கிருஷாந்தியுடன் தாயையும் மேலும் இருவரையும் கொன்று புதைத்த கொடூரம்! என்ன நடந்தது அன்று?

664shares

யாழ்.செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தி குமாரசுவாமியின் 22வது நினைவுதினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

செம்மணி படுகொலை நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டிலும், அதன் தலைவர் ஞா. கிஸோர் ஏற்பாட்டிலும், வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , பா.கஜதீபன், கே.சயந்தன், ஆர்.ஜெய்சேகரம், உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

1996 செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை, முற்பகல் 10.30 மணியளவில் கிருஷாந்தி குமாரசுவாமி, க. பொ. த (உயர் தர) இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, நாவற்குழி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

இதை கிருஷாந்தியின் ஊரவர்கள் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். கிருஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாருக்கு மாலையில் ஊரவர் ஒருவர் மூலமாக கிருஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார்.

அவருடன் வெளியில் இறங்கும் போது தனியார்கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த மகன் பிரணவன் (வயது-16, யாழ். சென் ஜோன் கல்லூரி க.பொ. த உயர் தர முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர். இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிருஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சி. ஆரம்பத்தில் "நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவுமில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை" என தர்க்கம் புரிந்துள்ளனர்.

தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிருஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் அம் மூவரையும் பிடித்து, வதைத்து கொன்று விட்டனர்.

அன்று இரவுக்குள்ளேயே இரண்டு பொலிஸாரும், ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் கிருஷாந்தியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுகுட்படுத்தினர்.

இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்தனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று கிருஷாந்தியின் நினைவு நாளில் கிரிசாந்தியைத் தேடிச் சென்ற போது படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் தாய், சகோதரன் மற்றும் உறவினருக்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியாக கிரிசாந்தியின் நினைவாக 40 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதையும் தவறாமல் படிங்க