தலைவர் ஆயிரம் நாட்கள் சிறையில் செயலாளர் அமைச்சரின் மடியில்?

34shares

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 1000 நாட்களைச் சிறையில் கழித்துள்ளாரெனவும் அவர் எப்போது வருவார் என அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தலைவர் சிறையில் வாடும்போது கட்சியின் செயலாளர் காத்தான்குடி அமைச்சருடன் நெருங்கிய உறவில் உள்ளதுடன் கட்சி உறுப்பினர்களை குறித்த அமைச்சருக்கு ஆதரவாக செயற்படுமாறு வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதன்கிழமையுடன் தொடர்ச்சியாக ஆயிரம் நாட்களை விளக்கமறியல் நீடிப்பின் மூலம் அவர் கழித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தபோது 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியன்று அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான விளக்கமறியல் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே இன்றுடன் 1000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார் என கூறப்படுகிறது.

இவரது சிறைவாசத்திற்கு பின்னர் இவருடைய கட்சித்தலைமைகள் பல பிரிவுகளாக செயற்படுவதாகவும் கட்சியின் செயலாளர் முஸ்லீம் அமைச்சர் ஒருவருடன் நெருங்கி செயற்படுவதாகவும் குறித்த அமைச்சருக்கு எதிராக தங்களது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்படக் கூடாது என கடுமையான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள தங்களது தலைவருக்கு தெரியாமலே செயலாளர் இவ்வாறு செயற்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க
`