பதினொரு தமிழர்கள் கடத்தல் விவகாரம் ஹெட்டியாராச்சிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! தொடரும் கைதுகள்!

27shares

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 தமிழர்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரியான லெப்டினன் கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு உதவியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்சிறி அமரசிங்க என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரே இன்று புதன்கிழமை இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு – தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 தமிழ்ர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு இன்றைய தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான ஸ்ரீலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரணை செய்த நீதவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை இந்த வழக்கில் ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் விசாரணை தொடர்பிலான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதவான் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை வெள்ளை வான் கடத்தல் வழக்கில் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`