கிராமங்களையே பார்க்காதவர்கள்.. ஊர் ஊராக சுற்றுகிறார்கள் - முதல்வர் பழனிசாமி காட்டம்.!

16shares

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக திமுக சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென கூறி, அவரே சில ஊராட்சி சபை கூட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார். அவ்வாறு நடத்தப்படும் கூட்டங்களில் மாநில - மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயற்பாடுகளை மக்களிடம் எடுத்துக்கூறி, பாஜகவும், அதிமுகவும் வீழ்த்தப்பட வேண்டிய கட்சிகள் என்ற கருத்துருவாக்கத்தினை மக்களிடம் உண்டாகச்செய்திட வேண்டுமென்பதுதான் திமுகவின் முதன்மையான நோக்கம்.

அதே சமயம், கடந்த காலங்களில் திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்த சமயத்தில், ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்த சமயத்தில் கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டிருந்தால் அதனை பாராட்டலாம். ஆனால், தேர்தல் என்ற அரங்கேற்றத்திற்காக இப்படியான வேடமிடுவது சரிதானா? என திமுகவின் சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் அரசியல் எதிர் முகாம்களில் உள்ளோர்.

இந்த நிலையில், இன்று மாற்று கட்சியில் உள்ளவர்கள் அதிமுகவில் இணையும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, "கிராமத்தையே பார்க்காதவர்கள், கிராமத்து மக்களின் இன்னல்களை அறியாதவர்கள் தற்போது ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இதனை ஆட்சி பொறுப்பில் இருந்த போது செய்திட ஸ்டாலின் ஏன் முயலவில்லை. இவர்கள் அரசியலுக்காக எதனை வேண்டுமானாலும் செய்வார்கள்" என ஸ்டாலினை காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க