கீழடி 4 ஆம் கட்ட ஆய்வில் தங்கம் உட்பட 7,000 பொருட்கள் கிடைத்துள்ளன - அரசு அறிக்கை.!

46shares
Image

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், 4 ஆம் கட்ட கிடைத்த பொருட்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வை தொடர உத்தரவிடக்கோரி, கனிமொழிமதி என்பவர், மதுரையில் உள்ள ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள், சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கீழடி ஆய்வு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்று முன்னர் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், " கீழடியில் 4வது கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தி முடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. 4வது கட்ட அகழாய்வில் கீழடியில் இருந்து பழமையான 7,000 பொருட்கள் கிடைத்தன. பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களை, அமெரிக்காவிற்கு ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும்.

கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களின் காலத்தை நிர்ணயிக்க இந்த ஆய்வு பயன்படும். கீழடியில் 5வது கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், 5வது கட்ட, அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கிடைத்த விவரங்களை ஹைகோர்ட்டில் அறிக்கையாக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

கீழடி ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு அதை முதலில் ஆரம்பித்த, அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற ஆய்வாளரை கொண்டு தயாரிக்கவிடாமல் பெங்களூரிலுள்ள ஆய்வாளர்களை கொண்டு தயாரிக்க மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 5வது கட்ட அகழாய்வுக்கு மாநில அரசு, அனுமதி கேட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க