும் சுயநலம் மிக்க ஒன்றாகவே காணப்படும். இன்று இவர்களின் முக்கிய நோக்கம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன் சீனாவின் இந்து சமுத்திர பிராந்திய ஆதிக்கத்தினை குறைத்து சீனாவின் வல்லரசு கனவை தகர்ப்பதாகும் . இதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் இலங்கையை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது.

இவ் இலக்கினை அடைய இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை ஒர் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கதின் வெளியுறவு கொள்கை என்பது அமெரிக்க சார்பாக மாற்றம் அடையும் போது இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும் வலுவற்றதாக மாற்றமுறும் சந்தர்ப்பம் உருவாகும். எனவே தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு அமைவாக தமது இராஜதந்திர அரசியல் நகர்வுகளை மாற்றியமைந்து கொள்வது அவசியமானது.

அந்தவகையில் இந்தியாவின் இராஜதந்திரம் இலங்கையில் பலவீனம் அடைந்து காணப்படுகின்றது காரணம் சீனாவின் ஆதிக்கத்தினுள் ஆழமாக பயணப்பட்டுள்ளது இலங்கை. ஐ. நாவில் இந்தியாவின் நடுநிலை என்பது தன்னைத் தற்பாதுகாத்து கொள்ளும் முயற்சியாக காணப்படுகின்றது.

இங்கு இலங்கை தமிழர் பிரச்சனை என்பது இலங்கையை கட்டுப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது அதே சமயம் சீன அமெரிக்க அதிகார போட்டியில் சிக்கி தவிக்கின்றது இலங்கை என்பதனையே இக் கட்டுரை விளக்க முயல்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு