பதவி விலகுங்கள் ; இல்லாவிடில் பதவியிலிருந்து விலக்குங்கள் மிஸ்டர் எடப்பாடி.!

23shares
Image

குற்றம் சுமத்தப்பட்டதன் காரணத்தினாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது, அவர் உண்மையில் தவறிழைத்திருக்கின்றாரா என விசாரணையே முடிவு செய்ய வேண்டும் என தமிழகத்தில் தகித்துக்கொண்டிருக்கிற குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு மேற்கண்ட பதிலை அளித்து திருவாய் மலர்ந்திருக்கிறார் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆம், தமிழகத்தில் குட்கா ஊழல் நடைபெற்றது என சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருமே இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள முக்கிய புள்ளிகள்.

குட்கா உற்பத்தியாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியதாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், மற்றும் விஜயபாஸ்கர் மீது திமுக குற்றச்சாட்டினை முன்வைத்து சிபிஐ விசாரணை கோரிய நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குட்கா தரகன் மாதவராவ் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் இல்லங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 4 பேர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் சுகாதார துறைக்கு அமைச்சராக பதவி வகிக்க கூடிய ஒருவர் தம் மீதான குற்றச்சாட்டினை எதிர்கொண்டு விசாரணையில் தான் நேர்மையானவர் என நிரூபிக்க வேண்டிய வரையில் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டியது தார்மீக கடமை தானே. ஆனால், அதனை விஜயபாஸ்கர் செய்ய துணியாதது ஏன்?

அமைச்சர் பதவியை கொண்டு விசாரணை நீர்த்துப்போக செய்திட முயற்சிக்கலாம் என்பன போன்ற யூகங்களுக்கு இடமளிக்காத வகையில் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும். இல்லாவிடில் தன் அமைச்சரவையில் உள்ள ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வரே பதவி விலகட்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. செய்வாரா எடப்பாடி.

இதையும் தவறாமல் படிங்க