ரூபாய் வீழ்ச்சி, மஹிந்தவை கடுமையாக சாடிய மங்கள!

24shares

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அரச வருமானமானது, அரச செலவுகளை விட ஒருபோதும் அதிகரிக்கவில்லை என, ஸ்ரீலங்காவின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட நிதியமைச்சர், “கடந்த சில மாதங்களாக காணப்படும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சியை அடுத்து, முழு இலங்கையின் பொருளாதாரமும் பாரிய வீழ்ச்சியை எட்டியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் நாட்டில் கருத்தொன்றை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

அவர்களது ஆட்சி காலத்தில் நாட்டில் காணப்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியை மறந்துவிட்டு நேற்று பிறந்த குழந்தைகள் போல, இரவு – பகல் பாராது பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையை கூற வேண்டும் என்றால் பாரியதொரு பொருளாதார வீழ்ச்சியுடனேயே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நல்லாட்சி அராசாங்கம் நாட்டை பொறுப்பேற்றது.

மஹிந்த ராஜபக்ஷ பாரிய கடன் சுமையொன்றை விட்டுச் சென்றிருந்தார். 1.9 டிரிலியன் ரூபாய் என்ற இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பாரிய கடன்தொகையை இந்த வருடம் நல்லாட்சி அரசாங்கம் திருப்பி செலுத்தவுள்ளது.

அதுமட்டுமன்றி அடுத்துவரும் இரு வருடங்களில் 4 டிரிலியன் ரூபாய் கடன் தொகையை நாங்கள் செலுத்தவுள்ளோம். இவ்வாறான பாரிய கடன்தொகையை செலுத்துவதற்காக மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் நாங்கள் செலுத்தும் கடன் தொகையில் 83 சதவீதமானவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற கடனாகும். இதனை மறந்து விட்டு நாட்டு மக்களை தவறான வழியில் நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் முற்படுகின்றனர்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
`