தமிழகத்தை வஞ்சிக்கிறது மோடி அரசு ; நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தம்பிதுரை.!

10shares

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட சலுகை திட்டங்களும், கவர்ச்சி வாக்குறுதிகளும் இடம்பெற்றிருந்தன.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டே மோடி அரசு இப்படியான இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இது பட்ஜெட்டா ; தேர்தல் அறிக்கையா என தொடர்ச்சியாக நடுவண் அரசை விமர்சித்துவந்தன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இந்த நிலையில், மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் மக்களவை துணைசபாநாயகரான தம்பிதுரை.

"மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கை போல் உள்ளது என தொடங்கிய தம்பிதுரை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நடுவண் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க எடுத்த நடவடிக்கைதான் என்ன? பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் என்கிறார்கள் ஆனால், சீன பொருட்கள் தான் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ளன" என மோடி அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டினார்.

மேலும்,"தானே, வர்தா, ஓகி என பல்வேறு புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; சுமார் 10000 கோடி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டியுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை நடுவண் அரசு வழங்கிடவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?" என தமது உரை முழுவதும் மோடி அரசுக்கு எதிராக கொந்தளிப்பினை வெளிப்படுத்தினார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக - அதிமுக கூட்டணி அமைக்கக்கூடுமென கருதப்படும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அதிரடிக்காட்டிவருகிறார்.

இதையும் தவறாமல் படிங்க