நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்புள்ளது உறுதி - ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

29shares
Image

பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதனை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவந்ததன் காரணத்தினால், சில தினங்களுக்கு முன்னதாக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது பிரிவு 124ன் கீழ் (ஆளுநர் / குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பது) என்ற பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறை.

ஆளுநர் மாளிகை அரசுக்கு கொடுத்த அடிப்படையிலேயே இந்த கைது நடந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரிவு 124ன் கீழ் கைது செய்தது செல்லாது எனக்கூறி அன்றைய தினமே கோபாலை விடுவித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில், சென்னை பெரியார் திடலில் "பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்" எனும் தலைப்பில் அரங்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பத்திரிகையாளர் கோபாலின் பணிகளுக்காக அவர் பாராட்டப்பட்டார்.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஸ்டாலின், " ஜெயலலிதா மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக அவரை ஹிட்லராக சித்தரித்தவர் கோபால். இன்னும் எண்ணற்ற செய்திகளுக்காக எத்தனையோ வழக்குகள், சிறை, பொடா உள்ளிட்ட எல்லாவற்றையும் பார்த்தவர். அவரா இந்த கோமாளி ( ஆளுநர்), எடுபிடி ( பழனிசாமி) உள்ளிட்டோரை கண்டு அஞ்சப்போகிறார்" என பேசினார்.

மேலும், " நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் முந்திக்கொண்டு விசாரணை கமிஷன் அமைத்தது ஏன்? இன்னமும் அந்த நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுப்பது ஏன்? அவர் வெளியில் வந்தால் உண்மைகளை வெளியிட்டுவிடுவார் என்பதாலா. நான் கூறுகிறேன் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்புள்ளது" என ஆவேசமாக பேசினார்.

இதையும் தவறாமல் படிங்க