சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் முயற்சியில் கனடா!! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்!!

488shares
Image

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவகாரத்தை அணுகுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை விடுத்து அவர்களுக்கு அவகாசம் வழங்குமாறு தமிழர் தரப்பிடம் கொழும்புக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு கடந்த யூன் மாதம் 19 ஆம் திகதி கொழும்புக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வட மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே கனேடியத் தூதுவர் மன்னார் பிரஜைகள் குழுவை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

OMP என்ற காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பின் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நல்லது என்றும் கொழும்புக்கான கனேடிய தூதுவர் டேவிட் மிக்கினோன் இரு நாள் சுற்று பயணத்தை மேற்கொண்டு மன்னாருக்கு வருகை தந்தபொழுது கடந்த திங்கள் கிழமை (09.07.2018) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரை சந்தித்தபொழுது இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்புக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மிக்கினோன் இந்த வார ஆரம்பத்தில் மன்னாருக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது யூலை 9 ஆம் திகதியான நேற்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் அமைப்புக்களில் முக்கியமான அமைப்பாக கருதப்படும் மன்னார் பிரஜைகள் குழுவினரின் தலைமைக் காரியாலயமான மன்னாரிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாகக் கூறியதுடன், வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே தான் இந்த விஜயத்தை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கான கனேடிய தூதுவராக பொறுப்பேற்று ஒன்பது மாதங்களே கடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், முதன் முறையாகவே மன்னாருக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டு வருவதுடன், சிறிலங்கா அரசாங்கத்தினால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள OMP என்ற காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டனர்.

OMP சிறிலங்கா அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய மன்னார் பிரஜைகள் குழுவினர், சர்வதேச சமூகத்தை திசைத் திருப்புவதற்காக வெறும் கண்துடைப்பிற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு கனேடிய தூதுவர் பதிலளிக்கையில் இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் மிகவும் நல்லவர் என்று நற்சான்றிதழ் வழங்கியதுடன், சிறிது காலத்துக்கு அவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்து பாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை கடந்த யூன் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரித்தானியாவின் கொழும்புக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வட மாகாண முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இந்த கருத்தை சந்திப்பின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியும் இருந்தார்.

இதேவேளை கனடா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் சிறிலங்காவிற்கு உதவி வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே நீதிக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடிவரும் தமிழர் தரப்பின் போராட்டங்களால் மைத்ரி – ரணில் தலைமையிலான சிறிலங்கா அரசு தென்னிலங்கையில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துவரும் பிரித்தானியா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவற்றிலிருந்து விலகியிருக்குமாறு தமிழர்களிடத்தில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க