வித்தியா படுகொலை, குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளை!

37shares

புங்குடுதீவு மாணவி வித்தியா படு கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரது ஆலோசனைகளை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மேற்படி கட்டளையை பிறப்பித்தார்.

பூங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா படு கொலை வழக்கில் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் கட்டுக்காவலில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவியின் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவு சுவிஸ்குமார் தப்பிச் சென்றமை தொடர்பாக சட்டமா அதிபரது ஆலோசனைக்கு அமைய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தனியொரு வழக்கினை தாக்கல் செய்திருந்தது.

இவ் வழக்கில் சந்தேகநபர்களாக குற்றச் சம்பவ காலப் பகுதியில் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்ட போதும் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினமும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது லலித் ஜெயசிங்க சார்பில் சட்டத்தரணிகளான சுபாஸ்கரன் மற்றும் வசீமுள் அக்ரம் ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி துஷித் ஜோன்தாஷன் முன்னிலையாகியிருந்தார்.

அதே போன்று குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியும் மன்றில் முன்னிலையாகிருந்தார்.இதன்போது மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு அதிகாரி, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவித்தார். இதனையடுத்து குறித்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றுக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி துஷித் ஜோன்தாசன், குறித்த வழக்கு விசாரணை முடிவடைந்து சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு கடந்த தவணை மன்றுக்கு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது சந்தேகநபரை கைது செய்ய வேண்டும் என கூறுகின்றனர் எனத் தனது வாதத்தை முன்வைத்தார். மேலும் வழக்கில் இரண்டாவது சந்தேகநபர் இல்லாமல் வழக்கினை நடாத்த முடியுமா என்பது தொடர்பாகவும் மன்று ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, குறித்த வழக்கில் சட்டமா அதிபரது ஆலோசனையை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறும், இரண்டாவது சந்தேகநபர் இன்றி வழக்கை நடாத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவிக்கு நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் கட்டளையிட்டார். மேலும் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் வருடம் தை மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க