இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் இன்று முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அவர் தனது ட்விட்டரில், ``என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முரளிதரனின் இந்த ட்வீட்-க்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி ``நன்றி.. வணக்கம்” எனக் குறிப்பிட்டார். இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்து விட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, முதல்வரின் தாயார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அவரிடம் ஆறுதல் தெரிவித்து புறப்பட்டார்.
இதன்போது முதல்வர் வீட்டு வாசலில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ``நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் பொருள்” என்றவர், ``800 திரைப்படம் குறித்து இனி பேசுவதற்கு எதுவுமில்லை” என்றார்.