மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு.!

11shares

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததனை தொடர்ந்து தமிழகத்தில் அதிருப்தி கிளம்பத்தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு எவ்வாறு மேகேதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி வழங்கலாம் என கேள்வியெழுப்பின திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

ஆளும் அதிமுகவோ நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடரின் போது மேற்கண்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி இரு அவைகளையும் நடைபெறவிடாமல் முடக்கியது. உச்ச நீதிமன்றத்திலும் மத்திய, கர்நாடக அரசுகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர்ந்தது.

இந்த நிலையில், மேகதாது விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. அதில், "மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தராத நிலையில் தமிழக அரசின் அவமதிப்பு வழக்கை உரிய அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் யார் நடந்துகொண்டாலும் அது மத்திய அரசே ஆனாலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க