உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு துரதிர்ஷ்டவசமானது - ஜோதிமணி.!

41shares

உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள்) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்க முயல்வதென்பது காலப்போக்கில் இடஒதுக்கீடு என்ற தத்துவத்தினையே நீர்த்துபோகச்செய்திடும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஜோதிமணி.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "உயர்சாதியினருக்கு பொருளாதாரஅடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ்கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல்சாசனத்திற்கு முரணானது" என தெரிவித்துள்ளார்.

மேலும், "உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இடஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்திற்கு 8லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே பொருளாதார அடிப்படியிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்?" எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க