அதிமுக குறித்து பேசுவதற்கு நீங்கள் யார் ; பாஜக மீது பாயும் தம்பிதுரை.!

12shares

எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அணி சேர்க்கைகள் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்றுவரக்கூடிய சூழலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், இரண்டு இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக, இஸ்லாமிய கட்சிகள் ஆகியவை இடம்பெறும் என கருதப்படும் சூழலில், ஆளும் கட்சியான அதிமுக பாஜகவுடனேயே அணி சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயாவின் மறைவு தொடங்கி அதிமுகவில் நடைபெற்று வரக்கூடிய மாற்றங்கள் அனைத்திற்கும் மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவே காரணம். அவர்களின் வழிகாட்டுதலின் படியே தமிழக ஆட்சி இயங்குகிறதென அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை வெளியிட்டுவரும் சூழலில், பாஜகவுடனான கூட்டணியை அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விரும்பவில்லை என தெரிகிறது.

அதன் காரணமாகத்தான் சில தினங்களுக்கு முன்னர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் உயர்சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் மசோதாவினை இது சமூக நீதி தத்துவத்திற்கே எதிரானது என எதிர்த்து பேசினார்.

தம்பிதுரையின் இத்தகைய பேச்சுக்களால் அதிருப்தியடைந்த பாஜக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேச தம்பிதுரை யார் என கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணனின் கேள்விக்கு பதிலளித்துள்ள தம்பிதுரை, "நான் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர். அக்கட்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை துணை சபாநாயகர். எங்கள் கட்சியின் கூட்டணி குறித்து இவர்களுக்கு (பாஜக) யார் அதிகாரம் கொடுத்தது?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க