முண்டாசுக் கவிஞன் பாரதி நினைவு நாள் ; பீடுநடைத் தமிழ் உடையோன் அவன்.!

21shares
Image

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பன முண்டாசுக் கவிஞன் பாரதியின் வைர வரிகள். ஆம், பாரதி அவரது கவிதைகளை போலவே வாழ்ந்திட்ட பெருமகன். சமூக அவலங்களை சாடி எழுவனவே மக்களுக்கான கலைகள் என்றானால் பாரதியின் எழுத்துக்கள் நிச்சயம் மக்களுக்கானவைதான்.

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்திட்ட பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன். 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் தாயின் நேசத்தினை உணர்ந்தவர் ஆனார்.

கவிஞர், எழுத்தாளர், விடுதலைப்போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்கள் கொண்ட பாரதியின் அத்தனை பிம்பங்களின் அடிநாதமும் சமூக மாற்றம் தான். தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவர். அவரைப்பின்பற்றி கவி - எழுத்துலகில் பாரதி பரம்பரை உண்டானதெல்லாம் வரலாறு.

எட்டயப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம் என தமிழ்சங்கநாதம் கொட்டிய பாரதியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. தமிழின் - தமிழரின் பெருமையை, தொன்மையை உலகினுக்கு உணர்த்திச்சென்ற பாரதியின் வரலாற்றை இளைய தலைமுறை பயில வேண்டிய - அதன் படி நடந்திட வேண்டிய காலம் இது.

வாயுரைக்க வருகுதில்லை ; வாழி நின்றன் மேன்மையெல்லாம் - பாரதி!

இதையும் தவறாமல் படிங்க