குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டோருக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்.!

7shares
Image

குட்கா ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் தங்களது சோதனையைத் தொடங்கினர். குட்கா அதிபர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வந்தது.

முதல்கட்டமாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், ஜார்ஜ் வீட்டில் மட்டும் 2வது நாளாக சோதனை நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குட்கா விற்பனையில் ரூ.60 கோடி வரை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது என வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறையும்தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும், சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் அவர்களை செப்டம்பர் 14ம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க