கூட்டு எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக பசில் மற்றும் கோட்டாவின் முரண்பட்ட கருத்துக்கள்!

12shares

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே தான் பிரேரிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சி செய்கின்றனர். அதனாலேயே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமக்குள் பிரச்சினை இருப்பதாக கதைகளை கட்டி வருகின்றனர்.

எமக்குள் எந்தப் போட்டியும் கிடையாது. என்னிடம் யாராவது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று கேட்டால் பசில் ராஜபக்ஷதான் பொருத்தமானவர் என்றே கூறுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் எந்தவித தீர்மானமும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்படவில்லை. எமது காலமும், நேரமும் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் மாத்திரம் மூன்று ராஜபக்ஷாக்கள் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரவேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`