ஆக.. செல்லாக்காசு மு.க ஸ்டாலின் ; மிமிக்ரி செய்து ஸ்டாலினை விமர்சித்த தினகரன்.!

18shares

திருவாரூர் இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது முதலே ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சியே கஜா புயல் நிவாரண பணிகள் உள்ளிட்ட சில காரணங்களைக் கூறி தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தை நாடியாக தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன்.

தினகரனின் விமர்சனத்திற்கு பதிலளித்த ஸ்டாலினோ, எண்ணற்ற வழக்குகளை எதிர்கொண்டுவரும், சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனையளிக்கப்பட்டு சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிற உறவினர்களைப் பெற்ற தினகரன் தான் தேர்தலைக் கண்டு அஞ்ச வேண்டுமே தவிர நாங்கள் அல்ல என தெரிவித்திருந்தார்.

இதற்கு தினகரன் தரப்பிலும் பதிலளிக்கப்பட, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயா மரணத்திற்கு காரணமானவர்கள் எங்கிருந்தாலும் இழுத்துவரப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்கள் என தினகரன் மீது ஆவேசம் காட்டியிருந்தது திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி.

இந்நிலையில், நேற்றைய தினம் தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தினகரன், "இடைத்தேர்தலை கண்டு ஆளும்கட்சியான அதிமுக அஞ்சுவது சரி, திமுக அஞ்சுவதற்கு காரணம் என்னவென்றால் அக்கட்சியின் தலைவர் ஓர் செல்லாக்காசு. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது கட்சி டெபாசிட் இழக்கும் அளவுக்கு செயல்பட்ட செயல்வீரர்" என ஸ்டாலின் போன்று மிமிக்ரி செய்து விமர்சித்தார்.

ஸ்டாலின் - தினகரனுக்கு இடையேயான வார்த்தை மோதல்களால் தகித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம்.

இதையும் தவறாமல் படிங்க