பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்த காரணத்தினால், சில தினங்களுக்கு முன்னதாக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது பிரிவு 124ன் கீழ் (ஆளுநர் / குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பது) என்ற பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறை.
ஆளுநர் மாளிகை அரசுக்கு கொடுத்த அடிப்படையிலேயே இந்த கைது நடந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரிவு 124ன் கீழ் கைது செய்தது செல்லாது எனக்கூறி அன்றைய தினமே கோபாலை விடுவித்தது நீதிமன்றம்.
நக்கீரன் கோபல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அரசியல் கட்சிகள், பத்திரிகை துறையினர் ஓரணியில் நின்றதை அவ்வளவாக ரசிக்காத ஆளுநர் மாளிகை, நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என தற்போது விளக்கமளித்துள்ளதுடன், நிர்மலா தேவி விவகாரம் குறித்தும் வாய் திறந்துள்ளது.
அதில், "கடந்த ஓராண்டில் நிர்மலா தேவியை ஆளுநர் சந்தித்ததே இல்லை எனவும், அவர் ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை ஆதாரங்களே இல்லாமல், தொடர்ச்சியாக சேற்றை வாரி இறைத்ததால்தான், சட்டப்படியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது, மரியாதைக்குரிய நபர்களும் நக்கீரனுக்கு ஆதரவளித்தது வருத்தமளிப்பதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.