கவிதைத்தாயின் அன்பு மகனுக்கு இன்று பிறந்தநாள்.!

10shares

நா. முத்துக்குமார் என்ற பெயரை அறிந்திடாத திரை ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது என்றே நாம் எத்தனிக்கலாம். காரணம், கண்ணியம் குறைந்திடாத தனது கவித்துவ வரிகளால் தமிழ் சினிமா துறையையும் அதன் ரசிகர்களையும் நெடுநாட்கள் கட்டியாண்ட காந்தம் முத்துக்குமார் என்ற பெயர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் 12 சூலை 1975ல் பிறந்த முத்துக்குமார் தனது நான்காவது அகவையில் தாயை இழந்தவர். தந்தையிடமிருந்து வாசிப்பு பழக்கம் முத்துகுமாரையும் விட்டுவைக்கவில்லை. விளைவு வீடே நூலகமாகிப்போனது - வாசிப்பே சுவாசமாகிப்போனது.

இயக்குனராக வேண்டுமென திரைப்பட துறைக்குள் நுழைந்தவருக்கு காலம் கையளித்து சென்றது கவிஞன் என்ற பட்டத்தை. ஆம், திரைப்பட பாடல்களில் கவித்துவத்தினை, காதல் உணர்வினை குழைத்து ரசிகர்களை மதிமயங்க செய்த சாகசத்துக்கு சொந்தக்காரராகிப்போனார் முத்துக்குமார்.

கிரீடம் மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ள முத்துக்குமார், சுமார் 1500 படங்களுக்கு மேல் பாடல் எழுதியுள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் உள்ளிட்ட இவரது நூல்கள் பிரபலமானவை.

பறவையே எங்கு இருக்கிறாய்.. பார்க்கவே என்னை அழைக்கிறாய், ஆனந்த யாழை மீட்டுகிறாய், உள்ளிட்ட எண்ணற்ற சாக வரம் பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரரான முத்துக்குமார் பெற்ற விருதுகள் ஏராளம், ஏராளம்.

மாறாத புன்னகை தரித்து

கவிதை மங்கையவளின் கைப்பிடித்து

வீர உலா வந்தவரை

கொள்ளைநோய் மஞ்சள் கமாலையும் கொள்ளை கொண்டுபோனது 14 ஆகத்து 2016ல்.

ஆம், நாங்கள் இறந்திருந்து முத்துக்குமார் பிழைத்திருக்க கூடாதா என இறுதி அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து கூறிய கூற்றே உணர்த்திடும் காலத்தால் ஈடு செய்ய இயலாத ஆளுமை முத்துக்குமார் என்பதனை. நினைவு கூர்வோம் இந்நாளில்.

இதையும் தவறாமல் படிங்க