மத்திய அமைச்சராகிறார் திருமாவளவன்.. முழு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ்.!

914shares

உலக மாமேதைகளுள் ஒருவராம் புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் ஈந்தளித்த அரசியல் சாசனத்தின் வழி அல்லாமல் முழுக்க முழுக்க இந்துத்துவ சனாதன கோட்பாடுகளின் வழி சர்வாதிகார போக்குடன் செயல்பட்டுவரக்கூடிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. அதற்காக நாடு முழுவதுமுள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் காங்கிரஸுடன் ஓரணியில் திரள வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்.

மேற்கண்ட அறைகூவலையே முன்னிறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திருச்சியில் சனாதன சக்திகளிடமிருந்து தேசம் காப்போம் என்ற முழக்கத்தினை முன்வைத்து மிக பிரமாண்டமான மாநாட்டினையும் நடத்தி முடித்திருக்கிறார் திருமா. மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்துகொள்வதாக இருந்து அது இயலாமல் போன காரணத்தினால் அவரது சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.க வீரமணி, வைகோ,இடதுசாரி கட்சிகளின் தேசிய மாநில தலைவர்கள், இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் என பெரும் தலைவர்களின் பட்டாளமே கலந்துகொண்டது.

மாநாட்டில் பெருந்திரளாக கூடியிருந்த மக்களுக்கு முன்பாக திருமாவை தென் திசையில் பிறந்திட்ட அம்பேத்கர் என புகழ்ந்த கொடிக்குனில் சுரேஷ், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் எம்.பியாக வெற்றி பெற்று வந்தால் மத்திய அமைச்சராக்க காங்கிரஸ் ஆதரவளிக்கும் என தெரிவித்தது, தமிழக அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராகுல் சார்பாக திருமாவின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த தேசிய தலைவர் ஒருவர் இப்படியான வார்த்தைகளை உதிர்க்க காரணம், காங்கிரஸ் திருமாவை ஓர் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக கருதுகிறது. காரணம், பாஜக, காங்கிரஸ் தவிர்த்த மூன்றாவது அணி அமைக்க முயலும் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில், டெல்லியில் ராகுலை சந்தித்து எங்களது முழு ஆதரவு உங்களுக்கு. திமுக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயன்றாலும் விசிக உங்களோடு இருக்கும். மதச்சார்பற்ற பாஜகவுக்கு எதிரான சக்திகள் பல அணிகளாக பிரிந்திட கூடாது என்பதுதான் எங்கள் பார்வை என தெரிவித்து திமுகவுக்கே கிலி கிளப்பியவர்.

நாடு முழுவதும் அறியப்பட்ட தலித் ஆளுமைகளாக ராம்தாஸ் அத்வாலே, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பாஜகவுடன் இணைந்து பதவி சுகங்களை அனுபவித்து வரும் வேளையிலும், அப்படியான வாய்ப்புகள் தமக்கு வந்தபோதும் அதனை மறுத்து ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக மூர்க்கமாக செயல்பட்டு வரும் திருமாவை ஈழம் உள்ளிட்டவற்றில் மாற்றுக்கருத்து இருப்பினும் ஓர் இயல்பான, நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக கருதுகிறது காங்கிரஸ் தலைமை. அதன் காரணத்தினாலேயே அவரை அமைச்சரவையில் சேர்க்க முயலலாம் என கருத்து தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதையும் தவறாமல் படிங்க