சக ராணுவ வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா ஜெகன் ; வெளியாகும் உண்மைகள்.!

73shares
Image

தக்கலை அருகே பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறப்பட்டது.

பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று காலை குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெகனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள், உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது, அவரது மரணம், வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர்.

சக ராணுவ வீர‌ருடன் ஏற்பட்ட மோதலில் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட வீர‌ரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் ஜெகனின் உறவினர்கள்.

இதையும் தவறாமல் படிங்க