கேரள வெள்ளத்தால் நபர் ஒருவருக்கு மஹிந்திரா நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

71shares
Image

கேரள வெள்ளத்தில் தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்களுக்கு உதவிய நபருக்கு மஹிந்திரா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்ததே.

இயற்கை சீற்றத்தால் மாநிலமே சீரழிந்த போதும், மனம் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்தனர். அவ்வாறு உதவ வந்தவர்களில் ஒருவர் தான் ஜெய்சல் கே.பி. இதேபோன்று ஏராளமான மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினர்.

இவர்கள் சேவையை பாராட்டி மாநில அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கினார்.

மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார்கள். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர்.

இதை பார்த்த ஜெய்சால் என்ற மீனவர் வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்ததும் அந்த மீனவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் மீனவர் ஜெய்சாலின் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் ஜெய்சலுக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவரிடம் வழங்கினார்.

இதுபற்றி மீனவர் ஜெய்சால் கூறும்போது நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.

மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் மராசோ கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எனும் துவக்க விலையில் கிடைக்கும் மராசோ தற்சமயம் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க