கவலைக்கிடமான நிலையில் திமுக தலைவர் ; பதற்றத்தில் தமிழகம்.!

15shares

உடல்நலக்குறைவின் காரணமாக தீவிர அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்த திமுக தலைவர் கலைஞருக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மஞ்சள் காமாலைக்குரிய அறிகுறிகள் தென்படுவதாகவும் மருத்துவர்கள் குழு கண்டறிந்ததனை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

அவ்வப்போது கலைஞரின் உடல்நிலையில் சற்றே மாறுதல்கள் ஏற்பட்டாலும், மருத்துவர்கள் குழு அவரை முழுமையாக கண்காணித்துவந்தது. மேலும், கலைஞர் உடல்நலம் குறித்து அவ்வப்போது அறிக்கைகளும் வெளியிட்டுவந்ததன.

இந்த நிலையில், நேற்றைய தினம் சுமார் 6 மணியளவில் மருத்துவமனை சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கலைஞர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அடுத்த 24 மணிநேரங்கள் கழித்தே அவரது உடல்நிலையை பொறுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

கலைஞரின் உறவினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு படையெடுக்க துவங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையும் அடுத்த கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியும் காவேரி மருத்துவமனைக்கு வரவுள்ள காரணத்தினால் பதற்றமான சூழல் தமிழகம் முழுவதும் நிரம்பியுள்ளது.

திமுக உடன்பிறப்புகள் எத்தகைய சூழலிலும் தமது கண்ணியத்தை இழக்க கூடாது, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொள்ள கூடாதென சில தினங்களுக்கு முன்னர் ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க