கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதா? லயோலாவை எச்சரிக்கும் ராமதாஸ்.!

10shares

சென்னை, லயோலா கல்லூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வீதி விருது திருவிழாவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் தேசிய - இந்து மத குறியீடுகள் தவறாக சித்தரிக்கப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் சமூக - அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், மேற்காண் கண்காட்சியை ஒருங்கிணைத்த லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்திட வேண்டும், அந்த கண்காட்சியை திறந்துவைத்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக காட்டமான எதிர்ப்பினை வெளியிட்டுவருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்கப்பட்ட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதற்காக பாரத மாதாவையும், இந்து மத சின்னங்களையும் தான் பயன்படுத்துவார்களா? ஏன் இஸ்லாமிய, கிறித்தவ மத சின்னங்களை பயன்படுத்த வேண்டியது தானே என சீற்றம் காட்டி வருகின்றனர் இந்து சமயம் சார்ந்தவர்கள்.

இந்த நிலையில், மேற்காண் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது. மாறாக பகையைத் தான் வளர்க்கும். கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கலை என்ற பெயரில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் எந்த நிகழ்வையும் இனி அரசு அனுமதிக்கக்கூடாது" என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சபரிமலை கோவில் விவகாரத்தில் அரசு மற்றும் நீதிமன்றங்களின் தலையீடு தேவையற்றது என பாமக தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க