அடித்து நொறுக்கப்பட்ட நக்கீரன் அலுவலகம் ; நடந்தது என்ன?

66shares
Image

தமிழில் வெளியாகும் முன்னணி வார இதழ்களுள் ஒன்றும், புலனாய்வு செய்திகளுக்கு பெயர் பெற்றதுமான நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், மாணவிகளை தவறாக பயன்படுத்திட முயன்ற விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தொடர்பு பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டதன் காரணமாக பிரிவு 124ன் கீழ் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். ஆனால், குறிப்பிட்ட பிரிவின் கீழ் கைது செய்ய எந்த ஓர் முகாந்திரமும் இல்லையென கூறி அவரை விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்.

பிரிவு 124ன் கீழ் பத்திரிகை ஆசிரியர் ஒருவரை கைது செய்வதென்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமென நேரடியாக நீதிமன்றத்திற்கே சென்று வலியுறுத்தினார் இந்து குழும தலைவர் என்.ராம். கோபாலை கைது செய்ததற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தரப்பிலிருந்தும் மிக கடுமையான கண்டனங்கள் அரசுக்கும், ஆளுநருக்கும் எதிராக குவிந்த வண்ணமிருந்தன.

அப்படியான நக்கீரன் வெளிக்கொணர்ந்த பகீர் உண்மைகள் ஏராளம். அதன் காரணமாக ஆளும் தரப்புகளின் கடுமையான எதிர்ப்புகளையும் நக்கீரன் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் கடந்த 2012 ஆம் நக்கீரன் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம்.

கடந்த 2012 ஜனவரி 8 ஆம் தேதி, நக்கீரனில் ஜெயலலிதா குறித்து வெளியான கட்டுரை ஒன்றிற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம் அதிமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது. அதன் பதிப்புகள் தீக்கரையாக்கப்பட்டன. ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால், நக்கீரன் அலுவலகத்தினை தாக்கியவர்களை கண்டிக்கவோ கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கவோ முயலவில்லை ஜெயலலிதா. மாறாக ஜெயாவின் அறிவுறுத்தல் படியே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது நக்கீரன் மற்றும் அப்போதைய திமுக தலைவர் கலைஞரின் குற்றச்சாட்டாக இருந்தது.

இதையும் தவறாமல் படிங்க
`