தலவாக்கலையில் குரங்குகளின் தொல்லையால் மக்கள் பாதிப்பு

119shares

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தோட்டத்தின் கீழ்ப் பிரிவில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேயிலை மலைகளில் தொழில் புரியும் இவர்கள் தமது பகல் உணவையும் காலையிலே தயாரித்து விட்டு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு இவர்களால் தயாரிக்கப்படும் உணவுகளை மேல் கொத்மலை நீர்தேக்கத்தை அண்டி வாழும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உண்டு விட்டு செல்வதாக குறிப்பிடுகின்றனர்.

இதனால் பாடசாலை முடிந்து வரும் தமது பிள்ளைகள் பட்டினியுடன் தாம் வரும் வரை காத்திருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தை அண்டி காணப்படும் சிறிய காட்டு பகுதிகளில் இருந்தே குரங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் சமைத்த மற்றும் சமைக்காத உணவுப் பொருட்களை இவை எடுத்து செல்வதாகவும், தமது உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில், தமது பிள்ளைகளுக்கு சிறந்த உணவுகளை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் தாம் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை அறிவித்தும் இதுவரை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை என இம்மக்கள் சுட்டிக்காட்டினர். எனவே அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க